Translate

Friday 22 June 2012

மக்களின் காணிகளை படையினர் மீள ஒப்படைக்க வேண்டும்!


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையினையடுத்து பொதுமக்களின் காணிகளினை பயன்படுத்தும் பாதுகாப்பு தரப்பினர், அவற்றை அம்மக்களின் பாவனைக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 வருட கால யுத்தம்.அதன் பின்னரான சமாதான சூழல் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள இன்றைய சூழ் நிலையில் வடக்கிலும்,கிழக்கிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தமது பிரதேசங்களை நோக்கி மீள்குடியேற்றத்திற்காக வருகைத் தரும் இந்த நிலையில், அன்று தேவையேற்பட்டதால் இப் பொதுமக்களின் காணிகள் மற்றும் கட்டிடங்கள் என்பன பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது நாட்டில் அச்சமற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் காணிகள் அவர்களது பயன்பாடுகளுக்காக மக்களிடம் கையளிக்க வேண்டும் என தமது கட்சி உரிய தரப்பினரிடத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இவ்வாறான காணிப் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு தேவையான விபரங்களை திரட்டுவதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
அதே போல் வடக்கில் இது குறித்து ,குறிப்பாக வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இவ்வாறான பொதுமக்கள் காணிகள் குறித்து கண்டறிந்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளில் பாதுகாப்பு படையினர் நிலை கொண்டிருப்பது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தமது கட்சி ஏற்கனவே கொண்டுவந்துள்ளதுடன்,அதனை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கிலும்,கிழக்கிலும் மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் அம்மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் தமது கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருப்பதால்,அதனை அம்மக்கள் பெற்றுக் கொள்வதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் தாம் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment