Translate

Sunday, 1 April 2012

இலங்காபுரி வேந்தன் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்ற திருத்தலம்


இலங்காபுரி வேந்தன் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்ற திருத்தலம்
ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் இந்துக்களின் புனிதத்தலம் திருக்கோணேஸ்வரம்.

தெட்சண கைலாயம் என்றும் அடிக்கொரு லிங்கம் அமைந்திருக்கும் சிவபூமி என்றும் இலங்காபுரி வேந்தன் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்ற திருத்தலம் என்றும் பெருமை பெற்ற அப்புண்ணிய ஷேத்திரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச்சிறப்புடையது. 

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருஞானசம்மந்தமூர்த்தி நாயனாரால் தேவாரத் திருப்பதிகமும் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாத சுவாமிகளினால் திருப்புகழும் அருளப்பெற்ற கீர்த்தியும் வரலாற்றுப் பெருமையும் மிக்க இத்திருத்தலத்தில் 33 அடி உயரமான தியான நிலை சிவபெருமானின் சிலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை (15/12/2011) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இச்சிலைக்கு எதிரே தாமரைப் பொய்கையும், லிங்கம், நந்தி, குறுமுனி, அகத்தியர் ஆகியோரின் சிலைகளும் அமைக்கப்பட்டு அழகுக்கு மெருகூட்டுகின்றன.

இது தவிர இராவணன் வெட்டுக்கு அருகாமையில் புதியதொரு தியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. இத் தியான மண்டபத்தில் கடலுக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட லிங்கம் ஒன்றும், அகழியொன்று வெட்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட லக்ஷ்மி சமேத நாராயண விக்கிரகமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. விக்கிரகங்கள் கிடைக்கப்பெற்றபோது ஏற்பட்ட சேதம் காரணமாக இவைகள் பிரதான கோயிலில் பிரதிஷ்டை செய்யவில்லை. இது தவிர கோணேஸ்வர ஆலயத்தைப் புனர் நிர்மாண திருப்பணி செய்து வழிபட்ட சோழ மன்னன் குளக்கோட்ட மகாராஜாவின் சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றில் இன்றைய நிகழ்வு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.

இச்சிலைகளை அழகுற நேர்த்தியாக வடிவமைத்து நிர்மாணித்தவர் தமிழ்நாடு காரைக்காலைச் சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமாள் விஐயன் ஆவார். அவருக்கு சிலைதிறப்பு விழாவில் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினரால் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


நன்றி: தமிழ் மிரர்

No comments:

Post a Comment