Translate

Tuesday, 21 August 2012

பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன்! மஹிந்த ராஜபக்‌‌ச இன வெறியர் – விக்ரமபாகு கருணாரத்ன


பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன்! மஹிந்த ராஜபக்‌‌ச இன வெறியர் – விக்ரமபாகு கருணாரத்ன

wickiramabagu
விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களவராக இருந்தும், சிங்களவர்கள் வந்தேறிகள்தான். தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள் என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெறியாளர்கள், புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்தபோது ‘பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்றவர்.
2006 இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக ராஜபக்சவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். இலங்கை நவ சமாசமாஜக் கட்சியின் தலைவர்.

இந்த அடையாளங்களை எல்லாம் மீறி இவருக்கு இப்போது புதிய அடையாளம், ‘இலங்கை அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத ஒற்றை மனிதனாக, டெசோ மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்தவர்’ என்பதுதான்.
டெசோ மாநாட்டுக்கு இந்தியாவுக்கு சென்றவேளை விகடனுக்கு வழங்கிய பேட்டி
 கேள்வி: 2009 பேரழிவுகளுக்குப் பின்னால் ஒரு சிங்களவராக, தமிழ் ஈழம் சாத்தியம் என்று கருதுகிறீர்களா?
பதில்: தமிழ் ஈழம் அழியவில்லை. அது அங்கேதான் உள்ளது. அது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இப்போது அது சிங்கள மக்களுக்கு உரிமையாகவும் இல்லை. அந்த நிலங்கள் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தாரை வார்க்கப்பட்டுவிட்டன.
தமிழ் மக்கள், தமிழ் ஈழக் கனவோடுதான் இன்னமும் அங்கு வாழ்கின்றனர். தமிழர்களுக்கான சுயஉரிமையோடு ஒன்றி வாழலாம் என்றுதான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் விருப்பப்பட்டார். ஆனால், சிங்கள இன வெறியர்கள் அதை ஏற்கவில்லை. வருங்காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைந்து வாழலாம் என்று தமிழ் மக்கள் எண்ணினால் வாழலாம்.
இல்லாவிட்டால், அவர்களுக்கான சுயஉரிமைகொண்ட தேசத்தை உருவாக்கிக்கொள்ளலாம். தமிழ் மக்களுக்கான விடுதலையில் ஐ.நா-வால் எதுவும் செய்ய இயலாது. ஆனால், இந்தியாவும் அமெரிக்காவும் நினைத்தால், தமிழ் மக்களுக்கான தீர்வை உடனே கொண்டு வரலாம்.
கேள்வி:  இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின்போது மௌனமாக இருந்த கருணாநிதி, இப்போது அதுபற்றிப் பேசுகிறார் என்ற விமர்சனம் உள்ள நிலையில், அவர் நடத்தும் டெசோ மாநாட்டுக்கு நீங்கள் வந்துள்ளீர்களே?
பதில்:  இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை மகிந்த ராஜபக்சவின் பின்புலத்தில் இருந்து நடத்தியது இங்கு உள்ள காங்​கிரஸ் அரசு. அவர்களின் கூட்டணியில் கருணாநிதி உள்ளார் என்றால், அவரும் தமிழர் படுகொலைகளுக்குக் காரணமானவர்தான்.
காங்கிரஸும் தி.மு.க-வும் முதலாளித்துவக் கட்சிகள். முதலாளித்துவத்திடம் எதையும் உண்மையாக எதிர்பார்க்க முடியாது. நான் டெசோவுக்கு வருகை தந்துள்ளது தமிழ் மக்களுக்கான பணியைச் செய்வதற்காக மட்டும்தான்.
கேள்வி:  தமிழ் எம்.பி-க்களே வராத நிலையில் இவ்வளவு தைரியமாக இலங்கையில் இருந்து வந்துள்​ளீர்களே! ஆபத்தான பயணம் அல்லவா இது?
பதில்:  ஆம், ஆபத்தான பயணம்தான். இங்கே இருந்து நான் கொழும்பு செல்லும்போது விமான நிலை​யத்தில் எனக்கு எதிராகப் பல ஆர்ப்பாட்டங்களை இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் நடத்த உள்ளனர். என்னைக் கடுமையாகத் தாக்கியும் விமர்சித்​தும் வருகின்றனர். என்னைத் தேசத்துரோகி என்று முத்திரை குத்தியுள்ளனர். எவ்வளவு ஆபத்துகள் நிறைந்து இருந்தாலும் தமிழ் மக்களுக்கான பணியில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்.
கேள்வி:  உங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்​குமான உறவு எப்படி​யானது? அவர்களின் பின்னடை​வுக்கு என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்:  எனக்கும் விடுதலைப் புலிகளுக்​குமான உறவு மிகவும் பிணைப்பு கொண்டது அல்ல. எங்களின் தலைவர்களில் ஒருவரையே அவர்கள் கொன்று இருக்கின்றனர். ஆனால், அவர்களின் அரசியல் பார்வைகளில் நாங்கள் ஒன்றுபடுகிறோம். அவர்களின் பொங்கு தமிழ் நிகழ்வில் நான் பங்கேற்றுள்ளேன்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளராக இருந்த நடேசன், அந்த இயக்கத்துக்குச் செல்லும் முன்னர் 10 வருடங்கள் எங்கள் கட்சியில் இருந்தவர். அன்டன் பாலசிங்கம் என் நல்ல நண்பரும்கூட. அவர்களின் சுயஉரிமைக் கோரிக்கை நியாயமானது.
அவர்களின் பின்னடைவுக்குக் காரணம், அவர்களின் சில செயல்பாடுகளே. 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்ததுதான், ராஜபக்சவை வெற்றி பெற வைத்தது.
ராஜீவ் காந்தியைக் கொன்றது இந்தியாவின் எதிர்ப்பை சம்பாதித்து விட்டது. இன்னும் சில சொற்ப காரணங்களாலேதான் அவர்​கள் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது.
கேள்வி:  பிரபாகரன்… ராஜபக்ச பற்றி உங்களது தனிப்பட்ட அபிப்பிராயம் என்ன?
பதில்:  பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன். ஆனால், அவர் ஓர் நல்ல அரசியல்வாதி அல்ல. அவர் தன் மண் மீதும் மக்கள் மீதும் பாசம்கொண்டவர்.
ராஜபக்‌ச இன வெறியர். அவர் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வை ஏற்படுத்தும் நன்மை செய்ய மாட்டார்!

No comments:

Post a Comment