Translate

Wednesday, 25 April 2012

தம்புள்ளையில் அரசின் காடைத்தனம் – முஸ்லீம் தேசிய இனத்தின் மீதான வன்முறை : சபா நாவலன்


இலங்கைத் தீவில் முதலாவது தேசிய இனங்களுக்கு எதிரான வன்முறை 1915 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல். பிரித்தானிய ஏகாதிபத்தியம் திட்டமிட்டு உருவாக்கிய தேசிய இன முரண்பாட்டின் பேரினவாத முகவராகச் செயற்பட்ட அனகாரிக தர்மபால எல்லா சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் எதிரான “பௌத்த தத்துவவியலை” வளர்த்தவர். முஸ்லிம்களைக் கடலில் தள்ளிக் கொன்றுவிட வேண்டும் என்று சூழுரைத்தவர். தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்களுக்கு எதிரான முதலாவது வன்முறைக்கு தமிழ்ப் பேசும் இந்துக்களும் மானசீக ஆதரவை வழங்கிய கறைபடிந்த வரலாற்று பக்கங்கள் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் நீண்ட உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ச்சியாக அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்ட பேரினவாத அரசுகள் முஸ்லீம்களுக்கும் ஏனைய தமிழ்ப்பேசும் தேசிய இனத்தவர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை கூர்மைப்படுத்தின. அதனூடாக அதிகாரவர்க்கத்தின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டன. காலனி ஆதிக்கத்தின் பின்னர் உருவான ஒவ்வொரு பாராளுமன்ற அரசியல்வாதிக்குள்ளும் ஒவ்வொரு அனகாரிக தர்மபால மறைந்திருந்ததை இன்று வரைக்கும் காணலாம்.

“இலங்கை என்பது பௌத்தர்களின் புனித நிலம், பௌத்த மதத்திற்கும் அதன் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துள்ள சிங்கள தேசிய இனத்திற்கும் சேவைசெய்யும் மனப்பான்மையோடு அவர்களுக்குத் இடையூறு விளைவிக்காமல் ஏனைய தேசிய இனங்கள் இலங்கையில் வாழலாம்” என்பதே பௌத்த மேலாதிக்க வாதத்தின் அடிப்படை மனோபாவம் என்கிறார் அமரிக்க ஆய்வாளட் நீல் வோத்தா.
அனகாரிக்க தர்மபால நிலப்பிரபுத்துவத்தையும் அன்னிய மூலதனத்தையும் தக்கவைத்துக்கொள்ளும் வகையான பௌத்த மற்றும் சிங்கள மேலாதிக்கத்தை சிங்களப் பகுதிகள் எங்கும் நிறுவினார். பிரித்தானியர்களுக்கும் காலனி ஆதிக்கத்திற்கும் எதிராக முழக்கங்களை முன்வைத்து சிங்கள பெருந்தேசிய வெறியைப் பௌத்ததின் புனிதத்தோடு இணைத்து வளர்த்தார். மறுபுறத்தில் ஏகாதிபத்தியங்கள் அவரின் நடவடிக்கைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகளை வழங்கின.
இதன் மறுபுறத்தில் அனகாரிக தர்மபாலவின் தமிழ் வடிவமாக ஆறுமுக நாவலர் உருவாக்கப்பட்டார். சாதீயத்தை மறு நிர்மாணம் செய்வதிலிருந்து ஆரம்பித்த ஆறுமுக நாவலர், இந்தியப் பார்பனீயத்திற்கு நிகராக யாழ்ப்பாண வேளாள மேலாதிக்க வாதத்தை உருவாக்கினார். பிரித்தானிய காலனீயத்த்திற்கு எதிரான முழக்கங்களை முன்வைத்த நாவலரும் கூட அதே ஏகாதிபத்தியத்தின் முழுமையான ஆதரவுடனேயே தமிழ் குறுந்தேசிய வாதத்தின் நச்சு வேர்களைப் படரவிட்டார்.
யாழ்ப்ப்பாண வேளாள மேலாத்திக்க வாதத்தின் நச்சுக் கலவையைக் கொண்ட தமிழ்க் குறுந்தேசிய வாதமும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதமும்
முஸ்லீம்களுக்கு எதிரான சிந்தனையைச் சமூகத்துள் செலுத்தின. இஸ்லாமியர்களுக்கு எதிராக இவை பல சந்தர்பங்களில் கைகோர்த்துக்கொண்டன.
ஏகாதிபத்தியங்களும், பேரினவாதமும் நிலை கொள்வதற்கான ஆயுதமாக இந்த முரண்பாடு பயன்பட்டது. ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்பட்ட தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களும் முஸ்லீம்கள் மீதான இனச்சுத்திகரிப்பை நடத்துகின்ற எல்லைவரை சென்றன.
மறுபுறத்தில் முஸ்லீம்களைப் பயனபடுத்திக்கொண்ட பேரினவாத அரசுகள் வடகிழக்குத் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களை அவர்களை கொண்டே ஆக்கிரமித்தது.
தேசிய இனங்களிடையேயான மோதல்கள், பேருந்தேசிய ஒடுக்குமுறை என்று இலங்கைத் தீவு அவலத்தின் விழிம்பிற்குள் இழுத்துவரப்பட்டது. மக்கள் மோதிக்கொள்ள அதிகாரவர்க்கம் அமைதியாகப் வாழ்ந்து, மகிழ்ந்து, திழைத்துக் கொழுத்தது.
முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடந்தேறிய பின்னர், பல நீண்ட வருடங்களின் பின்னர் முஸ்லீம்கள் தம்மீதான ஒடுக்குமுறை நேரடியாக அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். அரச படைகளின் துணையோடு அமைதியைப் போதிப்பதாக பொய்சொல்லும் பௌத்த துறவிகளின் ரவுடித்தனம் தம்புளையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
தம்புள்ளையில் பல வருடங்கள் பழமையான பள்ளிவாசலை அகற்றுமாறு திமிர்த்தனத்தோடு உத்தரவிட்டிருக்கிறது இனப்படுகொலை அரசு.

