இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றை எட்டி சகல இன மத மக்களும் சரிசமமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை விரைவாக ஏற்படுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆம் பெனடிக்ற் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார்.
இலங்கையில் விரைவில் நிலையான அமைதியும் சமாதானமும் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறினார். லண்டனுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிசுத்த பாப்பரசரைச் சந்திப்பதற்காக அங்கியிருந்து நேற்று முன்தினம் ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பாப்பரசருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் பாப்பரசரின் வத்திக்கான் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாப்பரசருடன் வத்திக்கானின் வெளிநாட்டு உறவுகளுக்கான செயலாளர் நாயகம் பேராயர் டொமினிக்கியூ மம்பேட்டியும் கலந்துகொண்டார். ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது பாப்பரசர் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் அதிகம் பேசியதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவித்தன.
சகல கட்சிகளின் பங்களிப்புடனும் இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிலையான ஒரு அரசியல் தீர்வு மிக விரைவாக எட்டப்பட வேண்டும் என வத்திக்கான் விரும்புகிறது. அப்படியான ஒரு சூழ்நிலை விரைவாக ஏற்படும் என்றும் நாம் நம்புகிறோம்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் பொருளாதார, சமூக அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் இலங்கை அரசு காட்டும் அக்கறை போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் அரசு அதிக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பாப்பரசர் ஜனாதிபதி மஹிந்தவிடம் எடுத்துக்கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒன்றிணைந்த முயற்சியின் மூலமே நாட்டில் அமைதி சாத்தியப்படும் எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார். இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்காக சமயம், கல்வி, கலாசாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பங்களிப்புச் செய்ய தயாராகவுள்ளதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment