கொழும்பு: இலங்கை அரசில் இன வாதிகளை வெளியேற்றாவிட்டால் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசு எந்த நேரத்திலும் கவிழும். இவரைப் போன்றவர்கள் இங்கு பிறந்தது சிங்களர்களும், பெளத்தவர்களும் செய்த பாவம் என்று இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சியான நவசம சமாஜக் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து நவசம சமாஜக் கட்சி தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறுகையில்,
அணைந்து போக உள்ள விளக்கு மிக பிரகாசமாக எரியும். அதே போல அரசாங்கத்தில் உள்ள இனவாத அமைச்சர்களான சம்பிகா ரணவகாவும், விமல் வீரவன்சவும் நன்றாகவே பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போகும். அதிபர் தன்னையும், அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் இனவாதிகளை உடனே வெளியேற்ற வேண்டும். இது வெகு விரைவில் நடைபெறும் என நம்புகின்றேன்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அதிபர் ராஜபக்சேவுக்கு மனம் இல்லை. ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பரிந்துரைகளை அமல்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ய முன் வராது. அப்போது ஆட்சியை தொடர முடியாது போகும். எனவே, மிக விரைவில் அரசிற்குள் ஒளிந்திருக்கும் இனவாதிகள் வெளியேற்றப்பட்டு நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் நிலைமை உருவாகும்.
இது போன்ற இனவாதிகள் இந்த நாட்டில் தோன்றியது சிங்கள, பௌத்த மக்கள் செய்த பாவம் ஆகும். அரசுக்குள்ளேயே அரசை கவிழ்க்கும் சதித் திட்டம் தோல்வி அடையாவிட்டால் அதிபரின் பதவி பறிபோகும் என்றார்.
No comments:
Post a Comment