பௌத்த புனித பூமி என்பதால் ஏனைய மதங்களுக்கு இடம் கிடையாது என்கிறது இலங்கை அரசு. மகிந்த குடும்பம் ஒவ்வொரு மேடையிலும் முழக்கமிடும் ”இலங்கை அனைவருக்குமான நாடு” என்பதன் உள்ளர்த்தம் ஆக்கிரமிப்பு என்பதை இன்னுமொரு தடவை நிறுவியிருக்கிறது.
தமிழ்ப் பேசும் முஸ்லீம்களும் இலங்கையில் சுயநிர்ணய உரிமைகொண்ட தேசிய இனம் என்பதை இலங்கை அரசு அவர்களுக்குச் சொல்லிகொடுத்திருக்கிறது. முஸ்லீம்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்பதையும் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுமே அவர்களது நண்பர்கள் என்பதை பாடப்புத்தகங்கள் இல்லாமலேயே கற்பித்திருக்கிறது.
முஸ்லீம்கள் மீதான இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து குறித்துக்காட்டத்தக்க குரல்கள் வெளிவரவில்லை.
தம்புள்ளையில் பள்ளிவாசலுக்கு பௌத்த சிங்களப் பேரினவாதிகள் மிரண்டு எழுந்ததைப் போலவே, நல்லூரின் மூலையில் பள்ளிவாசல் உருவானால் கொதித்தெழும் அதே குறுந்தேசிய மனோ நிலையிலேயே அவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள் என்பதை எழுதாமல் சொல்கிறார்கள்.
இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற முஸ்லீம் தேசிய இனத்திற்கும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையேயும் வேறுபாடுகள் உள்ளன. முரண்பாடுகளை அங்கீகரிப்பதற்கும் அவற்றிலிருந்து ஒற்றுமையை வளர்ப்பதற்கும் புதிய சமூகம் கற்றுக்கொள்ளும். இந்த ஒற்றுமையிலிருந்தே இலங்கைப் பாசிச அரசிற்கு எதிரான போராட்டம் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவோடு வெற்றிபெறும்.

No comments:

Post a Comment