புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் உத்தரவிற்கமைய தெஹிவளையிலுள்ள பள்ளிவாசலொன்றை மூடிவிடுமாறு, முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக என முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஆசாத் சாலி தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நேற்று இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தெஹிவளையிலுள்ள பள்ளிவாசல் இரண்டு வாரங்கள் மூடப்பட்டது. நாங்கள் சென்று மீண்டும் திறந்தோம். இப்போது அந்தப் பள்ளிவாசலை மூடுமாறு புத்தசாசன அமைச்சு - முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நபவியும், தெஹிவளைப் பள்ளிவாசலை மூடிவிடுமாறு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றார். இதை நிரூபிக்கக் கூடிய ஆவணம் என்னிடமுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தவிதமான தீர்வுகளையும் முன்வைக்கத் தயாராக இல்லாத அரசாங்கம் சர்வதேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, அரசாங்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் இங்குள்ள முஸ்லிம் மக்கள் தேவையாக இருந்தனர்.
ஆனால், இவை நடந்து இரண்டு வாரங்களுக்குள் தான் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளானது. பிறகு அனுராதபுரம், குருணாகல் போன்ற பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்குள்ளானது.
இப்போது மூதூரில் தனி முஸ்லிம் பிரதேசத்தில் ஒரு சிலையைக் கொண்டு வந்துவைத்துள்ளார்கள். வீதியில் காணுமிடங்களிலெல்லாம் சிலைகளை வைக்கின்றார்கள். ஆனால், பள்ளிவாசலைக் கண்டால் உடைக்கின்றார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் யாருடைய சொந்த நிலத்திலும் அமைக்கப்படவில்லை.
ராஜகிரியவில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வெளியில் பூட்டிடப்படுகிறது. பிரித் ஓதப்படுகிறது. இவ்வாறு இந்த அரசாங்கம் மிகப் பெரும் அநியாயங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. சரத் பொன்சேகாவையே எதிர்த்தவன் நான். மஹிந்த ராஜபக்ஷ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. என்னுடைய சமூகம் எனக்கு முக்கியமானது. எதற்காகவும் என்னுடைய சமூகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க நான் தயாரில்லை என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment