கொழும்பு, ஏப். 25: இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அரசும் எதிர்க்கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு விஷயத்தில் "தாமதப்படுத்தும் முயற்சிகளை' அதிபர் ராஜபட்ச மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தம் குறித்து தனது நிலையை அரசு அவ்வப்போது மாற்றி வருவதாகவும் அந்தக் கட்சி குறைகூறியிருக்கிறது.
இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் அண்மையில் இலங்கை வந்திருந்தனர். இதையடுத்து, அதிகாரப் பகிர்வு விவாதம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக, ""தாங்கள் முன்வைக்கும் அரசியல் தீர்வு என்னவென்பதை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.
முதலில் 13-வது சட்டத் திருத்தம் பற்றிப் பேசினார்கள். பின்னர் நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்க முடிவு செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் தீர்வைத் தாமதப்படுத்தும் உத்திகள்'' என்று கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்தநாயகவின் பேச்சுக்கு பதிலளித்த அரசின் செய்தித் தொடர்பாளர் லட்சுமண் யாப்பா அபேவர்த்தன, ""தாமதத்துக்குக் காரணம் எதிர்க்கட்சிகள்தான். நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இடம்பெறும் தங்களது பிரதிநிதிகள் பெயர்களைத் தெரிவிக்கும்படி அவர்களைக் கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள்தான் தரவில்லை'' என்றார்.
""நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் சேர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சேர்த்துதான்.
அவர்கள் கூறிக் கொள்வதைப் போல, உண்மையிலேயே தமிழர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இருக்குமென்றால் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற வேண்டும்'' என்றும் அபேவர்த்தன கூறியுள்ளார்.
இலங்கை வந்திருந்த எம்.பி.க்கள் குழுவிடம், 13-வது திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ராஜபட்ச உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அரசு தரப்பில் இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment