Translate

Sunday, 15 July 2012

நடிகர்களுக்கு உண்மையை உணர்த்திய நடன இயக்குநர் லாரன்ஸ்-

ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம்.


அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்'' என்று அந்த மேடையிலேயே லாரன்ஸ் அறிவித்தது, அவர் வழங்கிய நிவாரண நிதியை விட பரபரப்பை அதிகரிக்க வைத்தது.

ரஜினிக்கு அடுத்தபடி வர்த்தக ரீதியாக முன்னணியில் இருப்பவர் இளைய தளபதி விஜய். ஆனால் அவர் சார்பில் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஈழத் தமிழர்களுக்காகத் தந்தது வெறும் ஒரு லட்ச ரூபாய்தான். இவரால் இவ்வளவுதான் தர முடிந்ததா? என்று, பார்வையாளர்கள் கொஞ்சம் அதிருப்தியில் நெளிந்ததைப் பலரால் அவதானிக்க முடிந்தது.

இதுபற்றி லாரன்ஸ் என்ன நினைக்கிறார்? இந்தக் கேள்வியுடன் அசோக் நகரில் லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கான இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.

உண்ணாநிலைப் போராட்ட மேடையில் இலங்கைத் தமிழர்களுக்காக நீங்கள் தந்த பன்னிரண்டு லட்சம்தான் அங்கு வழங்கப்பட்ட அதிகபட்சத் தொகை, இல்லையா...?

``வெளிநாடு வாழ் தமிழர்கள் தரும் நிதியில் இருந்துதான் ஊனமுற்றோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை என்னால் நடத்த முடிகிறது. அப்படி நிதி தருபவர்களில் பெரும்பாலானோர் இலங்கைத் தமிழர்கள். அவர்கள் தந்த பணம் ரூபாய் பத்து லட்சத்தில் என் குழந்தைகளுக்காக (ஆதரவற்றோருக்காக) நிலம் வாங்கி, கட்டடம் கட்டலாம் என்றிருந்தேன். அப்போதுதான் இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பசியில் வாடுவதைக் கேள்விப்பட்டேன். ஆகவே, அந்த பத்து லட்ச ரூபாயுடன் என் பங்கிற்கு இரண்டு லட்சத்தைச் சேர்த்து இலங்கைத் தமிழர்களுக்கே கொடுத்து விட்டேன்.

ஷூட்டிங்கிற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, சிரித்த முகத்துடன் எங்களை உபசரிப்பது, இலங்கைத் தமிழர்களின் வழக்கம். எத்தனை நாட்கள் நாங்கள் தங்கியிருந்தாலும், சொந்த ஊரை விட்டு வந்து விட்டோமே என்ற கவலையே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். அந்த `அன்பு' இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிறது என்றால், அதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? நம்முடைய ஹீரோக்களின் சம்பளம் உயர்வதற்குக் காரணமே தமிழ்ப் படங்களுக்கு இருக்கும் `ஓவர்சீஸ் லைசென்ஸ்' எனப்படும் வெளிநாட்டு உரிமமும், அந்தப் படங்களுக்கு வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்கள் கொடுக்கும் வரவேற்பும்தான்.

நன்கொடை வழங்கி, டி.வி.யில் நான் பேசியதைப் பார்த்த நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளிலிருந்து என்னிடம் பேசி நன்றி சொன்னார்கள். அந்த உற்சாகத்தால் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீடு, வீடாகச் சென்று இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரண நிதி திரட்ட முடிவெடுத்திருக்கிறேன்.''

உச்சத்தில் இருக்கும் ஹீரோக்களாலேயே கொடுக்க முடியாததை நீங்கள் கொடுத்திருக்கிறீர்களே?

``என்னுடைய `ரேஞ்சு'க்கு பலரிடம் நன்கொடை வாங்கி பத்து லட்சம் கொடுக்க முடிந்திருக்கிறது என்றால், விஜய், அஜித் இருக்கும் `ரேஞ்சு'க்கு தங்கள் ரசிகர்களிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே? நிதி குவிந்துவிடுமே!''

ஆனால், நீங்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு விஜய், அஜித் போன்றவர்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லையே?

``ஆமாம். என் மனதில் பட்டதை நான் வெளிப்படையாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் பேசும்போது என் வேண்டுகோள் பற்றி ஒன்றும் குறிப்பிடவே இல்லை என்பது எனக்கும் வருத்தம் தான். மற்ற ஹீரோக்களும், என் வேண்டுகோளுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லையே?

இங்கே ஹீரோவின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். அந்தப் பாலை அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுக்கலாமே? ரசிகர்களிடம் `இப்படி வீண் செலவு செய்யாதே' என்று நீ (!) சொன்னால்தானே அவர்கள் நிறுத்துவார்கள்? பட ரிலீஸின் போது, பால் அபிஷேகம் செய்வது, பந்தல் போட்டு `ஸ்டார்ஸ்' தொங்கவிடுவது போன்ற தவறுகளைச் செய்ய, என் ரசிகர்களை நான் அனுமதிப்பதில்லை. `என் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர் ஆக வேண்டுமென்றால், முதலில் என்னுடைய டிரஸ்ட்டில் மெம்பர் ஆகுங்கள்!' என்று என்னைத் தேடி வரும் ரசிகர்களிடம் சொல்லி விடுகிறேன்.''

நேடியாகவே கேட்டுவிடுகிறோம். `தனது சொந்தப் பணம் ரூபாய் இரண்டு லட்சத்தை லாரன்ஸ் நன்கொடையாகக் கொடுக்கும்போது, இளம் நடிகர்களிலேயே உச்சத்தில் இருக்கும் விஜயால் இலங்கைத் தமிழர்களுக்காக வெறும் ஒரு லட்சம்தான் கொடுக்க முடிந்ததா? என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?

``விஜய் சார் படங்களில் நான் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றியிருக்கிறேன். அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட. `போக்கிரி' படத்தின் வெற்றி விழாவில், என் டிரஸ்ட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடந்திருக்கிறது. எவ்வளவு நன்கொடை கொடுக்க வேண்டும் என்பது விஜயின் சொந்த விவகாரம். அதை விமர்சனம் செய்ய விரும்பவில்லை'' என்றவர், சற்று யோசனைக்குப் பின்,

``அரசியல்வாதிகளுக்குக் கூட அவனது தொண்டன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஓட்டுப் போடுகிறான். ஆனால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை உனக்கு ஓட்டுப் போடுகிறவன், ரசிகன். உன்னுடைய மோசமான படங்கள் கூட ரசிகன் கொடுக்கும் `ஓபனிங்'கால் தப்பித்து விடுகின்றன. உன் கண்ணெதிரில் தெரியும் தெய்வங்கள், ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகனுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்?'' என்ற கேள்வியுடன் முடித்துக் கொண்டார். 

No comments:

Post a Comment