பெரும்பாலான தமிழ் கட்சிகள் மத்தியிலே இன்று ஏற்பட்டுள்ள ஒற்றுமை தொடர வேண்டும். இதுவே இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களினது எதிர்பார்ப்பு. அநீதிக்கு எதிராக சாத்வீகரீதியாக நாம் அணிதிரண்டு இருப்பது, இன்று ஆதிக்கவாதிகளையும், அவர்களுக்கு துணை போகின்றவர்களையும் அசர வைத்துள்ளது. சர்வதேச சமூகத்தையும்,
தென்னிலங்கையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த ஒற்றுமை தொடர வேண்டும். எமது இன்றைய இந்த ஐக்கியத்தை குழப்பும் எந்த ஒரு நடவடிக்கையையும், அதை எவர் செய்தாலும் தமிழ் மக்கள் அவற்றை ஒருபோதும் ஆதரிக்க கூடாது. இதுவே எனது கோரிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில், மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைத்துள்ள மண்ணுரிமை இயக்கம் இன்று வடக்கில் சூடு பிடித்துள்ளது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியதுடன், அதை தொடர்ந்து முன் கொண்டு செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ‘உரிமைக்கு குரல் கொடுப்போம்; உறவுக்கு கை கொடுப்போம்’ என்ற எமது கட்சியின் உறுதியான கொள்கையின் அடிப்படையில், இந்த இரண்டு கட்சிகளுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு வழங்குகிறது. நமது இந்த ஒற்றுமை, மக்களை அணிதிரட்டும் ஜனநாயக போராட்ட களத்தில் ஏற்பட்டுள்ளது என்பதுதான் முக்கியமானதாகும்.
மண்ணுரிமை பறிப்பு என்பது வடக்கில், கிழக்கில் தமிழ் மக்களுக்கு மாத்திரம் உரிய பிரச்சினை அல்ல. அது முஸ்லிம் மக்களும் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை ஆகும். எனவே முஸ்லிம் மக்களை தலைமை தாங்கும் கட்சிகளும், தமிழ் கட்சிகளின் ஜனநாயக போராட்டங்களுடன் தம்மை இணைத்துக்கொள்ள தயாராக வேண்டும். பொது நோக்கம் கொண்ட இத்தகைய ஒற்றுமை மலையகத்திலும் மேலோங்க வேண்டும். மலையக கட்சிகளும் தமது குறுகிய நோக்கங்களை தூரதள்ளி வைத்துவிட்டு பொது நோக்கங்களுக்காக ஒன்று திரள தயாராக வேண்டும்.
தமிழ், முஸ்லிம் மக்களின் மண்ணுரிமை கோஷங்களும், ஜனநாயக போராட்டங்களும் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்ற விழிப்புணர்வை நாம் தென்னிலங்கையில் ஏற்படுத்துகிறோம். தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதே, உண்மையான தேசிய ஒற்றுமைக்கு அடித்தளம் என்ற செய்தியை நாம் தென்னிலங்கைக்கு சொல்கிறோம். இந்த பணியில் ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. தமிழ் கட்சிகள், தமது, குறுகிய முரண்பாடுகளை தூர தள்ளி வைத்துவிட்டு ஒன்றுபடுவதன் மூலமாக இந்த பணியை மென்மேலும் உறுதியாக செய்ய முடியும்.
No comments:
Post a Comment