தமிழ் மக்களிற்கான இனப்பிரச்சினைத் தீர்வில் உள்ளகப் பொறிமுறை சாத்தியமற்றது என்பது மேலுமொரு வகையில் குடாநாட்டில் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுவதன் வாயிலாக புலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு நாங்கள் ஓர் தேசம் என்பதனை சர்வதேசம் அங்கீகரிப்பதுவே வழியென்பதை உணர்துவதற்காக இப் பிரச்சினைக்கு எதிராக போராட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட ரீதியில் தமிழ்ர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளன.
வடக்கில் வவுனியா வடக்கு மற்றும் மணலாற்று பகுதிகளில் அவ்வாறான நிலப்பறிப்பு நடைபெற்றாலும் மிக மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெற்றன. இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நிலப்பறிப்புக்கள் நடைபெற்றமைக்கு அப்போது போராட்டம் நடைபெற்றமையும் போராட்டத்தினை மீறி தீவிரமாக அரசாங்கத்தினால் நிலப்பறிப்பினை மேற்கொள்ள முடியாத ஒரு நிலைமையும் காணப்பட்டமையுமே காரணமாகும்.
2009 மே மாதம் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தின் இந்த நிலப்பறிப்பு நடவடிக்கைகளை தன்னுடைய இராணுவத்தின் உதவியுடன் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இது இன்றைக்கு வடக்குப் பகுதியில் அரசகாணிகளை மட்டுமல்ல தனியார் காணிகளையும் வலுக்கட்டாயமாகப் பறிக்கின்றதாக அமைகின்றது.
இச்செயற்பாடுகள் துணிச்சலாக நடைபெறுகின்றன. இத் துணிகர நடவடிக்கைகள் ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பில் ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தான் நடைபெறுகின்றன.
இதிலிருந்து ஜெனிவாத் தீர்மானமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் தங்களுடைய பௌத்த சிங்கள மயமாக்க நடவடிக்கையினைக் கட்டுப்படுத்தாது என்பதை சிங்கள அரசாங்கம் நன்றாகப் புரிந்துகொண்வெளிப்பாடே ஆகும். இதிலிருந்து இத் தீர்மானம் எவ்வளவு பலவீனமானது என்பதைக் கூட நாம் புரிந்து கொள்ள முடியும்.
அதேநேரத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக ஒரு உள்ளகப் பொறிமுறையொன்றை உருவாக்குவதன் ஊடாக, இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதும் ஒருபோதும் நடக்கப் போவதில்லை என்பதை சர்வதேசமும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான சிக்கல்களுக்கு, சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தேசியம், தாயகம் போன்றவை ஏற்றுக் கொள்வதே பொருத்தமானதாகும். இதுவே நடைபெறுகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
இந்த நிலையில் நாங்கள் இக் காணி அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டத்தினை நடத்துவதன் வாயிலாக, தமிழ் மக்களின் தேசத்தினை சர்வதேசம் அங்கீகரிப்பதே பொருத்தமானது என்பதை உணர்த்த முடியும். இந் நோக்கில் நாளை திங்கட் கிழமை மதியம் யாழ்நகரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுகின்றோம். இப் போராட்டத்தில் சகல தரப்புக்களும் கைகோர்த்து தமிழ் மக்களின் நிலையை வெளிக்காட்டுவதற்கு முன்வரவேண்டும்
No comments:
Post a Comment