Translate

Tuesday 10 July 2012

பாதுகாப்புச் செயலாளரின் புதிய புள்ளிவிபரம் - 8400 புலிகளுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை -


பாதுகாப்புச் செயலாளரின் புதிய புள்ளிவிபரம் - 8400 புலிகளுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை -
 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்துள்ள புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், 3 ஆயிரத்து, 292 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 ஆயிரத்து 400 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை.
 
தற்போது இலங்கை சென்றுள்ள வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், தூதரக பிரதிநிதிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ராஜதந்திரிகள் கலந்துக்கொண்ட கருத்தரங்கில் உரையாற்றும் போதே கோத்தபாய இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
போர் நடைபெற்ற போது, விடுதலைப்புலிகள் அமைப்பில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர் எனக் கூறும் பாதுகாப்புச் செயலாளர், இவர்களில் 12 ஆயிரம் பேர் போரின் இறுதியில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர் எனவும் மேலும் 4 ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், 8 ஆயிரத்து 400 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளியிடவில்லை என்பது அவரது உரையை மேற்கோள்காட்டி பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளம் வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரியவந்துள்ளது.
அதிகளவான விடுதலைப்புலி உறுப்பினர்கள் உட்பட 7 ஆயிரத்து 896 பேர் யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத்தின் புள்ளிவிபர திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாக கோத்தபாய ராஜபக்ஷ, ராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.
 
 
அதேபோல் உயிரிழந்தவர்களில் குறைந்தது 3 ஆயிரத்து 296 பேர் பொதுமக்கள் என அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதேபோல் 2 ஆயிரத்து 635 பேர் போரில் காணாமல் போனதாக ஆய்வில் தெரியவந்தது எனவும்  கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
 
 
போரில் 7 ஆயிரத்து 721 பேர் கொல்லப்பட்டு, மேலும் 18 ஆயிரத்து 479 பேருக்கு காயம் ஏற்பட்டதாக ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டுடன், புள்ளிவிபர திணைக்களத்தின் ஆய்வறிக்கையின் தரவுகள் பொருந்துவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஐக்கிய நாடுகள் அமைப்பு அந்த அறிக்கையை வெளியிடாதது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
 
 
இதனை தவிர யுனிசெப் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரமான ஆய்வில் வெளியாகிய விபரங்களை பற்றி தெரிவித்த கோத்தபாய,  காணாமல் போன 2 ஆயிரத்து 564 பேரை தேடி தருமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் அவர்களில் ஆயிரத்து 888 பேர் முதியவர்கள் எனவும் 676 பேர் சிறுவர்கள் எனவும் கூறியுள்ளார்.
 
 
காணாமல் போன சிறுவர்களில் 60 வீதமான சிறுவர்கள் விடுதலைப்புலிகளால் படையில் சேர்க்கப்பட்டவர்கள் என பெற்றோர் தெரிவித்திருந்தாகவும் இலங்கையின் சிரேஷ்ட ராஜதந்திரிகள் முன்னிலையில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment