Translate

Sunday, 13 May 2012

நாடாளுமன்றத் தெரிவுக்குழு! தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கான சவப்பெட்டியா?


நாடாளுமன்றத் தெரிவுக்குழு! தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கான சவப்பெட்டியா? -வி.தேவராஜ்


May 13, 2012 http://www.livestream.com/vaakai
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது. தற்போது நாடாளுமன்றத் தெவுக்குழு என்ற பொறிக்குள்'' கூட்டமைப்பை இழுத்துவிட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன.


இது உண்மையில் பெரிய பொறி என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. இந்தப் பொறியில் கூட்டமைப்பு சிக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளுக்கும் அரசாங்கத் தரப்பு பெரும்பான்மையின ஜனநாயகத்தின் மூலம் சவப்பெட்டிக்கான இறுதி ஆணியை அடிப்பதாகவே அமையும்.

பெரும்பான்மையின் ஜனநாயகம் தமிழ் மக்களின் தலைவிதியை தனது இஷ்டம்போல் தீர்மானித்ததை கடந்த கால வரலாற்றில் நிறையவே பார்க்கலாம். 1948 ஆம் ஆண்டு சுமார் 10 இலட்சம் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் தலைவிதியையே மாற்றியமைத்து அம் மக்களை அரசியல் அனாதைகளாக்கியது இந்த பெரும்பான்மையின ஜனநாயகமே.

அது மாத்திரமல்ல இந்த பெரும்பான்மையின ஜனநாயகம் எப்பொழுதும் தனக்கு சார்பான விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதில் தொடர்ந்தும் எதேச்சதிகார போக்கினையே கடைப்பிடித்து வந்துள்ளது என்பதும் இலங்கை வரலாற்றில் பதிவுகளாக உள்ளன. இப்பத்தியில் ஏற்கனவே ஒரு விடயத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். 

முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் புதிய ஸ்ரீலங்கா ஒழுங்கமைப்பை உருவாக்குவதற்கான முனைப்பில் அரசாங்கத் தரப்பும், கொள்கை வகுப்பாளர்களும் தீவிரவாத சக்திகளும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாக இப்பத்தியில் (01.04.2012) இல் குறிப்பிட்டிருந்தோம். இந்தப் பயணத்திற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு மேலும் வலுவூட்டும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

தெரிவுக் குழுவிற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி திறந்த மனதுடன் அதாவது அரச தரப்புடனான பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு எவ்வாறு திறந்த மனதுடன் வெறுங்கையுடன் சென்றதோ அதேபோல் மீண்டும் வாருங்கள் என்று முன்நிபந்தனையாக அரச தரப்பு கூறியுள்ளது. 

இனவிவகாரத் தீர்வு நோக்கிய பயணத்தில் பல பேச்சுவார்த்தைகளை, ஒப்பந்தங்களை, வட்டமேசை மகாநாடு, சர்வகட்சி மகாநாடு என தமிழ்த் தலைமைகளும் சளைக்காது சென்று வெற்றியுடன் வெறுங்கையுடன் திரும்பிய வரலாற்றை தமிழ் மக்கள் அறிவர். 

பண்டா செல்வா உடன்படிக்கை, டட்லி செல்வா ஒப்பந்தம் என்ற வசையில் 1992 ஆம் ஆண்டு மங்கள முனசிங்க தெரிவுக் குழு அறிக்கை அரசியல் தலைமைத்துவங்களின் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் மரணித்தது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக்களைக் கொண்ட குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்தார்.

அமைச்சரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண தலைமையில் 18 மாதங்கள் இந்த குழு கூடியது. 64 கூட்டத் தொடரை நடத்தி அறிக்கையை ஜனாதிதியிடம் கையளிக்கப்பட்டும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. 

இந்த ஒரு நிலையில் மீண்டும் ஒரு நாடாளுன்றத் தெரிவுக்குழுவை அமைத்து இன விவகாரத்திற்கு தீர்வைக் காணப் போவதாக அரசாங்கம் உரத்துக் கூறுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இன விவகாரத்திற்கான தீர்வு குறித்து அரசாங்கம் தென்னிலங்கை சக்திகளும் எதைக் கூறினாலும் தென்னிலங்கை மக்கள் செவிசாய்க்கும் நிலையில் உள்ளனர்.

போரின் போது இனவிவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என சிந்தித்த சிங்கள மக்கள் முள்ளிவாய்க்கால் போருடன் பெரும்பாலான சிங்கள தலைமைத்துவங்கள் சிந்திப்பது போல் இன விவகாரம் என்ற ஒன்று இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டனர். உண்மையில் அரசாங்கத் தரப்பை பொறுத்து குறிப்பாக ஜனாதிபதி இன விவகார தீர்வு குறித்து தனக்கு இருக்கும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவை பயன்படுத்த முனைகிறார்.

