சரத்என்சில்வா ஆளும் கட்சிக்கு சாதகமான தீர்ப்புக்களை வழங்கியுள்ளார்-தமிழில் :குளோபல் தமிழ்ச்செய்திகள்
அவற்றில் முக்கியமானது வடகிழக்கு மாகாணங்களை பிரித்தது:-விக்கிலீக்ஸ்- தமிழில் :குளோபல் தமிழ்ச்செய்திகள்
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகவே ஆரம்பத்தில் செயற்பட்டார் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சில சிரேஸ்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு வாய்ப்பு அளிக்காது சரத் என் சில்வாவை 1999ம் ஆண்டு பிரதம நீதியரசராக நியமித்தார்.
சரத் என் சில்வா, சந்திரிக்கா ஆட்சியின் ஓர் கருவியாக செயற்பட்டதாக பொதுவாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.
எனினும், சந்திரிக்காவின் ஓராண்டு பதவிக் காலம் இழப்பதற்கு சரத் என் சில்வா உச்ச நீதிமன்றில் அளித்த தீர்ப்பே காரணமாகும்.
2007ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் திகதி அமெரிக்கத் தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு விவகார அதிகாரி ஜேம்ஸ் ஆர். மூரினால் இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
சரத் என் சில்வாவின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் விமர்சனப் பாங்கான தகவல்களை வெளியிட்டிருந்தது.
2005ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் மிக முக்கியமான பல சந்தர்ப்பங்களில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆளும் கட்சிக்கு சாதகமான தீர்ப்புக்களை வழங்கியுள்ளார்.
இவற்றில் மிகவும் முக்கியமான தீர்ப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித் தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்றத் தீர்ப்பாகும்.
எவ்வாறெனினும், சரத் என் சில்வா அண்மைக்காலமாக ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்புக்களை வழங்கி வருவதாக ஜேம்;ஸ் மூர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறிப்பாக கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுத்தல் உள்ளிட்ட சில தீர்ப்புக்களை வழங்கியிருந்தார்.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நீதியரசர் குழாமில் சரத் என் சில்வா அங்கம் வகிக்கவில்லை என்ற போதிலும் தீர்ப்பின் பின்னணியில் சரத் என் சில்வா செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டெலிகொம் நிறுவனம் 25 வீத பங்குகளை மலேசியாவிற்கு விற்பனை செய்வதனை தடுத்தல், அரசாங்கத்திற்கு எதிராக டிரான் அலஸ் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்தக் கொள்ளல், மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாரச்சி ஆகியோரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு அரசாங்கத்திற்கு சார்பற்ற தீர்ப்புக்களை வழங்கியிருந்தார்.
எவ்வாறெனினும், சரத் என் சில்வாவின் நீதிமன்ற நடவடிக்கைள் அரசியல் பின்னணியைக் கொண்டமைந்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் சரத் என் சில்வாவிற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக முன்னாள் சட்ட மா அதிபர் சிப்லி அஷீஸ் குற்றம் சுமத்தினார்.
சரத் என் சில்வா, நாட்டின் நீதவான்கள் மீது கடுயைமான ஆதிக்கம் செலுத்தி வந்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய பிரதம நீதியரசராக கடமையாற்றி வரும் ஷிராணி பண்டாரநாயக்கவை, சரத் என் சில்வா ஓரங்கட்ட முனைப்பு காட்டியதாக அஷீஸ் குற்றம் சுமத்தினார்.
சரத் என் சில்வா சுய விருப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்றுக்கொள்ளாவிட்டால், பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பணி நீக்க ஜனாதிபதி திட்டமிட்டிருந்ததாக சிரேஸ்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தியை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதரக பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஜேம்ஸ் மூர் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழில் : குளோபல் தமிழ்ச் செய்திகள்-
நன்றி: விக்கிலீக்ஸ் மற்றும் கொலம்போ ரெலிகிராப்
No comments:
Post a Comment