
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படைகளினால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு மற்றும் திருகோண மலையிலுள்ள இந்திய எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெறவுள்ளமை தொடர்பில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள இந்தச் சம்பவங்கள் குறித்து இந்திய அரசின் அதிருப்தியையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்குக் கிழக்கில் இலங்கைப் படைகளினால் மேற்கொள்ளப் பட்டுவரும் நில அபகரிப்பு தற்போது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. குறிப்பாக வடக்கில் அரச காணிகள், தனியார் காணிகள் என்பனவற்றைக் கையகப்படுத்துவதில் படையினர் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
படையினரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ள நிலையில் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வருகிறார். இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த நில அபகரிப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கும் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ள நிலையில் கொழும்பு வரும் மேனன் இதுகுறித்து அரசுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இதர அர சியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார்.
சிவ்சங்கர் மேனனின் கொழும்புப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக வருகிறார் எனவும் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று மாலை “உதயனிடம் தெரிவித்தன.
தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புக் குறித்து மேனன் ஜனாதிபதி மஹிந்தவுடன் பேச்சு நடத்துவாரா என அந்த வட்டாரங்களிடம் வினவியபோது “அதுபற்றி இப்போது எதுவும் கூறமுடியாது. அவர் இங்கு வந்து பேசிய பின்பே அது குறித்துத் தெரியவரும்” என அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
முன்னதாக, திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் இலங்கை அரசு மீளப்பெற உத்தேசித்து வருகின்றது என கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
கடந்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், பெற்றோலிய வள அமைச்சு இந்தக் குதங்களை 33 ஆண்டுகள் குத்தகைக்கு லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது.
இவ்வாறு செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றன எனவும், ஆனால், அவற்றைக் கருத்திற் கொண்டு இந்தக் குதங்களை மீளப்பெற அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் கடந்த வாரம் வெளிவந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்தப் பின்னணியின் கீழ் அவசர அவசரமாகக் கொழும்புவரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்த விவகாரம் தொடர்பிலும் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.
No comments:
Post a Comment