Translate

Wednesday, 23 May 2012

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஐநா மனித உரிமை மன்றம் முன்வர வேண்டும்

இலங்கை சிறைகளில் விசாரணையின்றி வாடும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


மனிதகுல வரலாற்றில் கொடூரமான இனக்கொலைகளில் ஒன்றாக அண்மைக்காலத்தில் பேரழிவு அவலமாக ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த, பேரினவாத இலங்கை அரசு, உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி உண்மைகளை மூடி மறைத்து வருகிறது.

உலகம் தடை செய்த குண்டுகளை வீசியும், இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் உதவியால் கிடைத்த ஆயுதங்களைப் பயன்படுத்தியும், குறிப்பாக இடைவிடாத வான்வழித் தாக்குதல் குண்டு வீசியும், லட்சக்கணக்கான தமிழர்களை, இலங்கை அரசு படுகொலை செய்தது.

2008 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்திலும், 2009 ஆம் ஆண்டு, மே மூன்றாம் வாரம் வரையிலும், தமிழர்களுக்கு உணவு கிடைக்காமல் பட்டினியால் பல்லாயிரம் பேரைச் சாகடித்தது. காயங்களுக்கு மருந்து இன்றி எண்ணற்ற தமிழர்கள் மடிந்தனர். பாதுகாப்பு வலயம் என்று வஞ்சகமாக அழைத்து வந்து, நாடி வந்த தமிழர்களை இராணுவம் வேட்டையாடிக் கொன்றது.

நாற்புறத்திலும் சுற்றி வளைக்கப்பட்டுத் தமிழர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டபோது, ஆயுதங்கள் இன்றித் தங்களை ஒப்படைத்துக் கொண்ட விடுதலைப்புலிகள், ஆதரவாளர்கள் என 4000 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து, பல்வேறு சிறைகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைத்து வைத்து உள்ளனர்.

வெள்ளைக்கொடியுடன் வந்து தங்களை ஒப்படைத்துக் கொண்ட விடுதலைப்புலிகளை, நடேசன், புலித்தேவன் போன்றோரை, அவர்களின் குடும்பத்தினரோடு குரூரமாகக் கொன்றது இராணுவம். அப்படி வந்தவர்களுள், 4200 க்கும் மேற்பட்டவர்கள் குறித்து, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை, இன்றுவரையிலும் அறிய முடியவில்லை. அவர்களுள் பெரும்பாலானோர், இராணுவத்தால் கொல்லப்பட்டதாகவே தெரிகிறது.

எந்த விசாரணையும் இன்றி, மூன்று ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களுள் 234 பேர், ‘நீதிமன்றத்தில் எங்களை நிறுத்த வேண்டும்; அல்லது விடுவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, இன்று ஆறாவது நாளாக, காலவரையற்ற உண்ணாநிலை அறப்போர்’ நடத்துகின்றனர். குறிப்பாக, கொழும்பு, களுத்துறை மாவட்டச்சிறையிலும், வவுனியா மாவட்டச் சிறையிலும், இந்த உண்ணா நிலை அறப்போர் நடக்கின்றது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள, வெலிக்கடைச் சிறை, மகசின் சிறை, கொழும்பு மத்தியச் சிறை, கண்டி மாவட்டம் போகம்பர சிறை, காலி மாவட்டம் பூசா சிறை, வவுனியா மாவட்டச் சிறை, அநுராதபுரம் மாவட்டச் சிறை, யாழ்ப்பாணம் மாவட்டச் சிறை ஆகிய சிறைகளில், 4000 பேர் விசாரணை இன்றி, அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை முகாமில், 2000 பேர்களும், வவுனியா மாவட்டத்தில் கணேசபுரம் முகாம், மட்டக்களப்பு மாவட்டம் கந்தக்காடு முகாம் இரண்டிலும், இரண்டாயிரம் தமிழர்களும், ஏறத்தாழ கைதிகளாகவே அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த இடங்களில், எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது.

உற்றார், உறவினரை இழந்து, உரிமைகள் இழந்து, சித்திரவதைகளுக்கு ஆளாகி, சிறைக் கொட்டடிகளில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை, சிங்கள அரசு விடுவிக்க, ஐ.நா. மன்றமும், மனித உரிமை ஆணையமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் இனப்படுகொலையின் கூட்டுக்குற்றவாளியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு, மேலும் மேலும் குற்றச்சாட்டுக்கும், பழிக்கும் ஆளாகாமல், தமிழர்களைச் சிறையில் இருந்து விடுவிக்க, இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment