Translate

Friday, 24 August 2012

புலிப் பயங்கரவாதம் இருக்கின்றதோ, இல்லையோ, அரச பயங்கரவாதம் நிச்சயமாக இருக்கின்றது: - பிரித்தானியாவின் எச்சரிக்கையை அகற்றக் கோருவது நகைச்சுவை என்கிறார் மனோ.

Posted Imageபுலிப் பயங்கரவாதம் உள்ளதெனக் காரணம் காட்டி வடக்கில் அதிகளவான படைகளை குவித்து வைத்துக் கொண்டு தனது மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் அரசு புலிப்பூச்சாண்டி காட்டியமையே பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கக் காரணம் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்தை சாடியுள்ளார்.

தனது அரசியல் தேவைகளுக்கு வடக்கில் நிறுத்தி வைத்திருக்கும் இராணுவத்தை அகற்றினால் தானாகவே பயணத் தடை அகலும். அதைவிடுத்து, பயணத்தடையை அகற்றுமாறு அரசு பிரித்தானியாவிடம் கூறுவது நகைச்சுவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவுக்கு செல்லும் தனது பிரஜைகளை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பிரித்தானிய அரசு பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. இராணுவப் பிரசன்னம் மற்றும் மேற்குலகு மீதான பேரினவாதிகளின் தாக்கம் என்பனவற்றைக் காரணமாக அது குறிப்பிட்டிருந்தது.
ஆனால் அந்தப் பயணத் தடையை விலக்கிக் கொள்ளுமாறு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பிரித்தானியத் தூதரைச் சந்தித்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அமைச்சரின் கோரிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன், புலிப் பயங்கரவாதம் என்பதைக்காட்டி வடக்கில் படைகளைக் குவித்து வைத்துள்ளமையினாலேயே பிரித்தானியா பயணத் தடையை விதித்துள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம், இன்னும் பல நாடுகளும் இத்தகைய எச்சரிக்கையை விடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. எனவும் அவர் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது, அரசாங்கம் வடக்கு ,கிழக்கு தமிழ் பிரதேசங்களில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதன் காரணம் எமக்கு தெரியும். சிவில் நடவடிக்கைகளில் தலையிட்டு தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோல்வியடைந்த சமூகமாக வைத்திருப்பதற்கும், தமிழ் பிரதேசங்களில் நில அபகரிப்புகளைச் செய்யவும், தமிழர்களின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராகப் புலனாய்வு செய்வதற்கும் தான் அரசாங்கம் இராணுவத்தை அபரிமிதமாக வடக்கில் பயன்படுத்துகின்றது. ஆனால் இந்தக் காரணங்களை வெளியில் சொல்ல முடியாது என்பதால், இதோ புலி வருகிறது, அதோ புலி வருகிறது என்று இவர்கள் புலிப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். மேலும் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியிலும், புலிக் கோஷம் அரசுக்கு நன்கு பயன்படுகின்றது.
எனவே அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக இராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது. அதை மறைப்பதற்கு பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் நடவடிக்கை எடுக்கிறோம் என்று அதிகாரபூர்வமாக சொல்லுகிறது. இதனால்தான் இன்று பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு கவனம், ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடுக்கின்றது. எனவே இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ், பயண எச்சரிக்கை பிழை என்றும் அதை அகற்றுங்கள் என்றும் பிரிட்டனிடம் சொல்வது நல்ல நகைச்சுவை.
அபரிமிதமான இராணுவப் பிரசன்னம் இருக்கும் நாடுகளுக்கு தமது பிரஜைகளைச் செல்ல வேண்டாம் என்று மேற்குலக நாடுகள் சொல்வது சரியானது. புலிப் பயங்கரவாதம் இருக்கின்றதோ, இல்லையோ, அரச பயங்கரவாதம் நிச்சயமாக இருக்கின்றது. மேலும் துப்பாக்கி தவறுதலாக வெடித்தால் கூட அது பயணிகளுக்கு ஆபத்தானது. அதுமாத்திரம் அல்ல, சிலவேளைகளில், தமிழ் ஜனநாயக அரசியல் செயல்பாட்டாளர்கள் மீது நடத்தப்படும் கழிவு எண்ணெய் தாக்குதல்களில், பிரிட்டிஷ் பயணிகளும் பாதிக்கப்படலாம்.
எனவே அரசாங்கம், தனது அரசியல் தேவைகளுக்கு வடக்கில் நிறுத்தி வைத்திருக்கும் இராணுவத்தை அகற்றிவிட்டு, பயண எச்சரிக்கையை வாபஸ் வாங்கும்படி பிரிட்டனிடம் சொல்ல வேண்டும். இதை செய்யாமல் வெளிவகார அமைச்சர் கோமாளி அமைச்சராக கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்றுள்ளார்.
http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment