Translate

Monday, 20 August 2012

இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே டெசோ கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பரபரப்புத் தகவல்


தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டுக்கு இந்திய மத்திய அரசு தனது முழுமையான ஆதரவை வழங்கவில்லை என அரசியல் களத்தில் பேசப்பட்டுவரும் நிலையில், அந்த மாநாடு இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே நடைபெற்றது என மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையிலிருந்து சென்ற நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்று பரபரப்புக் கருத்தை வெளியிட்டார்.

 புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி மஹிந்த அரசு மாபெரும் குற்றங்களைப் புரிந்துள்ளது. இந்நிலையிலும், அதன் போலித்தனமானதும், நம்பகத் தன்மையற்றதுமான நிலைப்பாடுகளி னால்தான் இந்திய ஆட்சியாளர்கள் அரசுமீது கடும் அதிருப்தி கொண்டுள்ள னர். இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசலும், கசப்பும் ஏற்படுவதற்கு இலங்கை அரசே காரணம் என்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டார்.

 எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டிற்கு இந்திய மத்திய அரசு தனது ஆதரவை வழங்கியது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி இலங்கை அரசு மாபெரும் குற்றச்செயல்களைப் புரிந்துள்ளது.

 இந்நிலையில், யுத்தம் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டில் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் நிலைநாட்ட இந்த அரசு முன்வரவில்லை. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டுமெனக் கூறப்படுகிறது. இதுதான் டெசோ மாநாட்டிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமன்றி, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து சிபாரிசுகளையும் இலங்கை அரசு அமுல்படுத்தவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டாது நம்பகத்தன்மையற்ற விதத்தில் இலங்கை அரசு செயற்படுவதனால்தான் இந்திய அரசும் ஆட்சியாளர்களும் அதன்மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். இலங்கை அரசின் இதுபோன்ற நிலைப்பாடுகள்தான் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசலும் கசப்பும் ஏற்படக்காரணம். தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் ஏன் நீங்கள் கலந்துகொண்டீர்கள் என என்னிடம் பலர் கேள்வி கேட்டனர்.

 இந்த மாநாட்டை இந்திய அமைச்சரவையில் உள்ள ஓர் அரசியல் கட்சிதான் நடத்தியது. அதனால் நான் அதில் கலந்துகொண்டேன். அத்துடன், மக்களை சர்வதேசத்திடம் அடகுவைத்துக் கடன்வாங்கி அராஜக ஆட்சி நடத்தும் இந்தத் தேசத்துரோக அரசைப்பற்றிக் கூறுவதற்கு நான் தயாராகவே உள்ளேன். எனது நிலைப்பாட்டிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன். 

 வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதில் இலங்கை அரசின் நிலைப்பாட்டையும், அக்கறையையும் அறிந்துகொள்வதற்காக இந்திய, அமெரிக்க அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு தடவை இங்கு வருகின்றனர். ஒரு வருடத்திற்கு சுமார் 150 நாடுகளின் பிரதிநிதிகளை நான் சந்திப்பேன்.

 அவர்களிடமும் அரசின் செயற்பாடுகள் குறித்து தெரியப்படுத்துவேன். அதுமட்டுமல்ல, தேவையேற்படின் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று இதுபற்றிக் கூற நான் தயாராகவுள்ளேன். இந்த அரசுக்கு எதிராக சர்வதேச சமூகத்தினரையும் ஒன்றுதிரட்ட நான் தயாராக உள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment