அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த ராஜபக்ச – பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறிலங்கா அரசு முயற்சி
அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த ராஜபக்ச – பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறிலங்கா அரசு முயற்சி
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் செல்லவுள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து அவர் அடுத்த மாதம் 3ம் நாள் தொடக்கம் 4 நாட்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர், பிரித்தானிய அரச அதிகாரிகள் எவரையாவது சந்திப்பாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும் இது ஒரு அரசு முறைப்பயணம் அல்ல என்று பிரித்தானிய தூதரக அதிகாரி தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த போது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அத்துடன் சிறிலங்கா அதிபருடன் சென்றிருந்த, அவரது பாதுகாப்புப் பிரிவு கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக போர்க்குற்ற வழக்கும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து சிறிலங்கா அதிபரின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியன் நீக்கம் செய்தது.
நிலைமைகள் சிக்கலடைந்ததால், மகிந்த ராஜபக்ச அவசரமாக கொழும்பு திரும்பியிருந்தார்.
இந்தநிலையில், இம்முறை சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பை லண்டனில் உறுதிப்படுத்த, அங்குள்ள சிறிலங்கா தூதரகம் பிரித்தானிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சார்ந்த அதிகாரிகளுடன் நெருக்கமான கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment