Translate

Friday, 24 August 2012

விடுதலைப் புலி விடுதலை தொடர்பில் அகாசி பேச்சு



விடுதலைப் புலி சந்தேக நபர்களின் விடுதலை, வடக்கின் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு உட்பட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் அரச மற்றும் ௭திர்த்தரப்புக்களுடன் பேச உள்ளதாக சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விஷேட தூதுவர் யசூஷி அகாசி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் ஏற்படக் கூடிய சுமுகமான சூழலை அரசும் ஏனைய தரப்புக்களும் நிலையான அரசியல் தீர்வுக்காகப் பயன்படுத்த வேண்டும். உத்தேசித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அரசியல் தீர்வுக்கான சிறந்த களமாகக் கருதலாம் ௭ன்றம் அவர் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் சமாதானத் தூதுவர் யசூஷி அகாசி நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரச தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டார்.
இச்சந்திப்புகளின் போது யுத்தத்தின் பின்னரான முன்னேற்றங்கள் குறித்துக் கேட்டறிந்துள்ளார். குறிப்பாக, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பின் போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இதன்போது அரசியல் தீர்வு விடயத்தைத் துரிதப்படுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்களும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவைக் களமாகக் கொள்ள வேண்டும்.
அது மட்டுமன்றி, யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம் குறித்து மேலும் அவதானம் செலுத்த வேண்டும். இதனையே ஜப்பான் அரசு விரும்புகின்றது. அரசியல் தீர்வுக்கு அதிகாரப்பரவலாக்கம் போன்ற விடயங்களைப் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பேசி தீர்மானிக்க வேண்டும். இதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை ஊக்குவிக்க வேண்டும் ௭ன்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment