
கண்டி அஸ்கிரிய மகாவிகாரை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றை ஆரம்பித்து 700 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டி அஸ்கிரிய பீடத்தில் இடம் பெற்ற தேசிய வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
பௌத்த மக்களது இரண்டு கண்கள் போல் அஸ்கிரிய பீடமும் மல்வத்தை பீடமும் அமைந்துள்ளன. இவை இரண்டும் முழு பௌத்த உலகுக்கு மட்டுமல்லாமல் ஏனைய சமுதாயங்களுக்கும் ஒற்றுமையின் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
அஸ்கிரிய பீடமும் பௌத்த சமயமும் இலங்கை பௌத்தர்களுக்கு மட்டும் சேவை செய்த ஒரு அமைப்பல்ல. அது இலங்கையிலுள்ள அனைத்து மதங்களையும் கௌரவித்துள்ளது. உதாரணமாக கண்டி மீராமக்காம் தர்ஹா மற்றும் கண்டி மீராமக்கம் பள்ளி என்பன அஸ்கிரிய பீடத்திற்குச் சொந்தமான காணியிலே அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது கண்டி திருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான சர்வதேச அஸ்கிரிய கிரிகெட் மைதானம் அமைந்துள்ள காணியும் அஸ்கிரி பீடத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணிகளாகும். இப்படிப் பல உதாரணங்களைக் கூறமுடியும். எனவேதான் பௌத்தர்களும் பௌத்தமதமும் மற்றவர்களது உடைமைகளை அபகரிக்கும் தன்மையுடையனவல்ல. மற்றவர்களுடன் தமது உடைமைகளைப் பங்கிட்டுக் கொள்ளும் மதம் எனலாம்.
1818 ஆண்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் கண்டிய பிரபுத்துவ பிரதானிகளுக்குமிடையே கண்டி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது பௌத்தமதம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஒரு பிரிவு உட்படுத்தப்பட்டது. அன்று அஸ்கிரிய பீடத்தின் தேரரான வாரியப்பொல ஸ்ரீ சுமங்கள தேரர் இதற்காகப் பாடுபட்டார். மாத்தளைக் கலவரத்தின் போது அஸ்கிரி மகாநாயக்கத் தேரர் தனது உயிரைத் தியாகம் செய்தார். இலங்கையில் மன்னராட்சி நிலைத்திருக்கவும் அதன் பின் எமது சுயாட்சி நிலைத்திருக்கவும் கௌதம புத்தரின் புனித தந்ததாது பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயக் கடமை இருந்தது. இதை அஸ்கிரிய பீடம் பாதுகாத்து வந்தது.
அது மட்டுமல்ல இன்று கூட புனித தந்தத்தைப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கப் பேழையின் திறவுகோல் அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வசமே உள்ளது. இவ்வாறு பல வகையிலும் பௌத்தத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் முகமாக அஸ்கிரிய பீடம் மறக்க முடியாத சேவைகள் பலவற்றைச் செய்துள்ளது என்றார்.
700 வருட நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை, ஞாபகார்த்த இலட்சிணை, ஞாபகார்த்தக் கொடி, ஞாபகார்த்த கீதம் என்பன வெளியிடப்பட்டதுடன் ஞாபகார்த்த ஏழுமாடிகளைக் கொண்ட ஓய்வு விடுதி, ஞாபகார்த்த வீதி என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. இவற்றிற்காகப் பத்துக் கோடி ரூபாக்கள் செலவிடப்பட்டதாக அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் தெரிவித்தார்.
கண்டி மீரா மக்கம் பள்ளி முன் சுவர் முதல் ஏனைய அனைத்துப் பிரதேசங்களும் ஜனாதிபதியால் அஸ்கிரிய விகாரைப் பிரதேசம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
இவ்வைபவத்தில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, மகிந்தானந்த அலுத்கமகே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாராளுமன்ற அங்கத்தவர் கரு ஜயசூரிய, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment