Translate

Friday 24 August 2012

உள்நாட்டுப் பொறிமுறையே இனப்பிரச்சினைக்குத் தீர்வு பீரிஸ்



உள்நாட்டுப் பொறிமுறை ஊடாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். வெளி நாட்டிலிருந்து எதையுமே கொண்டு வரமுடியாது. சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள். ஆனால், அது பலிக்காது. சம்பந்தனும் வெளிநாடுகளிடம் செல்வதையே தந்திரோபாயமாகக் கொண்டுள்ளார். சர்வதேசம் உள்ளே நுழைந்து உள்நாட்டு நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு இங்கு இடமும் இல்லை.

இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். மேலும், கடந்த காலத்தைப் பற்றி பேசிக்கொண்டு அதற்குள் புதைந்திருக்கும் தமிழ்க் கூட்டமைப்பின் அணுகுமுறைகள் பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவாது. மற்றவர்களைக் குற்றஞ்சாட்டுவதிலேயே சம்பந்தன் குறியாக இருக்கிறார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கம் தொடர்பான ஒத்திவைப்புவேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:வெளிநாட்டு ஊடகங்களை மட்டும் சம்பந்தன் மேற்கோள் காட்டி பேசினார். உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்ட அவர் விரும்பவில்லை. சம்பந்தன் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கிறார். மறுபக்கத்தைப் பார்க்க மறுக்கிறார்.
வடக்குக்குச் சென்று திரும்பிய வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் சம்பந்தன் கூறுவதுபோல எல்லாமே இருட்டாக இருக்கிறது எனக் கூறவில்லை. இலங்கை பிரச்சினையை சர்வதேச விவகாரமாக்குவதற்கு முனைவோர்கள் நாட்டுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை. நாம் வெளிநாடுகளை நாடிச் செல்வதால் உள்நாட்டுப் பொறிமுறை வீழ்ச்சியடைகிறது.
சம்பந்தனும் வெளிநாடுகளிடம் செல்வதையே தந்திரோபாயமாகக் கொண்டுள்ளார்.இந்த நாட்டுக்குத் தீர்வு கொண்டுவரக்கூடிய இயலுமை வெளிநாடுகளிடம் இல்லை. அரசியல் தீர்வு காண்பது தாங்கள் அல்ல என வெளிநாடுகள் மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறியுள்ளன.
வெளிநாட்டிலிருந்து எதையுமே கொண்டு வரமுடியாது. எதையுமே நாம்தான் செய்யவேண்டும். சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள். ஆனால், எதுவுமே நடக்கப்போவதில்லை. எனவே, நாம் எல்லோரும் புதியதொரு விடிவை நோக்கிப் பயணிப்போம். அதற்குக் கூட்டமைப்பினரும் முன்வரவேண்டும். ஒருபோதும் வெளியிலிருந்து தீர்வைக் கொண்டுவர முடியாது.
சர்வதேசம் உள்ளே வந்து நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு இங்கு இடமும் இல்லை. ஜெனிவாத் தீர்மானம் உள்நாட்டுப் பொறிமுறைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தனால் இங்கு கூறப்பட்டவை யதார்த்தமானது அல்ல. ஜெனிவா தீர்மானங்களுக்கு முன்னரே நாம் நவநீதம்பிள்ளைக்கு அழைப்புவிடுத்திருந்தோம். அவர் மாத்திரமல்லர், எவரும் இங்கு வந்து நிலைமையைப் பார்வையிடலாம். நாம் எதையும் மூடிமறைக்கவில்லை. அவர்கள் இங்கு வந்து எந்த இடத்திற்கும் செல்லலாம். அதற்கு அவர்களுக்குத் தடையில்லை.
குடாநாட்டுக்குச் சென்று திரும்புவோர் எல்லோரும் அங்கு நிலைமை மேன்மையடைந்துள்ளது என்றே கூறுகிறார்கள். சம்பந்தன் மட்டுமே குறை கூறுகிறார் என்றார்.

No comments:

Post a Comment