தெரிவுக் குழு மூலமாக அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாக காட்டி ஜெனீவா மனித உரிமை பேரவையின் செயற்பாட்டை முடக்குவதும் நாடாளுமன்ற தெரிவுக் குழு நகர்வின் ஒரு அங்கமாகும். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை குறித்த கடுங்கோட்பாட்டினைக் கொண்டிருக்கின்றன.

ஒன்றும் கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்ளுடன் பேசுவதால் என்ன பயன் என்று தெரியவில்லை. மொத்தத்தில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மேலும் காலத்தை இழுத்தடித்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஒரேயடியாக சாவு மணி அடிப்பதாகவே அமையும்.

அது மாத்திரமல்ல நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் மூலமான பெரும்பான்மையின ஜனநாயக முடிவினை உலகத்திற்கு உரத்து சொல்வதாகவும் அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவால் ஒன்றும் நடைபெறாது என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பில் ஒரு சாரார் இருக்கின்றனர்.

ஒன்றும் நடைபெறாது என்பதற்காக தெரிவுக் குழுவுக்கு போகாமல் இருக்க முடியாது போய்த்தான் பார்ப்போமே! இது இன்னொரு சாராரின் நிலைப்பாடாக உள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு போகுமாறு அமெரிக்காவும் இந்தியாவும் வலியுறுத்துகின்றன. இவை கூறுவதை தட்டாது தெரிவுக் குழுவுக்குப் போவோம். தெரிவுக் குழு மூலம் ஒன்றும் நடைபெறவில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம். இது இன்னொரு சாராரின் நிலைப்பாடு. 

மொத்தத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு போகும் நிலையில் இருக்கின்றது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கூடி ஆராயப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இருவர் தெரிவுக் குழுவுக்குப் போவது பற்றி தெரிவித்த போது பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கு பற்றுவதா இல்லையா என்ற இழுபறிக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வது குறித்த நீண்டகால இழுபறி விவகாரம் கூட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவில்லையெனில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்கள் பிரிந்து சென்று கட்சிப் பதிவை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்ததாகவும், இது பற்றி முடிவெடுக்க ஒரு வாரம் அவகாம் கேட்கப்பட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது கூட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டாக அன்றி தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சியாக கட்டுப்பாட்டுடன், தூரநோக்குடன் செயற்பட வேண்டும் என்பதையே பதிவு பற்றி அக்கறை காட்டுவோரின் நிலைப்பாடாகவுள்ளது. 

மொத்தத்தில் எந்தவொரு விடயத்திலும் உறுதியான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலையில் கூட்டமைப்புத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மையாகும். அரசாங்கத் தரப்பினரின் சாணக்கியம், பேச்சுவார்த்தைப் பொறிக்குள் மாத்திரம் கூட்டமைப்பை வீழ்த்தி விடவில்லை. கூட்டமைப்பின் இருப்பையே ஆட்டம் காண வைத்துள்ளது. தமிழ் மக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே ஒரு பற்றுக்கோடு கூட்டமைப்பு தான். அதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு அதில் அங்கம் வகிக்கும் தலைமைகளுக்கு உண்டு. தமிழ் மக்களின் சார்பில் மீண்டும் இப்பத்தி மூலம் கோரிக்கையினை முன்வைக்கின்றோம். 

திறந்த மனதுடன் நிபந்தனைகள் எதுவுமின்றி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வருமாறு நிபந்தனையுடன் கூடிய அழைப்பை அரசாங்கத் தரப்பு கூட்டமைப்பை நோக்கி விடுக்கும் இவ்வேளையில், கூட்டமைப்பு கடந்த காலங்களைப் போன்று வெறுங்கையுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு சென்றது போலல்லாது தமிழ் மக்களின் சார்பில் உறுதியான தீர்வுப் பொதியுடன் தெரிவுக்குழுவுக்கு செல்வதே நல்லது.

அத்துடன் இன விவகார தீர்வு குறித்து கால அட்டவணைக்குள் தீர்வினை எட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தால் செல்ல வேண்டும். ஏனெனில் நாடாளுமன்ற தெவுக்குழு என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை சவப் பெட்டிக்குள் வைத்து இறுதி ஆணி அடிக்கும் இறுதி நிகழ்வாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு கூட்டமைப்பும் தமிழ் தலைமைத்துவங்களும் தமது நகர்வை மேற்கொண்டாக வேண்டும். மொத்தத்தில் இனவிவகாரத் தீர்வுக்கென கூட்டமைப்பு சர்வதேச மத்தியஸ்தத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment