Translate

Monday, 28 May 2012

LLRC பரிந்துரைக்கு பொன்சேகா ஆதரவு: இலங்கையில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும் தெரிவிப்பு

Posted ImageLLRC பரிந்துரைக்கு பொன்சேகா ஆதரவு: இலங்கையில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும் தெரிவிப்பு

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


பீபீசி சிங்கள சேவைக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபர்களாக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாவிட்டால் அவர்களை தடுத்து வைக்க முடியாது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவினால் மனித உரிமை மீறல்கள், மீள் நல்லிணக்கம் மற்றும் போர்க்கால நிகழ்வுகளுக்கான பொறுப்புக் கூறல் போன்ற விடயங்கள் குறித்த பரிந்துரைகளை தான் ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இருக்கின்றன என்பதை தான் நேரடியாகவே ஒப்புக்கொள்வதாகவும், அங்கு மீள் நல்லிணக்க நடவடிக்கைகளும் தேவையாக இருக்கின்றது என்றும், அதேவேளை போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் குறித்து ஆதாரபூர்வமாக ஆதாரங்களை யாராவது சமர்ப்பித்தால் அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், வெறுமனே வதந்திகளின் அடிப்படையிலோ அல்லது பக்கசார்பான நிறுவனங்கள் கூறும் அறிக்கைகளின் அடிப்படைகளிலோ இந்த விசாரணைகள் நடத்தப்பட முடியாது என்றும் சரத் பொன்சேகா கூறினார்.

பல்வேறு சமூகங்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் பலனைத்தரும் வகையில் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போர்க்காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதை தான் ஏற்கவில்லை என்று கூறினார். ஆனால், அங்கு எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளா என்பது குறித்து இறுதியில் அறிவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும், ஆகவே அந்தச் சிரமங்களுக்கு மத்தியில் துல்லியமான மதிப்பீட்டைச் செய்ய முற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிகாரப் பகிர்வு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சரத் பொன்சேகா, அதிகாரப் பகிர்வு என்பது இன ரீதியில் கையாளப்படக் கூடாது என்றும், அது அனைத்து இன மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக, இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அந்த விடயத்தில் அவசரப்படக் கூடாது என்றும் கூறினார். 


http://www.adaderana...s.php?nid=25618
 

No comments:

Post a Comment