Translate

Thursday, 9 August 2012

பாணமை விநாயகர் ஆலய சிலை அகற்றியமைக்கு கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் கண்டனம்


பாணமை விநாயகர் ஆலய சிலை அகற்றியமைக்கு கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் கண்டனம்

 பாணமை சித்திவிநாயகர் ஆலயத்தில் பௌத்தர்களினால் அகற்றப்பட்ட விநாயகர் சிலையை மீண்டும் ஆலயத்தில் நிறுவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடவடிக்கையெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம் ஆலயத்துக்குள் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் மு.கு.சச்சிதானந்த குருக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று நாட்டில் அனைவரும் அனைவரது மதத்தையும் மனித உணர்வுகளையும் மதிக்கும் நிலை மிகவும் குறைந்து வருவது கவலையளிப்பதாகவுள்ளது.

அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகங்களில் வழிபாட்டு தலங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்து மக்களையும் புண்படுத்துபவையாகவுள்ளது.

அனைவர் மீதும் அன்பு கொள்ளுங்கள் என்னும் புத்தபகவானின் போதனைகளை மீறி அம் மதத்தின் வழிகாட்டிகளாக இருப்போர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அம் மதத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை இல்லாமல் செய்துவிடும்.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் பௌத்த பீடங்களின் தலைவர்கள் கவனத்தில் கொண்டு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல அழிவுகளையும் தமது மத வழிபாடுகளையும் பின்பற்ற முடியாத நிலையில் மிகவும் கஸ்டமான இருந்து தற்போது ஓரளவு தங்களின் மதக் கடமைகளை நிறைவேற்ற முற்படும்போது அதற்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியிலும் இந்து மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

வரலாறுகள் ஒரு இனத்தின் அடையாளமாகவும் அவர்களின் உயிர்நாடியாகவும் இருக்கும்போது அதனை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் அந்த மக்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகவே நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாணமையில் ஆலயத்துக்குள் இடம்பெற்ற அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் எமது அரசியல்வாதிகள் பாராமுகமாக இருப்பது எமது இனத்துக்கு செய்யும் துரோகமாகவே கருத வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் இருக்கும் ஏனைய இனங்கள் தங்களது மதச் சுதந்திரத்துக்கு ஏதாவது பிரச்சினையேற்பட்டால் அது தொடர்பில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் நிலை உள்ளது.

ஆனால் பாணமையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரையில் எமது அரசியல்வாதிகள் எதுவித நடவடிக்கையும் எடுக்காமை இந்துக்களாகிய எம்மை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தினை நாங்கள் ஒரு சிறிய விடயமாக நோக்கினோம் என்றால் இதன் தொடர் ஏனைய பகுதிகளுக்கும் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசியல் சக்திகள் ஒன்றுபட்டு குரல் எழுப்புவதன் மூலமே எமது இனிவரும் காலங்களில் எமது பாரம்பரியங்களையும் வரலாறுகளையும் காப்பாற்ற முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment