Translate

Tuesday, 31 July 2012

புலிகளைப் போல் பேச்சில் அழுத்தம் தருவது தவறு அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தெரிவுக்குழுதான் பத்திரிகை ஆசிரியர்கள் முன் சீறினார் ஜனாதிபதி


புலிகளைப் போல் பேச்சில் அழுத்தம் தருவது தவறு
அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தெரிவுக்குழுதான் பத்திரிகை ஆசிரியர்கள் முன் சீறினார் ஜனாதிபதி
news
 வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரே சிறந்த இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். புலிகளைப் போன்று பேச்சுக்கு வராமல் நிபந்தனைகளை விதித்து வேறுவிதமான அழுத்தங்களை வழங்குவது பெரும் தவறான விடயம். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வராத கட்சி தேசியப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தவறிய ஒரு தரப்பாகவே கருதப்படும்.

 
 இவ்வாறு நேற்று கடுந்தொனியில் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
 
பத்திரிகை ஆசிரியர்களுடன் நேற்றுக்காலை அலரி மாளிகையில் நடத்திய சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்ட ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:
 
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகள் உள்ளடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடம். இதற்காக அனைத்துக் கட்சிகளும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடவேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சினை.
 
புலிகள் போல் நிபந்தனைகளை விதித்துக்கொண்டு பேச்சுக்கு வராமல் வேறு அழுத்தங்களைக் கொடுப்பது தவறு. உலகத் தலைவர்களுடன் நான் பேச்சுகளை நடத்தும் போது இந்த நிலைமையைத்தான் விளக்கிக் கூறுகிறேன். இது எனது தனிப்பட்ட விடயமல்ல. இது அனைவரினதும் பொறுப்பு. இதற்கு முன்வராத கட்சி பொறுப்பிலிருந்து தவறிய ஒரு கட்சியாகவே கருதப்படும்.
 
தேர்தல் தேவைதான்
தேர்தலை நாங்கள் நடத்துவதால் சிவில் சமூக அமைப்புகளுக்குப் பிரச்சினை. தேர்தல் நடத்தாவிட்டாலும் சிவில் அமைப்புகள் கூக்குரலிடும். தேர்தல் வேண்டாமென்று ஓர் எதிர்க்கட்சி நீதிமன்றம் செல்வதை இங்குதான் முதற்றடவையாகப் பார்த்திருக்கின்றேன். 
 
நாங்கள் தேர்தலுக்குப் பயந்தவர்கள் அல்லர். மக்களின் கருத்தை நாம் அவ்வப்போது அறியவேண்டியிருப்பதால் தேர்தலை நடத்துவதில் தவறில்லை. தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை.
 
கட்டுப்பாடு
இணைய ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படும் சேறு பூசும் செயற்பாடுகள் குறித்து அரசு முழுக்கவனமும் கொண்டுள்ளது. ஊடகத் தர்மத்தை மீறும் எவரும் தாம் செய்வது சரியா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காகத் தான்தோன்றித்தனமாக செயற்படக்கூடாது.
 
எப்போதும் நாங்கள் இந்தியாவுடன் சிநேகபூர்வ முறையில் செயற்பட்டு வருகிறோம். பல்வேறு சிக்கல்கள் குறித்து நாம் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி வருகிறோம். அண்மையில் நான் இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் பேச்சு நடத்தியபோது என்னுடன் இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிலைமைகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டினார்.
 
இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு கையாளும். எவ்வாறாயினும், எமது நாட்டின் பாதுகாப்பு, இறைமை எவருக்கும் தாரைவார்க்கப்படமாட்டாது. எந்த சக்திக்கும் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
 
தமிழ்நாட்டில் பிரச்சினைகள் இருந்தாலும் அது எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் மத்தியஅரசுடன்தான் தொடர்புட்டு செயற்பட்டு வருகிறோம். நாங்கள் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை  என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி.

No comments:

Post a Comment