கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் - TNA - குளோபல்தமிழ்ச்செய்தியாளர்
எதிர்வரும் 26ம் திகதி முறிகண்டி ஆலய முன்றலில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளை களைந்து, இன விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும், பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில்
உலக ஓட்டத்திற்கு தன்னையொரு மிகை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் இலங்கை அரசாங்கம் மறுபுறத்தில், தமிழ் இனத்தின் சுயத்தை மெல்ல மெல்ல அழித்து காலக்கிரமத்தில் அந்த இனத்தையே இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பாகமாகவே தமிழர் தாயப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள், தேவையற்ற இராணுவ ஆக்கிரமிப்புக்கள், பௌத்த மயமாக்கல் போன்றன அமைந்திருக்கின்றன.
உயர்பாதுகாப்பு வலயங்கள் என தாயகத்தின் வளம் சுரக்கும் நிலங்கள் முளுவதையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இராணுவம் இன்று யுத்தம் முடிந்துள்ள நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் எதற்காக என கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில் அவை, அபாயகரமான பிரதேசங்கள் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்றும், நேரத்திற் கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றது.
இதுபோதாதென்று புதிதாக யுத்தத்தின் பின்னர் புலிகள் இருந்தனர், புலிகளுக்கு விற்கப் பட்டவை, புலிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டவை என வகைப்பாடுகளை போட்டுக் கொண்டு நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது. மறுபுறத்தில் தொழிலுக்காக என்று கூறிக்கொண்டு வந்து தங்கும் சிங்களவர்கள் சில நாட்களிலேயே நிரந்தர உரிமை கேட்கின்றனர். கேட்டவுடனேயே அவை வழங்கப்படுகின்றன.
அது மட்டுமல்லால் அவர்கள் குடியேறும் பகுதிகளில் அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும், அரச அமைச்சர்களினதும், ஆதரவுடனும், அனுமதி கடித்ததுடனும் விகாரைகள் முதற்கொண்டு பாடசாலைகள் வரை அமைக்கப்படுகின்றன. இவை குறித்து எந்தக் கேள்வியும் இல்லை பதிலும் இல்லை. இந்நிலையில் எங்கள் இனம் பாரம்பரிய மாக வாழ்ந்த நிலங்களிலேயே அகதிகளாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றது.
இவற்றுக்கெதிராக போராடினாலோ, போராடத் தலைப்பட்டாலோ எம்மையொரு பிரிவினை வாதிகளாகவும், ஆயுதவிரும்பிகளாகவும் உலகத்திற்குச் சொல்லும் அரசாங்கம் அதைக் கொண்டே தான் செய்துவரும், அநியாயங்களை, இன அழிப்பை மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றது.
இதுபோக யுத்தம் முடிந்து 3வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையில், யுத்தகாலத்திலும், அதற்குப் பின்னரும் கைதுசெய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர் கள் குறித்து எந்தப் பதிலும் கிடையாது. இது குறித்து இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் அரசில் தலைமைகளுக்கும் கேட்கத் திராணியில்லை, இந்த நிலையில் ஆயிரமாயிரம் இளம் பெண்கள், பிள்ளைகள், குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.
இது குறித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் தங்களுடைய இனத்தில் கடும் குற்றம் சுமத்தி கைதுசெய்தவர்களையும் கூட மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளனர். ஆனால் சாதாரணமாக பற்றரி கொண்டு வந்தவர்கள் கூட விசாரணையின்றி சிறைகளில் உள்ளனர். எனவே எம்மையொரு அடக்கப்பட்ட, அடிமை இனமாகவே அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
ஆனால் இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. சாதாரனமாக ஜந்தறிவு ஜீவன்கள் கூட தங்கள் இருப்பிடத்தில், தன்னுடைய சுதந்திரப் பிரதேசத்திற்குள் நுழைந்து ஊறு விளைவித்தால் போராடுகின்றது. நாங்கள்; பாரம்பரியமான, பூர்வீகமான இனக்கூட்டம் மட்டுமல்ல, எப்போதும் சுதந்திரமாக வாழ்ந்த இனமும் கூட, எனவே தொடர்ந்தும் இந்த ஆக்கிரமிப்புக்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏன தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இனிவரும் காலங்களில் ஆக்கிரமிப்புக்கு எதிரான தொடர் போராட்டங்கள் வெடிக்கும், ஆரம்பமாக சில போராட்டங்கள் நடந்துள்ளன. அதன் நீட்சியாக எதிர்வரும் 26ம் திகதி முறிகண்டி ஆலய முன்றலில் காலை 10மணிக்கு கவனயீர்ப்பு உண்ணாவிரதத்தை நடத்தவுள்ளோம் இதில் கட்சி வேறுபாடுகள் களைந்து, இன விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும், பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பினில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment