Translate

Saturday, 12 May 2012

புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்தாரா?: சுமந்திரன் எம்.பி. கேள்வி _


  நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை புலம்பெயர்ந்தவர்களின் நிகழ்ச்சி நிரல் என அரசாங்கம் கூறுமேயானால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் ஜனாதிபதி நியமித்தாரா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம். சுமந்திரன் நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். 


நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டு சிபாரிசுகளும் முன் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் மீண்டும் மீண்டும் குழுக்களை நிறுவிக் கொண்டிருப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்று குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி. கோட்டாவின் யுத்தம் என்று வெளியாகியுள்ள ஒரு நூலில் தமிழ்ப் புலிகளின் பயங்கரவாதம் எனக் கூறப்பட்டிருக்கின்றமையின் பின்னணியில் நல்லிணக்கம் எவ்வாறு சாத்திமாகும் என்றும் கேட்டார்.

பாரளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் 17 ஆவது திருத்தம் மற்றும் பொது ஆணைக்குழுக்களை நிறுவுதலை வலியுறுத்துவதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுமந்திரன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என்ற காரணத்தால் அந்தக் குழுவினரே இன்று கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

சர்வதேச சட்ட திட்டங்களை மீறுவதானது சாதாரண விடயமல்ல. எனவே அவ்வாறு மீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தினரால் கேள்விகளை எழுப்ப முடியும்.

தற்போது விவாதிக்கப்படுகின்ற இந்தப் பிரேரணை புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன்யாப்பா அபேவர்தன இங்கு கூறுகிறார்.

அப்படியானால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவானது புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கின்றதா எனக் கேட்கிறேன்.

தேசிய நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கின்றது. அது மக்களால் ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். நிலங்கள் பலவந்தமாக அபகரிக்கப்படுகின்ற போது எவ்வாறு இது சாத்தியமாகும். தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வுகளே இங்கு எட்டப்பட வேண்டும். தீர்வினை வலியுறுத்தி தற்போது சிபாரிசுகள் முன் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இதனை மீளாய்வு செய்வதற்கு மேலும் ஒரு குழுவை அமைப்பது அவசிமற்றதாகும்.

அத்துடன் தொடர்ந்தும் குழுக்களை அமைத்துக் கொண்டே செல்வதானது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. அதேபோன்று அண்மையில் வெளியான கோட்டாவின் யுத்தம் என்ற நூலின் உப தலைப்பில் தமிழ்ப் புலிகளின் பயங்கரவாதம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்றார். __

No comments:

Post a Comment