
பாணமை பிள்ளையார் சிலை பலவந்தமாக எடுத்துசௌ;ளப்பட்டமை தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது:
'நாடு முழுக்க இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஸ்தலங்களுக்கு எதிராக நடைபெறும் ஆக்கிரமிப்புகள், தாக்குதல்கள், இத்தகைய கடத்தல்கள் ஆகியவை சிங்கள-பௌத்தத்தின் பெயரிலேயே நடத்தப்படுகின்றன. உண்மையான சிங்கள பௌத்தர்கள் இதை நினைந்து வெட்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களது வெட்கம் எங்கள் பிள்ளையாரை திருப்பி கொண்டுவரபோவதில்லை. இதன்மூலம் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில், தமிழர்களின் இன, மத அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இது அதன் ஒரு அங்கம்தான்.
இந்த நாட்டிலே இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் தமிழ் பேசும் மக்கள் படும்பாடு, அரசாங்கத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும், எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் தெரிகிறது. இந்த அரசாங்கத்தின் அஸ்திவாரமே இந்த காவியுடை அரசியல்தான். இந்நிலையில் தங்களது அஸ்திவாரத்தையே எப்படி இவர்கள் அழிப்பார்கள்? இந்த அரசாங்கத்தை அழிக்காமல் காவியுடை பயங்கரவாதத்தை அழிக்க முடியாது.
இந்நிலையில் இந்த அரசாங்கத்திற்கு, சரி எது, பிழை எது என்பது தொடர்பில் நாம் பாடம் புகட்டாதவரைக்கும், இந்த அரசாங்கம் கொடுக்கும் தைரியத்தில் இவை தொடர்ந்து நடக்கும். கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் என்று எல்லா ஈஸ்வரங்களையும் குறிவைத்து செயற்படுவது இந்த காவி உடை மத வெறி கோஷ்டிதான்.
கடத்தி செல்லப்பட்ட பாணமை பிள்ளையார் சிலை மீண்டும் பாணமை ஆலய அறங்காவலர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும். உடனடியாக இது நடைபெறாவிட்டால், எமது மத சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் நாம் நேரடி போராட்டங்களில் குதிக்க வேண்டிவரும். இனரீதியான போரை முன்னெடுத்த இந்த அரசு, இன்று மத ரீதியான போரை முன்னெடுக்கின்றது என்ற குற்றச்சாட்டை நாம் ஐநாவிலும், சர்வதேச மத சுதந்திர பாதுகாப்பு அமைப்புகளிடமும், இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளிடமும் முன் வைக்க வேண்டி வரும். இது தொடர்பான மேலதிக தகவல்களை தற்சமயம் நாம் வேண்டி நிற்கின்றோம்'.
No comments:
Post a Comment