இலங்கை சீனாவுடன் நெருக்கமாகி விடும் என்ற பயம் காரணத்தினால் தான் இந்தியக்குழு ஆதரவு தேடி இலங்கை வருகின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடன் சீனாவின் உறவுகள் மிக நெருக்கமடைந்துவருகின்ற நிலையில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்த விடும் என்ற அச்சம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் தமது உறவுகளையும் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இங்கு வருகைதரவுள்ளனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜெனீவாவில் எமக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளித்து வாக்களித்தமையினால் இந்தியாவிற்கு அச்சம் உருவாகியுள்ளது.
ஏனெனில் ஆதரவாக வாக்களித்தமையால் தம்மை விட இலங்கை அரசு சீனாவுடன் நெருங்கிய உறவினை வளர்த்துக் கொள்ளக் கூடும். அல்லது சீனாவினுடைய இராணுவத்தளம் இங்கு அமைக்கப்படலாம் இவ்வாறான காரணங்களினால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலாகவே அமையும். இவற்றைக் அடிப்படையாகக் கொண்டே இந்தியக் குழுவினை மத்திய அரசு அனுப்பிவைக்கவுள்ளது.
இலங்கையில் தமிழீழம் என்பது உருவாகினால் அது தமிழ் நாடு பிரிவதற்கும் தனித் தமிழ் நாடு உருவாகுவதற்கும் ஏதுவாக அமையும் என்பதனால் மத்திய அரசாங்கம் தற்போது இலங்கைப் பிரச்சினை தொடர்பில் “அடக்கி வாசிக்க’ ஆரம்பித்துள்ளது. கிழக்கு மாகாணம், வடமத்திய, சப்ரகமுக மாகாண சபைகளைக் கலைத்து தேர்தல்களை அரசாங்கம் நடத்தவுள்ளது.
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் முஸ்லிம் அரசியல் கட்சியொன்றே வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பெற்றும் இதனால் பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளையடுத்து இந்தியாவும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை பரவலாக்கும் தீர்வுத்திட்டங்களைக் கைவிட்டு மாவட்டங்கள் ரீதியில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment