தமிழன்டா – தமிழ் வளர்க்கும் சீனா
தமிழ் பேசுவதே கௌரவக்குறைச்சலாக எண்ணும் தமிழர்களிடத்தில் , சீன மக்கள் தமிழ் மீது காதல் கொண்டு தமிழை முறைப்படி பயின்று, பட்டம் பெற்று, சீனாவில் தமிழ் வானொலி ஒன்றை 50 வருடங்களாக நடத்துகின்றனர். படிக்கும் போது ஆனந்தமடைந்தேன், அவர்கள் நோக்கம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் தமிழை தமிழனிடம் படி படி என்று நாம் கெஞ்சியும் அவன் மதிக்கவில்லை , மாறாக கேட்காமலே தமிழ் பேசும் சீனன் என்னுடைய பார்வையில் ஒரு படி மேலே நிற்க்கிறான். நான் படித்த அந்த செய்தி தமிழன்டா பகுதியில் உங்களுக்காக.
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி 2012 ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் 50 வருடங்கள் ஆகின்றன. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சீனர்கள்தான்.தமிழ் மொழியில் தேர்ச்சிபெற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்புகளை முறையாகக் கற்றபின் சீன வானொலியில் சேவையாற்றி வருகின்றனர்.
நம்ம டி.வி’ல வர்ற நண்டு சிண்டு எல்லாம் தமிழ் தெரியாமல் தமிழை டமில்… டமில்… என்று கொல்லும்போது, அவர்களை டூமீல்… டூமீல்… என்று சுடவேண்டும் போல இருக்கும்
“சீனா ரேடியோ இண்டர்நேஷனல்’ 1941-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் தொடங்கப்பட்டாலும், தமிழ் ஒலிபரப்பானது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது. சீனப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு 1960-ல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன் பின் 1963-ல் 20 மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்.
அந்தச் சமயத்தில் அவர்களுக்கு தமிழைக் கற்றுத்தர இலங்கையில் இருந்து மாகறல் கந்தசாமி என்ற தமிழறிஞர் சென்றார். இவரை அடுத்து சின்னத்தம்பி, சாரதா சர்மா, முனைவர் ந. கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர் வல்லுநர்களாகச் சீன வானொலியில் சேவையாற்றினர்.
கடல் கடந்து தமிழ் வளர்த்த மகான்களின் வரிசையில் இவர்களையும் சேர்க்கவேண்டும்.
முதலில் தமிழ் கற்ற அந்த மாணவர்களைக் கொண்டே அந்த முதல் தமிழ் ஒலிபரப்பு 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் அதன் பெயர் “பீகிங் வானொலி’ என்று இருந்தது. அதன் பின் “பெய்ஜிங் வானொலி’ எனப் பெயர் மாற்றம்பெற்று இன்று “சீன வானொலி’ என்று தமிழிலும் “சீனா ரேடியோ இண்டர்நேஷனல்’ என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.
இவர்கள் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம், சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை மற்றும் கலாசாரத்தினை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.
இத பாரு… இவனுங்க இவங்க ஊருல இவங்க ஆளுங்களை பத்தி செய்தி போட்டு வர்ரான் , நம்ம பக்கிங்க பாரின் போய் படம் புடிச்சிட்டு , இங்கிலீஷ்ல பேசிட்டு வருது.
“தமிழ் மூலம் சீனம்’ என்ற பெயரில் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது. மிகவும் எளிதாக, மெதுவாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர்.
அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாடத்திட்டங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எவரும் எளிதாக இந்த நூல்களைக் கொண்டு சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
நம்ம பக்கிகள்கிட்ட கெஞ்சுறத விட , இவங்களுக்கு ஐடியா குடுத்தா தமிழ் நல்ல வளரும்.
சீன வானொலிக்கு நேயர்கள் கடிதம் எழுதச் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக, நேயர்களுக்கு இலவச வான் அஞ்சல் கடித உரைகளை அனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம் நேயர்கள் விமர்சனக் கருத்துகளை பைசா செலவில்லாமல் அனுப்பி வருகின்றனர்.
சீன வானொலி தமிழ்ப் பிரிவினில் பணியாற்றும் சீனர்கள் அனைவரும் தங்களது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொண்டு ஒலிபரப்பி வருகின்றனர். சுந்தரம், கலையரசி, மலர்விழி, வாணி, கலைமகள், கலைமணி போன்ற அறிவிப்பாளர்கள் சீன வானொலியின் நேயர்கள் மனதினில் இன்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும் பெயர்கள்.
தமிழ்ப் பிரிவின் தலைவர் தனது பெயரை கலைமகள் என்று சூட்டிப் பயன்படுத்தி வருகின்றார்.
ஐயோ.. ஐயோ.. இந்த பெயர்களை கேட்க்கும் பொழுது எவ்வளவு சந்தோசமா இருக்குது.நம்ம ரேடியோல வர்ற பக்கிஸ் எல்லாம் சுச்சி …குச்சி … பிளேடு… பக்கிரி …. கடுப்பா இருக்கும்.
தமிழகத்தில் இந்த வானொலிக்காக “அகில இந்திய சீன வானொலி நேயர் மன்றம்’ செயல்பட்டு வருகிறது. இவர்கள் ஒவ்வோராண்டும் நேயர்கள் கூடும் நிகழ்வாக கருத்தரங்கங்களை நடத்துகின்றனர். இணையம் மற்றும் கைப்பேசியிலும் சீன வானொலியைக் கேட்கலாம். சீன வானொலி தமிழ்ப் பிரிவை மின் அஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.
Bulb பரணி : தமிழ் தமிழ் என்று சொல்லிட்டு நீ நடுவுல பூந்து லோக்கல் தமிழ்ல கலாய்ச்சது மட்டும் என்ன ?? நீங்க கேட்கலாம் , உங்களுக்கு உரிமை இருக்குது … பட் நானும் இந்த பக்கிகள் கூட ஊரிட்டேன் , விரைவில் மாற்றம் தெரியும் , மன்னிச்சு ..மன்னிச்சு !!
இணையதள முகவரி : http://tamil.cri.cn/index.htm
நன்றி: தினமணி
- ஈழன்
No comments:
Post a Comment