இலங்கை அரச தலைவர்களுக்கு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உரிய கௌரவம் வழங்க தவறுவதாக, ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேற்குலக நாடுகளில் சுதந்திரமாக வி.புலிகள் செயற்படுவதானால், அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்ச லண்டன் சென்ற போது அங்கு வி.புலிகளின் ஆதரவாளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தியுள்ளனர். இலங்கையின் ஜனாதிபதியின் கௌரவத்தை காப்பாற்றுவதற்கு லண்டனாலோ, மேற்குலக நாடுகளாலினாலோ முடியவில்லை. ஆனால் இவை ஏனைய நாடுகளின் மனிதாபிமானத்தை பற்றி பேசுகின்றன.
இதே போன்று இந்தியாவிற்கு விஜயம் செய்த அமைச்சர் ரெஜினால்ட் குரேவுக்கு எதிராக தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது இந்தியாவின் பொறுப்பற்ற தனத்தையும், முட்டாள் தனத்தையுமே வெளிப்படுத்துகிறது.
இலங்கை பற்றி மிக மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதுவர் மிசேல் கிசன் தற்போது இலங்கை வருவதற்கும் திட்டமிட்டுள்ளார். அமெரிக்கா, தனது காலனித்துவ நாடாகவோ அல்லது அடிமை நாடாகவோ இலங்கையை பார்த்தால் அவர்களின் முட்டாள் தனமாகும். சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரங்களில் அத்து மீறி தலையிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையின் வடமாகாண சபை தேர்தலை நடத்துமாறு கட்டளையிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை இல்லை. சர்வதேச நாடுகளில் தஞ்சமடைந்துள்ள வி.புலிகள் இவற்றின் பின்னணியில் செயற்படுவதே இதற்கெல்லாம் காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜூன் 29ம் திகதி, அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இலங்கை செல்லவுள்ளார். வடக்கு கிழக்கு பிரதேசங்களின் காணிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றூம் திருகோணமலையில் உள்ள இந்திய எண்ணெய் களஞ்சிய சாலைகளை இலங்கை மீள பெறவுள்ளமை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.
No comments:
Post a Comment