Translate

Sunday 17 June 2012

மொழிப்போர் + இனப்போர் + மதப்போரும் = இலங்கை!

இந்நாட்டில் மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக மாறி, இன்று மதப்போராக அது உருமாறி வளர்ந்து இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும்.

இத்தகைய ஒரு பின்னணியில் வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுக்க உள்ள பன்னிரண்டு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகளையும், பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்களையும் அழைப்பித்து, கொழும்பில் மாநாடு நடத்துவதற்கு இதைவிட பொருத்தமான தருணம் வேறு எதுவும் கிடையாது, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.


தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு ஹவ்லக் வீதி சம்புத்தத்வ பெளத்த மணடபத்தில், தேசிய சர்வமத மாநாடு நடைபெற்றது. நாடு முழுக்க இருந்து பெருந்தொகையான பிரதிநிதிகளுடன், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், மாதுலுவாவே சோபித தேரர், ஐதேக எம்பி கரு ஜயசூரிய, கூட்டமைப்பு எம்பி சுமந்திரன், பேரவை தலைவர் ஜெஹான் பெரேரா ஆகியோருடன் அதியாக கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

வட-கிழக்கில் இருந்து ராணுவத்தை அகற்றும்படி உலகம் இன்று இந்த அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் இந்த விடயம் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

தமிழ் பகுதிகளில் இருந்து இராணுவத்தை வாபஸ் வாங்க அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றது. இதை நாம் ஏற்றுகொள்ள மாட்டோம். அங்கே ராணுவம், சும்மா பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. அது தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை விவகாரங்களில் தலையிடுகிறது.

இது தமிழ் மக்களுக்கு தொல்லை தரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆகும். வடக்கில் தமிழ் மக்கள் வீடுகளில் நடைபெறும் பிறந்தநாள் விழாக்களுக்கு கூட, இராணுவ அதிகாரிகள் அழையா விருந்தாளிகளாக நுழைகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இலங்கை வந்து சென்ற இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சிவராஜ், நாடு திரும்பியதும் இதை சொன்னார்.

இந்த செய்தி உலக தலைப்பு செய்திகளில் இடம் பெற்றது. இதுதான் வடக்கில் உண்மை நிலவரம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதே, அங்கு இராணுவ ஆட்சி நடை பெறுவதை ஊர்ஜிதம் செய்கின்றது.

உலகில் எந்த நாட்டு இராணுவமும், சிவில் நியாயங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. இலங்கை வந்த, இந்திய அமைதிபடையும், யாழ்ப்பாணத்தில் அமைதி காக்கவில்லை. அந்த படையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்பாவி மக்களை சுட்டு கொன்றது. இதையேதான் அமெரிக்க, பிரித்தானிய இராணுவங்களும் உலக நாடுகளில் செய்கின்றன. இதுதான் உலகளாவிய இராணுவ கலாச்சாரம். இதைதான் இலங்கை இராணுவமும் வடக்கில் செய்கிறது. இலங்கை இராணுவம் வடக்கில் பெளத்த மத போதனையையா செய்கிறது?

எனவே தேவைக்கு அதிகமாக, ஒரு நிமிஷம் கூட, இராணுவம், மக்கள் மத்தியில் நடமாட கூடாது. அரசாங்கம் தனது சித்து விளையாட்டுகளை நிறுத்தி விட்டு, இராணுவத்தை வாபஸ் வாங்க வேண்டும். காவல் பணிகளை பொலிஸ் துறையிடம் கையளிக்க வேண்டும். பொலிஸ் என்பது, சிவில் படையாகும். இராணுவம் என்பது சிவில் படை அல்ல. அவர்கள் சிவில் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதில்லை.

இது பற்றிய அடிப்படை அறிவு இந்த அரசாங்கத்திற்கு இல்லையா? பொலிஸ் என்றால் இராணுவம் என்று சொல்லி, சொல்லித்தான், பொலிஸ் அதிகாரம் மாகாணசபைக்கு தரக்கூடாது என்ற கருத்தை இவர்கள் தெற்கில் உருவாக்கி இருக்கிறார்கள்.

என் வாயில் துப்பாக்கியை வைத்து, பலவந்தமாக என் கையில் தேசிய கொடியை கொடுத்து, என்னை பலவந்தமாக தேசிய கீதம் பாடு என்று சொன்னால், எனக்கு தேசிய உணர்வு வராது என்பதை இங்கு வந்துள்ள கனவான்கள் உணர்ந்துகொள்வார்கள் என நான் நம்புகிறேன். தேசிய உணர்வு என்பது உள்ளிருந்து வர வேண்டும்.

அப்படி அது வரக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இன்று தமிழ் மக்களை சுற்றி அத்தகைய சூழ்நிலை இல்லை. இந்நாட்டில் மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக மாறி, இன்று மதப்போராக அது உருமாறி வளர்ந்து இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும்.

No comments:

Post a Comment