Translate

Thursday, 16 August 2012

அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் எமக்கு வேண்டும்: சம்பந்தன்


அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் எமக்கு வேண்டும்: சம்பந்தன்
எமது தலை விதியை நாங்கள் நிர்ணகிக்கக் கூடிய வகையில் சட்ட ரீதியாக வாழ்கின்ற பிரதேசங்களில் அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து, வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இரா.சம்பந்தன் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்:
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எந்தவிதமான தீர்ப்பை வழங்கப் போகிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த மக்கள் தங்களின் நீண்ட கால கோரிக்கைகளின் அடிப்படையில் தமக்கு  சுயாட்சி வேண்டும் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தங்களது அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய நிலையில் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் அதற்காக எமக்கு ஜனநாயகம் வேண்டும் எனக் கூறப்போகின்றார்களா? அல்லது அரசாங்கம் கூறுவது போல் அபிவிருத்தியை மட்டும் ஏற்று கிழக்கு மாகாண மக்கள் எங்களுடன் நிற்கின்றார்கள் என்று தங்கள் வாக்குகளை அரசாங்கத்திற்கு வழங்கப்போகின்றார்களா? என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த கேள்விகளுக்குத்தான் நீங்கள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் பதிலளிக்கப்போகின்றீர்கள். 1956 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு தேர்தல்களின் எமது மக்கள் ஒரு குறிப்பிட்ட பாதையில் சென்றிருக்கிறார்கள் அவர்கள் தெளிவான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரம் நாட்டிலே குவிந்திருக்க முடியாது. ஆட்சியதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மனிதன் பாதுகாப்பாக வாழ வேண்டும். நாங்கள் கௌரவமான பிரதிநிதியாக இந்த நாட்டிலே வாழ வேண்டும்.
எமது காணி பாதுகாக்கப்பட வேண்டும். எமது தலை விதியை நாங்கள் நிர்ணகிக்கக் கூடிய வகையில் சட்ட ரீதியாக வாழ்கின்ற பிரதேசங்களில் அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண சபையில் மக்கள் எமக்கு ஆணை வழங்கப் போகின்றார்களா? அல்லது அரசாங்கம் கூறுவது போல் நாங்கள் செய்கின்ற அபிவிருத்தியை ஏற்றுக்கொண்டு மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் என்பதற்காக அரசாங்கத்தை ஆதரிக்கப் போகிறீர்களா?
கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சரின் ஆதரவுடன் தான் மாகாண சபை கலைக்கப்பட்டது. இது சட்டரீதியானது முதலமைச்சரின் ஆதரவின்றி சபையைக் கலைக்க முடியாது. இந்த விடயம் தொடர்பான செய்திகள் வெளிவந்த போது சபையில் விவாதிக்கப்பட்டது முதலமைச்சர் கூட சபையின் கலைப்பை எதிர்த்தார். மாகாண சபை கலைக்கப்படக் கூடாது இன்னும் ஒரு வருட காலத்திற்கு மாகாண சபை இருக்க வேண்டும் என ஏகமனதாக மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு மாறாக மாகாண சபை கலைக்கப்பட்டதன் இரகசியம் என்ன? ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர்கள் கூறுகின்றது போல் சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதற்காக தமிழ் மக்கள் தங்கள் பக்கத்தில் நிற்கின்றார்கள் அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு தேவையில்லை கொடுக்கப்பட்ட பொலிஸ், காணி அதிகாரத்தைப் பறிக்கலாம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரங்கள் அந்த மக்களுக்கு தேவையில்லை என்பதை காட்டுவதற்காக இந்த தேர்தலில் வெற்றியை பெற்றுவிட்டு சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதற்கு இந்த முதலமைச்சர் ஜனாதிபதிக்கு உதவியாக இருந்திருக்கின்றாரா? இல்லையா? என்ற கோள்விக்கு பதிலளிக்க வேண்டியது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் கடமை.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலே முதலமைச்சரின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிட்டது ஏன் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட முடியாது? ஏன் நீங்கள் அரசுடன் சேர்ந்து போட்டியிட வேண்டும்?
அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி அதன் மூலம் தமிழ் வாக்குகளைப் பிரித்து அதன்மூலம் தமிழ் மக்கள் பலவீனமடைந்து ஒரு உறுதியான முடிவைக் கொடுக்க முடியாத நிலைக்கு தமிழ் மக்களை உருவாக்குவது இவர்களது நோக்கமாக உள்ளது.
தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை கூடுதலாக ஆதரித்து அவர்கள் தமிழ் தேசிய கொள்கையில் நிற்கின்றார்கள் என்ற நிலைப்பாட்டை தெரிவித்தாலும் கூட அதை பலவீனப்டுத்த அரசாங்கத்திற்கு உதவுவதாற்காக அரசுடன் இணைந்து போட்டியிடுகிறீர்கள்.
ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட முக்கியமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டில் நாங்களிருக்கிறோம் இந்த விடயத்தில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
தேசிய கட்சிகளில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு வழங்கு வாக்குகள் வீநானவை அந்த வாக்குகள் மூலம் அவர்கள் தெரிவு செய்யப்படப் போவதில்லை. ஆளும் கட்சியில் முன்னாள் முதலமைச்சருக்கு வாக்களித்தால் அவர் தெரிவுசெய்யப்படுவார் என்பது பெரும் சந்தேகத்துக்குரிய விடயம்.
எனக்குத் தெரிந்தவரை அவர் தெரிவு செய்யப்பட முடியாது அந்த வாக்குகள் ஆளும் கட்சிக்கு உதவும் அவரின் வெற்றிக்கு உதவாது. அந்த வாக்குகள் மூலம் நிச்சயம் அவர் வர முடியாது. அனேகமாக அந்த வாக்கு மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள முஸ்லிம்கள் பெற்றி பெற நீங்கள் உதவப் போகின்றீர்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் கிழக்கு மாகாணசபைத் தேரத்தலில் போட்டியிடுவது தொடர்பாக முஸ்லிம் மக்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாகவே அரசாங்கத்தினுடன் இணைந்து போட்டியிடும் முடிவைக் கைவிட்டு தனித்துப் போட்டியிடுகிறது.
தமிழ் மக்களுக்கான கட்சியென தங்களைக் கூறிக்கொள்ளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏன் ஒரு துணிவான முடிவை எடுக்க முடியாது? ஏன் அப்படியான முடிவை எடுக்க முடியவில்லை?
இதற்கு காரணமென்றால் அரசாங்கத்திற்கு அடிமையாகவிருந்து தமிழ் மக்களையும் அடிமையாக்கி அரசாங்கத்தை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் பலவீனப்படுத்துவதாகும் இதற்கு தமிழ் மக்கள் ஒரு போதும் துணைபோக மாட்டார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உட்பட எந்தவொரு கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க நினைப்பது, அரசாங்கத்தை மீண்டும் பலப்படுத்துவதாக அமையும். எனவே தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நிருபித்துக் காட்டவேண்டுமென்றால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பெரும்பான்மை பலத்தோடு அமோக வெற்றிபெறச் செய்யவேண்டும். என தெரிவித்தார்.
வேட்பாளர் பரசுராமன் சிவநேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் கி.துரைராஜசிங்கம், கி.சேயோன், திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ச.விஜயகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment