தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் அமைச்சரும்,நண்பருமான ரவுப் ஹக்கீம் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையை,அவர் அங்கம் வைக்கும் அரசின் மீது வைக்க முடியாதுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது முரண்பாடான கருத்தாக இருந்தாலும்,ரவுப் ஹக்கீம் அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கம் என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதால் இதை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.
நீண்டகால சிறைக் கைதிகளுக்கு,பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும், வழக்குகள் முடிவடையாத அல்லது விசாரணைகள் முடிவடையாத அனைத்து கைதிகளும் உடனடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டு, அங்கே அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள்,அவர்களது குடும்பத்தவர்களுடன் சேர்க்கப்பட வேண்டும் என்பதும்,
விசேட நீதிமன்றங்கள் என்ற திட்டம் காலத்தை இழுத்தடிக்கும் திட்டம் என்பதும்,மக்கள் கண்காணிப்பு குழுவின் நிலைப்பாடாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வவுனியா, மன்னார், அனுராதபுரம் ஆகிய இடங்களில், தமிழ் கைதிகளுக்காக விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வழக்குகள் துரிதப்படுத்தப்படும் என்ற நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த காலங்களில் ஜேவிபி கைதிகளுக்கு பொது மன்னிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்சமயம், அரசில் உள்ள புலிகளின் முன்னாள் பிரபல்யங்களுக்கும்,ஒருவித சலுகை வழங்கப்பட்டு,வசதி வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவை பற்றி நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் ஏன் இந்த சலுகை அல்லது மன்னிப்பு,சிறைகளில் நீண்ட காலமாக வாழும்,பெண்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள்,நோயாளிகள், மதகுருமார் ஆகியோர் அடங்கிய தமிழ் கைதிகளுக்கு வழங்கப்படவில்லை என்பது தமிழ் மக்களின் கேள்வியாகும்.
அடுத்து, ஒரு தொகுதி கைதிகளின் மீது குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நீண்ட காலமாக நடக்கின்றன. இன்னும் ஒரு தொகுதியினர் தொடர்பில்,காவல்துறை விசாரணைகள் முடிவடையவில்லை அல்லது சிலருக்கு அவை ஆரம்பிக்கப்படவே இல்லை.
இவர்களுக்கு ஏன், புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் அவர்களது குடும்பத்தவர்களுடன் சேர்க்கப்பட கூடாது என்பதும் தமிழ் மக்களின் கேள்வியாகும்.
இந்த அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளை ஆறப்போடுவதற்கும்,காலத்தை இழுத்தடிப்பதற்கும் பெருந்தொகை விசாரணை ஆணைக்குழுக்களை அமைத்து உலக சாதனை புரிந்துள்ளது என்ற உண்மை அமைச்சருக்கு நன்கு தெரியும்.
இன்று இந்த விசேட நீதிமன்றங்களும், இத்தைகைய முயற்சிகள் இல்லை என்பதற்கான நல்லெண்ண உத்தரவாதம் எதுவும் எமக்கு தென்படவில்லை. அமைச்சர் குறிப்பிட்டுள்ள விசேட நீதிமன்றங்கள் தொடர்பில் காலவரையறை எதுவும் இருக்கின்றதா என்பதும் எமக்கு புரியாத புதிராக இருக்கின்றது.
தமிழ் பேசும் சமூகத்தை சேர்ந்த எனது நல்ல நண்பரும்,அமைச்சருமான ரவுப் ஹக்கீம் சந்திக்கக்கூடிய,நெருக்கடிகளை என்னால் உணர முடிகிறது. அவர் மட்டும் அல்ல, இந்த ராஜாங்கத்தில் உள்ள எல்லா தமிழ் பேசும் அமைச்சர்களின் நிலைமையும் இதுதான் என்பது நாடறிந்த சங்கதி.
எனினும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவன் என்ற முறையில், தமிழ் மக்களின் சார்பாக மட்டும் அல்லாமல், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறையிருக்கும் அல்லது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து முஸ்லிம், சிங்கள கைதிகள் சார்பாகவும், நான் இவற்றை சொல்லியே ஆகவேண்டியுள்ளது.
பொது மன்னிப்பு தொடர்பிலும்,வழக்குகளை இடை நிறுத்திக்கொண்டு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலும், இன்றுள்ள சட்டங்கள் போதுமானவையாக இருக்க முடியாது.
இந்நிலையில் இவற்றுக்காக, புதிய சட்ட விதிகளை அமைச்சரவை மூலமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வர அமைச்சர் ஆவன செய்ய வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் நாம் நிச்சயமாக திரட்டி தருவோம்.
No comments:
Post a Comment