Translate

Monday 28 May 2012

இலங்கை எதிர்நோக்கும் உண்மையான சவால்

புலம்பெயர்ந்த தமிழர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகள் இலங்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் காட்டுகின்ற அக்கறைக்கும் புலம்பெயர் தமிழர்களின் பிரசாரங்களே பின்புலமாக இருப்பதாக குறைகூறுகிறது. இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய பொருளாதார அபிவிருத்திப் பணிகளை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாக புலம்பெயர் தமிழர்களைக் குற்றஞ்சாட்டும் அரசாங்கம் அவர்கள் மத்தியிலுள்ள அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கைக்கெதிரான பிரசாரங்களை முறியடிப்பதையே அதன் பிரதானமான இராஜதந்திர செயற்பாடாக மாற்றி இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவமயத்தைக் குறைப்பதற்கு இயலாமல் இருப்பதற்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஈழம்வாதிகளின் அச்சுறுத்தலையே அரசாங்கம் காரணம் காட்டுகிறது.

உள்நாட்டுப் போரில் தங்கள் இரத்த பந்தங்கள் இலங்கையில் அனுபவிக்க வேண்டியிருந்த அவலங்களுக்கெதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் குரல்கொடுத்து வந்திருக்கிறார்கள். இவர்களில் சகலருமே இலங்கையில் தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டங்கள் வழிநடத்தப்பட்ட முறையை முற்றுமுழுதாக ஆதரித்தவர்கள் என்று கூறிவிட முடியாது. சகல சமூகங்கள் மத்தியிலும் காணப்படுவதைப் போன்று வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பல்வேறுபட்ட அரசியல் கருத்துக்களும் சிந்தனைகளும் நிலவவே செய்கின்றன. போர் முடிவடைந்துவிட்ட போதிலும் அந்தப் போருக்கான அடிப்படைக் காரணியான இன நெருக்கடியின் விளைவாக சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இலங்கையில் அரசியல் நிகழ்வுப் போக்குகள் தொடர்பில் தங்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவது இயல்பானதேயாகும். இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு நோக்கிய செயன்முறைகளில் உருப்படியான நகர்வு எதனையும் காண முடியாததால் புலம்பெயர் தமிழர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே  அவர்களினால்  முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகளை நோக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களை ஒட்டுமொத்தமாக துரோகிகளாக நோக்கும் அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடாது என்பதே எமது அபிப்பிராயமாகும். 
இலங்கை நெருக்கடியை மையமாக வைத்து புலம்பெயர்ந்த தமிழர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற சகல அரசியல் செயற்பாடுகளையும் இலங்கைக்கு விரோதமானவையாக நோக்கவும் கூடாது. தமிழர்களின் அரசியல் உரிமைக்கான கடந்த காலப் போராட்டங்களில் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய தவறுகளை இலங்கையிலுள்ள தமிழர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதைப் போன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகளை அரசாங்கம் எவ்வாறு நோக்கியதோ அதேபோன்று புலம்பெயர்ந்த தமிழர்களைப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் நோக்குவது தேசிய நல்லிணக்கத்திற்கான சூழ்நிலையை இதுவரை ஏற்படுத்துவதற்கு உதவவில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளில் அரசாங்கத்திற்கு ஓரளவுக்கேனும் அக்கறையிருக்கிறது என்று தமிழ்மக்கள் நம்பக்கூடியதான உருப்படியான எந்தவொரு அரசியல் சமிக்ஞையையும் அரசாங்கம் காட்டுவதற்குத் தயங்குகிறது. வெறுமனே மேலோட்டமான அறிவிப்புகளினால் தமிழ்மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துவிட முடியாது. தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அரசியல் பிரதிநிதிகளின் குறைந்தபட்சக் கோரிக்கைகளுக்காவது இணங்குவதன் மூலமாக சமிக்ஞையைக் காட்டுவதற்கான வாய்ப்பிருக்கின்ற போதிலும் அதைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கான செயன்முறைகளில் பயனுறுதியுடைய முறையில் முன்னேற்றத்தைக் காண்பதற்கான வாய்ப்புக்களை அரசாங்கம் தொடர்ந்து தவறவிட்டுக்கொண்டே இருக்கிறது. 
இன்றைய காலகட்டத்தில் இலங்கைச் சமுதாயம் எதிர்நோக்குகின்ற மெய்யான சவால் போருக்குக் காரணமாய் அமைந்த இன நெருக்கடியைப் பயன்படுத்தி மீண்டும் எந்த வழியிலும் அமைதியின்மை தோன்றாதிருப்பதை உறுதி செய்வதற்கான தொலைநோக்குடனான அணுகுமுறைகளைக் கையாளுவதற்கான அரசியல் துணிச்சலைக் காட்டவேண்டியதேயாகும். அதை இதுவரை நாட்டின் அரசியல் தலைமைத்துவம் செய்யவில்லை. தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு பெரும்பான்மை சிங்கள மக்களைத் தயார்ப்படுத்துவதற்குப் பதிலாக போர்க்கால மனோ நிலையில் அவர்களை வைத்திருப்பதற்கே அரசாங்கம் இன்னமும் விரும்புகின்ற துரதிர்ஷ்டவசமான நிலையைக் காண்கிறோம். உள்நாட்டுத் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அரசாங்கம் மானசீகமாக அக்கறை காட்டுமேயானால், அவர்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளைத் துரிதமாக முன்னெடுப்பதில் அக்கறை காட்டுமேயானால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இலங்கையை மையமாகக்கொண்ட செயற்பாடுகளுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். இதைச் செய்வதற்கு தங்களைச் தயார்படுத்த வேண்டியதே இன்றைய அரசாங்கத் தலைவர்களுக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய பொறுப்பாகும். ஒட்டுமொத்தத்தில் இதுவே உள்நாட்டுப் போரில் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கைச் சமுதாயம் எதிர்நோக்கி வருகின்ற பிரதான சவாலுமாகும்!

No comments:

Post a Comment