Translate

Monday 9 July 2012

அரச உயர்மட்ட உத்தரவுப்படியே நிமலரூபன் அடித்துக் கொலை குற்றஞ்சாட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.


அரச உயர்மட்ட உத்தரவுப்படியே நிமலரூபன் அடித்துக் கொலை குற்றஞ்சாட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.
news
 நிமலரூபனை மிகக் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது அரசு, கொலைக்குற்றம் சுமத்தி, பணிநீக்கம் செய்து, உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வலியுறுத்தினார்.
இவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வில்லையெனில், அரச உயர்மட் டத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கிணங்கவே இந்தத் தாக்குல் சம்பவம் இடம்பெற்றதென எமக்குக் கிடைத்திருக்கும் செய்தி நிரூபணமாகும் எனவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற  பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்  அங்கு மேலும் தெரி வித்தவை வருமாறு:
அரச பாதுகாப்பில் இருந்த கைதி ஒருவரைக் கடுமையா கத் தாக்கிக் கொலைசெய்ததே குற்றமாகும். அதிலும், அவரது உடலை அவரின் பெற்றோரிடம் கையளிக்க மறுப்பதும், அவரது இறுதிக்கிரியைகளைச் சுதந்திரமாகச் செய்ய இடமளிக்காதிருப்பதும் மாபெரும் குற்றமாகும்.
கடந்த மாதம் வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகளும், விசேட அதிரடிப்படையினரும் மிகக் கொடூரமான முறையில் தாக்கினர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நிமலரூபன் மரணமடைந்தார். அத்துடன், ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதோடு ஏனையோர் படுகாயமடைந்து பரிதாபமான நிலையில் உள்ளனர். 
இந்தத் தாக்குதலில் மரணமடைந்த நிமலரூபனின் சடலத்தை அவரின் பெற்றோரிடம் கையளிக்கவும் அரசு மறுக்கின்றது. அவரின் சடலத்தை கம்பஹா மாவட்டத்திலேயே அடக்கம் செய்யவேண்டுமென அது கூறுகின்றது.
இது மிகவும் கொடூரமான செயலாகும். அரச பாதுகாப்பிலிருந்த ஒரு கைதியைக் கொன்றது மட்டுமல்லாமல், அவரின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குக்கூட அரசு இடமளிக்க மறுக்கின்றது. நிமலரூபனின் இறப்புக்கு அரசே முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும். அத்துடன்,  அவரின் மரணம் தொடர்பில் உண்மையான வைத்திய பரிசோதனையையும் வெளியிடவேண்டும்.
இந்தத் தாக்குதலின்போது பல முறிவுக் காயங்களுக்குள்ளான ஏனைய கைதிகள் மஹர, போகம்பரை சிறைச்சாலைகளிலும் மற்றும் வைத்தியசாலைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 
நிமலரூபனின் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கூறினார். 
உடலில் பல முறிவுக் காயங்களுடன் இருந்த ஒருவரை மாரடைப்பால் இறந்தார் என எவ்வாறு கூறுவது? இது தொடர்பிலான முழுமையான வைத்திய பரிசோதனை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும்.
அத்துடன், அரசியல் கைதிகள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமலிருக்க அரசு பொறுப்பேற்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment