லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில் ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில் பலபாகங்களில் நடாத்தப்பட்டது.
இலண்டன் ஒலிம்பிக் கிராமம், இலண்டன் HYDE PARK, OXFORD STREET, STRATFORD UNDERGROUND STATION மற்றும் ஒலிம்பிக்கிற்காக வருகை தந்த மக்கள் கூடும் இடங்களில் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் மனிதநேயன் சிவந்தன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 22 நாட்களும் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
‘Sri Lanka! Stop Genocide of Tamils’, ‘Boycott Sri Lanka’ என்ற வசனங்களடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்க விட்டவாறு தொண்டர்கள் இலண்டன் நகரவீதிகளில் பரவலாக வலம் வந்தனர்.
2009 மே மாதத்துடன் இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுகின்றது என்ற கருத்து பலதரப்பட்ட வேற்று நாட்டு மக்களிடம் இருப்பதை அவர்களுடன் அளவளாவியபோது அறியக்கூடியதாக இருந்தது.
2009 மே யில் யுத்தம் முடிவடைந்ததாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழினத்திற்கெதிராக எவ்வாறான வகைகளில் இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது பற்றிய விளக்கம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தொண்டர்களால் அவர்களுக்கு விளக்கமாக வழங்கப்பட்டது.
லண்டன் ஒலிம்பிக் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கை தொடர்பான விளக்கத்தை கொடுத்து தமிழர்கள் அவர்களுக்குரிய இறையாண்மையின் அடிப்படையில் மீண்டும் அவர்களுக்குரிய தேசத்தினை நிறுவ வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஒலிம்பிக் நிகழ்வு வழங்கியது.
No comments:
Post a Comment