Translate

Tuesday, 19 June 2012

இலங்கையில் நால்வர் ஆட்சி முடிவுக்கு வரும் சாத்தியங்கள்.

Posted Image

(ஆசிரியர் தலையங்கம் 18.06.2012)பலம் வாய்ந்த மிகச் சிறிய எண்ணிக்கையினரால் அவர்களுடைய ஏகபோக நன்மைக்காக நடத்தப்படும் அரசாட்சியை ஒலிகார்க்கி (Oligarchy) என்று வகைப்படுதுகிறார்கள். சிறு தொகையினரால் ஆளப்படும் நாட்டையும் இப்படித் தான் அழைப்பார்கள்.

இலங்கையில் ஒலிகார்க்கி ஆட்சி முறை நிலவுகிறது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த நான்கு சகோதரர்கள் பாராளுமன்றச் சபாநாயகர், ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர், பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற நான்கு பொறுப்புவாய்ந்த பதவிகள் வகிக்கிறார்கள்.
நடேசன் என்ற தமிழ் பேசாத கொழும்புத் தமிழரைத் திருமணம் செய்த நிருபமா ராஜபக்ச என்ற இதே குடும்பத்தில் பிறந்த பெண் அமைச்சரவையில் பதவி வகிக்கிறார். நாட்டின் நிர்வாக சேவை, முப்படைகள், ஜனாதிபதிச் செயலகம் ஆகியவற்றில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் ஜம்பது பேர் பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள்.
நான்கு ராஜபக்ச சகோதரர்களும் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்புச் சேவை, நீதி நிர்வாகம், ஊடகத்துறை ஆகியவற்றைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். பலமான எதிர் கட்சி இல்லாத படியால் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை எதிர்கட்சித் தலைவர் றணில் விக்கிரமசிங்க மகுடிக்கு ஆடும் பாம்புபோல் அரசிற்குச் சாதமாகச் செயற்படுகிறார்.
தெற்கு ஆசியாவின் ஒரே சர்வாதிகார நாடு என்று இலங்கை வர்ணிக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. ராஜபக்ச ஆட்சி ஏற்படுவதற்கு அமெரிக்கா, சீனா, இந்தியா, ருஷ்யா ஆகிய நாடுகள் உதவியுள்ளன. ஈழத் தமிழின அழிப்பை ராஜபக்ச ஊடாக இந்த நாடுகள் நடத்தியுள்ளன.
ஜெனிவா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது நினைவிருக்கலாம். அதன் உண்மையான நோக்கம் சர்வதேச விசாரணைகளில் இருந்து ராஜபக்சவைக் காப்பாற்றுவதாகும். அதில் இந்தியா ராஜபக்சவுக்குச் சாதகமான தனது பங்களிப்பைச் செய்துள்ளது.
நீர் மோருக்கு மேலும் நீர் கலந்த கதையாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையில் திருத்தம் செய்யும் படி நிர்ப்பந்தம் செய்த பிறகு இந்தியா அதற்கு வாக்களித்தது. இதன் மூலம் அமெரிக்கா, நிறைவேற்றிய தீர்மானம் பயனற்றதாகவும் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் வழங்காத உபாயமாகவும் இடம்பெறுகிறது.
ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான சரத்து இந்தியாவின் நிர்ப்பந்தத்தால் திருத்தப்பட்டுள்ளது. அதிபர் ராஜபக்ச குற்றவாளியா இல்லையா என்று விசாரிக்க இலங்கை அரசு முதலில் அனுமதி தரவேண்டும் என்று அமெரிக்காவின் வரைவில் இருந்தது. அதை இல்லாமல் செய்து விட்டுத் தான் அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்தது.
ராஜபக்ச ஆட்சிக்கு இது வரை நீடித்த நல்ல காலம் படிப்படியாக மாறி வருகிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்கு உதவிய லிபியா, பர்மா ஆகியவற்றில் அமெரிக்காவின் பின்னணி உதவியோடு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் இன்னொரு நட்பு நாடான ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச சீனாவின் செல்லப்பிள்ளை என்பது உலகறிந்த விடயம். இந்த நட்பு அவருக்கு ஆபத்தாக முடியும் சாத்தியம் இருக்கிறது. இலங்கையைத் தனது தளமாக மாற்றும் சீனாவின் திட்டத்தை முறியடிக்க அமெரிக்கா நகர்வுகளை மேற்கொள்கிறது. ஜெனிவா ஒப்பந்தத்தில் சாதகமாக வாக்களிக்க இந்தியாவை வற்புறத்தியது மூலம் இந்திய - இலங்கை நட்புறவில் கசப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
இந்தியா எவ்வளவு முயற்சித்தாலும் உறவில் வீழ்ந்த முறிவைச் சரிசெய்ய இனிமேல் முடியாது. ராஜபக்ச இந்தியாவைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கியுள்ளார். அடுத்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த அமெரிக்கா அவர் மூலம் ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றது.
மகிந்த ராஜபக்சவின் ஊழல் ஆட்சி, சர்வாதிகாரம், மக்களுக்கு எதிரான போக்கு ஆகியவற்றிற்கு எதிராக மக்களைத் திரட்டி தெருவில் இறங்கிப் போராடப் போவதாகச் சென்ற வாரம் சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார். பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்சவுக்கும் இவருக்கும் இடையில் நெடுங்காலப் பகை இருக்கிறது.
பொன்சேகாவைச் சிறையில் அடைக்கக் காரணமானவரே அவர் தான். இன்னும் சில போலி வழக்குகளைத் தாக்கல் செய்து அவரைத் தொடர்ச்சியாகச் சிறையில் அடைக்க கொத்தபாய விரும்பினார். ஆனால் அமெரிக்கத் தலையீட்டால் பொன்சேகா வெளியில் வந்து விட்டார்.
மக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடிகள் இலங்கையைப் பெருமளவில் பாதிக்கின்றது. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வும் பண வீக்கமும் நிலமையை மோசமடையச் செய்துள்ளன.
மக்களின் கடுஞ் சினம் ராஜபக்ச குடும்பத்தின் மீது பாய்ந்துள்ளது. போர் வெற்றியைக் காட்டி மக்களை ஏமாற்ற இனிமேலும் முடியாது. இராணுவத்தை அரசுக்கு எதிராகத் திருப்பிவிடும் வலுவுள்ள சரத் பொன்சேகாவின் எழுச்சி ராஜபக்ச குடும்ப ஆட்சிக்குச் சாவு மணி அடிக்கின்றது.
“அமெரிக்காவும் இந்தியாவும் என்ன செய்தாலும் எனது ஆட்சியை ஆட்டங் காணச் செய்ய முடியாது” என்று அதிபர் ராஜபக்ச பொருள் பொதிந்த வாசகத்தை அண்மையில் கூறியுள்ளார். அவருடைய ஆட்சி நீடிக்கும் வாய்ப்பு இனிமேலும் இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
http://www.eelampres.../80171/56/.aspx 

No comments:

Post a Comment