சென்னை:""இலங்கை அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சியளிப்பது, தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்; உடனடியாக, அவர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:
இலங்கையில், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை, போர்க் குற்றவாளிகளாக அறிவித்து, ஐ.நா., சபைக்கு, இப்பிரச்னையை இந்தியா கொண்டு செல்ல வேண்டும்.அத்துடன், இலங்கை முள்வேலி முகாம்களில் வாடி வரும் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவது, சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் சாசன உரிமைகளை, தமிழர்களுக்கும் அளிப்பது என்பது போன்ற கவுரவமான வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் வரை, மற்ற நாடுகளுடன் சேர்ந்து, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று, தமிழக சட்டசபையில், கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை, தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
ஆனால், தமிழர்களின் உணர்வுகளை மிதித்து நசுக்கும் வகையிலும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலும், மத்திய அரசு இருப்பதுடன், தொடர்ந்து இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, இங்கு பயிற்சியளிப்பதில் முக்கியத்துவம் வழங்கி வருவதாக, உலகத் தமிழர்கள் கருதுகின்றனர்.இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஒன்பது விரர்களுக்கு, சென்னை தாம்பரம் விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சியளிக்கப்பட்ட போது, அதை கண்டித்ததுடன், அந்த வீரர்களை உடனடியாக சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்ப, கோரிக்கை விடுத்திருந்தேன்.ஆனால், அவர்களை திருப்பியனுப்பாமல், பெங்களூருவில் உள்ள எலஹெங்கா விமான பயிற்சி மையத்தில், மத்திய அரசு பயிற்சியளித்து வருகிறது. தொடர்ந்து, டில்லியில் உள்ள தேசிய ராணுவ அகடமியில் பயிற்சி பெற்று வரும், இலங்கை விமானப் படை அதிகாரி ஜெகத் ஜுலங்கா டயாஸ் மற்றும் கடற்படை அதிகாரி ரணசிங்கே மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 25 பேர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டனில், ராணுவ பயிற்சிக்காக வந்துள்ளதாக அறிந்தேன். டில்லியில் வழங்கப்படும் பயிற்சின் ஒரு பகுதியாக, இங்கு பயிற்சியளிக்கப்படுவதாக தெரிகிறது.
இலங்கை படையினருக்கு இங்கு பயிற்சியளிப்பதும், தமிழகத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடக்கும் பயிற்சிகளை பார்வையிடுவதற்கு அனுமதி அளித்திருப்பதும், தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும். மத்திய அரசின் இந்த பிடிவாதப் போக்கு, தமிழக மக்களிடம், பெரும் கொந்தளிப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எனவே, இந்தியாவில் எங்கும், இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்கக் கூடாது என்று, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், பயிற்சி பெற வந்துள்ள அவர்களை, உடனடியாக அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment