Translate

Monday 27 August 2012

டெசோ மாநாடு முடிந்தும், முடியாத ஈழத் தமிழர்களின் அவலமும்..! ஈழதேசம் பார்வையில்..!

டெசோ மாநாடு முடிந்தும், முடியாத ஈழத் தமிழர்களின் அவலமும்..! ஈழதேசம்  பார்வையில்..!

ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை ( ஆச்சியை அல்ல..! ) பறிகொடுத்துள்ளது தி.மு.க., என்று மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் என்று கனிமொழி கூறியுள்ளார். நேற்று நெல்லையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மானத்தை விளககி நடந்த பொதுக் கூட்டத்தில் தான் இவ்வாறு கூறியுள்ளார்  மு.க.ஸ்டாலின். கடந்த 12 - ம் தேதி நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் எடுத்துக் கூறத்தான் இந்த கூட்டம். அவை பெயருக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அல்ல. அவற்றை செயல்படுத்தக் கோரி  தீர்மான நகலை ஐ.நா.சபையிடம் நேரடியாக கொடுக்கவிருக்கிறோம். நாங்கள் திடீர் என்று தற்போது தான் ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்பதாக சிலர் கூறுகின்றனர். 



கடந்த 1956 - ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த தி.மு.க., மாநாட்டில் ஈழத் தமிழர்களின் உரிமைகளை காக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் பின்னரும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஈழத் தமிழர்களுக்காகவே இரண்டு தடவை ஆட்சியை பறிகொடுத்துள்ளோம். மேலும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் க.அன்பழகன் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ.பதவியை ராஜினமா செய்துள்ளனர். டெசோ அமைப்பு ஒன்றும் புதிதாக துவங்கப்பட்டதன்று. கடந்த  1986 - ம்  ஆண்டிலேயே டெசோ அமைப்பு துவங்கப்பட்டு விட்டது. அந்த அமைப்பில் கி.வீரமணி, பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அப்பொழுதே டெசோ கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். 1986 - ம் ஆண்டு மதுரையில் நடத்தப்பட்ட டெசோ மாநாட்டில் பா.ஜ.க, தலைவர் வாஜ்பாய், என்.டி.ராமாராவ் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளைச் சேந்தவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். 


இலங்கையில் நடந்த போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் ஆதரவின்றி உள்ளனர். மிச்சம் இருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கே டெசோ அமைப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதயெல்லாம் மூடி மறைக்கும் வகையில் தி.மு.க.,வை அழிக்க முயற்சி செய்து வருகிறார்கள். 


கனிமொழி நாகர்கோயில் கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ளார். டெசோ மாநாடு வெற்றி பெற்று விட்டது. நீதி வெற்றி பெற்ற மாநாடு டெசோ மாநாடு. இந்த மாநாட்டை கலைஞர் தேர்தலுக்காக செய்கிறார் என்று பழி போட்டார்கள்.அவர்கள் யார் என்றால் சுப்ரமணிய சுவாமி, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த  நெடுமாறன், வைக்கோ கலைஞரை முற்றம் முதலுமாக எதிர்க்கக்கூடிய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே போன்றவர்கள் தான். 


இலங்கையில் வாழக்கூடிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை இருக்கிறதா..? எனவே எது அரசியல் நாடகம்..? எது அரசியல் விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் விதைவைகளாக,  ஆதரவின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ வழியின்றி திண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு எத்தனையோ அச்சுறுத்தல்கள் ஏற்படுகிறது. தமிழ் என்ற மொழியே  அங்கு இருக்கக் கூடாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு இன அழிப்பு நடந்து வருகிறது. தமிழர்கள் என்பதற்கான அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்படுகிறது. தமிழர்களின் வழிப்பாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது. தமிழர்கள் முகமற்றவர்களாக வாழும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த மக்களுக்காக வாழ்வு கிடைக்க வேண்டும். நீதி கிடைக்க வேண்டும்.நியாயம் கிடைக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட மாநாடு தான் டெசோ மாநாடு என்றார். 


ஆக, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் டெசோ மாநாடு குறித்து தமிழகமெங்கும் பொதுக்கூட்டம் போட்டு விளக்குகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர் என்று பேசுகிறார்கள். ஐம்பதாயிரம் அறுபதாயிரம் விதைவைகள் இருக்கிறார்கள் வாழ வழியின்றி என்று சொல்கிறார்கள். எஞ்சி உள்ள தமிழர்களை காப்பாற்ற  வேண்டும் என்று கூறுகிறார்கள். ஐ.நா.வில் மனு கொடுப்போம் என்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்தில் ஓட்டு உரிமை உள்ளதா..? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் இந்த டெசோ மாநாட்டு தீர்மானங்களை உரத்துப் பேசும் தி.மு.க..வின் இலங்கை அரசியல் உண்மையில், தி.மு.க.,வின் மூன்றாவது கூட்டணிக்கான அரசியல் தான். அதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் கிடைக்கப்பெற்றால் நல்லது தான், எனினும் இன்று கூடும் அ.தி.மு.க.வின் செயற்குழுவில் இந்த டெசோ மாநாட்டை முறியடிக்கும் விதத்தில் பல்வேறு இலங்கைத் தமிழர்கள் குறித்த நலன்கள் இருக்கும் என்றும் கருதலாம்.  


தி.மு.க.கட்சியினர் இலங்கை தமிழர்கள் குறித்து பேசுவதின் மூலம், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அரசுக்கு புதிய நெருக்கடிகளை கொடுக்கிறார்கள். அவர்களாகவே, கூட்டணியில் இருந்து கழட்டி விடட்டும் என்று மு.கருணாநிதி அரசியல் காய்களை நகர்த்தி விட்டார். ஆக, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., கட்சிகள் தவிர்த்து மூன்றாவது கூட்டணியை நோக்கி இன்று இந்திய அரசியல் உள்ளது. இதன் மூலம் இலங்கையின் தேசிய இனமான ஈழத் தமிழினம் தங்களது அரசியல் உரிமைகளை அடைவார்களா..? என்பதை காலம்தான் காண்பிக்க முடியும்..? என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். 


சங்கிலிக்கருப்பு 

No comments:

Post a Comment