Translate

Monday, 27 August 2012

உரிமைகளை வென்றெடுக்கா விடினும் தொடரும் கொடுமையை தடுக்கவாவது கிழக்கில் கூட்டமைப்பு வெல்ல வேண்டியது அவசியம்!- குகதாசன்


ponakaran01

“எவன் மற்றவர்களை அடக்கியாள்கிறானோ, அவன் குழப்பத்தில் கலங்குகிறான் எவன் ஒடுக்கப்படுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான்.” கிழக்கில் அரசை எதிர்க்கும் கட்சிகளின் வாக்குகளைப் பறித்தெடுக்க, இலவசமாகப் பண்டங்களை கொடுக்க ஏற்பாடுகள் தயார் நிலையிலிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஆம், மற்ற இனங்களை அடக்கியாளும் எவனும் அச்சத்திலேயே வாழ்வான். நிம்மதியற்ற அவனது குழப்ப நிலை , அவனை எதை, எதையோ எல்லாம் செய்யத் தூண்டும். மறுதரப்பில் ஆளப்படுபவன் துன்பத்துள் துவள்வது ஏதோ உண்மை தான். ஆனால் அடுத்து அவனிற்காக காத்திருப்பது இரட்சிப்பே.
முன்பெல்லாம் தேர்தல் முடிவுகளை அந்த நாட்டின் மக்களே எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்றைய உலகக் கிராமத்தில், தீவின் கிழக்குத் தேர்தல் முடிவை, உலகே எதிர்பார்த்து நிற்கிறது. காரணம் இனப் பிரச்சினை ஜென்ம பூமியிலிருந்து ஜெனீவாவிற்கு போய் விட்டது தான்.
இதற்குள் அரச தரப்போ, இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று, தமிழ், முஸ்லீம் மக்கள் தங்களது செயற்பாடுகளை ஆதரிப்பதாக காட்டி தமது நோக்கத்தை நிறைவேற்ற முயல்கிறது.
13 வது திருத்தத்தின் கீழ் பகிரப்பட்டுள்ள காணி, காவல்துறை அதிகாரங்களையும், கிழக்கு மாகாண நிர்வாகத்தை கைப்பற்றி அகற்றிவிட்டு, வடக்குத் தேர்தலை நடாத்தும் கொடுமையான திட்டம் அரசின் உத்தேசமாகவுள்ளதாக நம்மப்படுகிறது.
இதனால், இத் தேர்தலில் வெல்வதன் மூலம் எதையும் எடுக்க முடியாவிடினும், தொடரும் கொடுமைகளை தடுக்கவாவது தமிழ் முஸ்லீம் மக்கள் வெல்ல வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்க, அதன் கனடாக்கிளையும், கனேடியத் தமிழர் பேரவையும் இணைந்து நிதி சேர்ப்பு இராப்போசன விருந்தொன்றை 26ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ரொறன்ரோவில் நடாத்தின.
அங்கே “ஸ்கைப்” மூலம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை தலைமை வேட்பாளர்களினதும், தலைவர் திரு. சம்பந்தன் அவர்களின் உரையும் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.
திரு தங்கவேலு அவர்களினது தலைமையில் தொடர்ந்த இந்த நிகழ்வில், நாடுகடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் திரு பொன் பாலராஜன், பொருண்மிய அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ஈழவேந்தன், திரு ராம் சிவலிங்கம், திரு கென்றி கிருபராசா, திரு ஐயம்பிள்ளை சண்முகநாதன், கனேடிய தமிழர் இணையத்தின் தலைவரான திரு வின் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை இன்றைய தாயகத் தமிழரின் அவலம் அரசியலிற்கு அப்பாற்பட்ட இனத்தின் பிரச்சனை என்பதை உணர்த்துவதாகவும், மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும் அமைந்திருந்தது.
இதே ஒருங்கிணைவு, தாயகத்திலும், தமிழகத்திலும் தொடர்ந்தால் அது மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் எனலாம். இதற்கான ஒரு மறைமுக அழைப்பு தாயகத்தில் திரு கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் அவர்களிடமிருந்து வந்துள்ளது.
அது போலவே தமிழகத்திலும் தாய் போன்ற முதல்வரும், தந்தை போன்ற கலைஞரும் கோரிக்கைகளை நமக்காக தொடர்ந்து விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதுவே, தமிழக அரசியலைத் தாண்டிய, தமிழ் இனத்தின், ஒரே ஒற்றுமை உரிமைக் குரலாக வேண்டும் என்பதே உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஆவலும், அவசர தேவையாகவும் உள்ளது.
தலைவர் தனது உரையின் போது, இன்றைய தேவைகளைப் பட்டியலிட்டு, விளக்கியதுடன் இந்தத் தேர்தலை எப்படியாவது வெல்ல வேண்டிய தேவைகளயும் எடுத்துரைத்தார்.
அதற்கடுத்து பேசிய டாக்டர் சாந்தகுமார் அவர்கள், நீண்ட காலமாக ஆயுதப் போராட்ட அரசியலுள் நீச்சலடித்த புலம் பெயர் தமிழர்கள், இந்த ஜனநாயக ரீதியிலான அரசியற் போராட்டத்தையும் , இராஜதந்திர மார்க்கத்தின் நன்மைகளையும் புரிந்து கொண்டு, தத்தம் இனக் கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திரு பொன் பாலராஜன் தனது உரையின் போது, தமிழர் தேசியக் கூட்டமைப்பிற்கு அனைவரும் வழங்க வேண்டிய ஆதரவை வலியுறுத்தினார்.
இதே கருத்தை வெளியிட்ட கனேடியன் தமிழ்க் காங்கிரஸ் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை திரு சம்பந்தன் அவர்களின் தலைமையை பாராட்டிப் பேசினார்.
இந் நிகழ்வில் வழக்கறிஞர் திரு ஹரி ஆனந்தசங்கரி, கனடிய தமிழ்க் காங்கிரஸ் மற்றும் புணர்வாழ்வுக் கழகத் தலைவர்களும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈற்றில் திரு விஜேந்திரா நன்றியுரையை நிகழ்த்தியதோடு விருந்து இனிதே நிறைவேறியது.

No comments:

Post a Comment