அரசின் காலங்கடத்தும் நடவடிக்கைக்கு கூட்டமைப்பு ஒத்துழைக்கக்கூடாது – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்!
அரசின் காலங்கடத்தும் நடவடிக்கைக்கு கூட்டமைப்பு ஒத்துழைக்கக்கூடாது – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்!
அரசியல் தீர்வுக்கான செயன்முறை எனும் அரசின் காலம் தாழ்த்தும், மற்றும் சர்வதேசத்திடம் நேரத்தை கடத்தும் முயற்சியில் தாம் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் ஆக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட பரமலிங்கம் தர்சானந் 18-05-2012அன்று காலை 8.15 மணியளவில் யாழ்ப்பாணம் கலட்டி சந்திக்கருமாமையில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரும்பு கம்பிகளால் கொடுரமாக தாக்கப்பட்டார். கடந்த ஒக்டோபர் 2011 இல் அப்போதைய மாணவர் ஒன்றியத்தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இதே மாதிரியாக தாக்கப்பட்டமையும் நினைவு கூறத்தக்கது. இத்தாக்குதலை நடத்தியோர் பற்றிய விசாரணைகளில் எதுவித முன்னேற்றமும் இல்லை, இராணுவ காவலரணிலிருந்து 100 மீற்றருக்கு உட்பட்டு இவ்விருவரும் தாக்கப்பட்டமையானது இன்று யாழ்பாணத்திலும் பொதுவாக தமிழர் தாயகமெங்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு நிலவும் பயங்கரமான சூழலை உணர்த்தி நிற்கின்றது. தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி பேசுவதற்கும் போரில் இறந்த மக்களை நினைவு கூருவதற்கும் தமிழரது அரசியல் சமூக பிரச்சினைகளை பற்றி சிந்தித்து செயற்படுத்துவதுக்குமான வெளி போருக்கு பிந்திய சூழலில் முற்றுமுழுதாக இல்லாமல் செய்யும் நோக்கத்திலேயே வடக்கு கிழக்கு எங்கனும் அதியுயர் இராணுவ பிரசன்னத்தை சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாகப் பேணி வருகின்றது. என்பது உணரப்பட வேண்டியது முக்கியமானதாகும். மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் உட்பட தமிழரது பிரச்சினைகள் தொடர்பாக செயற்பட்டு வரும் தமிழ் சிவில் சமுகப் பிரதநிதிகளுக்கெதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் நாம் இந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நீண்டகாலமாகத் தமிழ் மக்களின் பேசும் சக்தியாக இருந்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. யாழ் பல்கலைக்கழகம் தமிழ்த் தேசிய செயற்பாடுகளுக்கு அளித்துவரும் இந்த வெளியை குறுக்குவதற்காக பல்வேறுபட்ட தலையீடுகள் இன்று செய்யப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக பேரவைக்கான வெளியக பிரதிநிதிகள், துணைவேந்தர் பதவிக்கான நியமனம் ஆகியவற்றை அரசியல் மயப்படுத்தியுள்ளமை, மாணவர்கள் மத்தியில் இராணுவ உளவாளிகளின் ஊடுருவலை செய்வதற்கான முயற்சிகள் கல்விசாரா ஊழியர் நியமனங்களில் அரசின் சார்ந்தோரால் பிரேரிக்கப்படுவோர் நியமிக்கபடுதல் போன்றவற்றை உதாரணங்களாக கொள்ளலாம். இவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக ஆசிரியர்களதும் மாணவர்களதும் சுயாதீன கல்விசார்ந்த, மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்கு குந்தகமாக அமைந்துள்ளது.
சீறிலங்கா அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லினக்கத்திற்கான ஆணைக்குழுவின் போலியான அறிக்கையை வைத்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் எமது மாணவர் ஒன்றிய செயலாளருக்கெதிராக இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானத்தாலும் LLRC அறிக்கையாலும் தமிழர்களுக்கு என்ன பயன் என்பது தொடர்பில் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். யுத்தத்துக்கு தலைமை தாங்கிய இராணுவ தளபதியின் விடுதலைக்கு சர்வதேச சமூகம் அளித்த முக்கியத்துவத்தை தமிழரது பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களுக்கு சர்வதேசம் முக்கியத்துவம் அளிக்காமை கவலையளிக்கின்றது, தெற்கில் பாரளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கையை அரங்கேற்றும்; அதேவேளை தமிழர் பிரதேசங்களில் தமிழரது காணிகள் பறிக்கப்படுவது, சிங்கள, இராணுவ குடியேற்றங்கள் இடம்பெறுவது தமிழர்களது சமூக, மாணவ தலைமைகள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருப்பதும் போன்ற இன்னொர் என்ன அநியாயங்கள் தொடர்ச்சியாக தமிழர் தாயகத்தில் அரங்கேற்றப்படுகின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான் யாருக்காக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்ற கேள்வி எழும்புகின்றது இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எமது மக்களின் நன்மை கருதி தமிழர்களது பாராளுமன்ற தலைமைத்துவம் எடுக்க வேண்டியது முக்கியமானதாகும். தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான அடக்குமுறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் தீர்வுக்கான செயன்முறை எனும் அரசின் காலம் தாழ்த்தும், மற்றும் சர்வதேசத்திடம் நேரத்தை கடத்தும் முயற்சியில் தாம் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுக்க வேண்டும். அறிவு சார்ந்ததும் எமது மக்கள் சார்ந்ததும் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் சர்வதேச நாடுகள் மாணவர்கள், சமூக சேவையாளர், பொதுமக்கள் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து உரிய வகையில் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அவர்கள் அனுபவித்த மிகப் பெரிய அவலங்களின் அடிப்படையில் நின்று தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழகம் சமூகம் சார்பில் உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழ் இணையங்கள்
No comments:
Post a Comment