Translate

Saturday, 25 August 2012

காலுறையைக் கழற்றியவுடன் துர்நாற்றம்


காலுறையைக் கழற்றியவுடன் துர்நாற்றம்

கல்லும் குளியுமான தெருவைப்போல அவரது பாதம் பள்ளமும் திட்டியுமாக அசிங்கமாத் தோற்றமளித்தது.

பிற்றட் கெரெட்டோலைசிஸ் (Pitted keratolysis) என்பது பாதத்தைப் பாதிக்கும் சரும நோயாகும். தோலை அரித்து நாற்றத்தை எழுப்பும் பாத நோய் (Pitted keratolysis)
நோயாளி பரிசோதனை அறைக்குள் நுழையும் முன்னரே இது என்ன நோயென மோப்ப சக்தி குறைவில்லாத மருத்துவரால் நிர்ணயிக்க முடியும்.
அறிகுறிகள்
முக்கிய அறிகுறி நோயுற்ற பகுதியின் பிரத்தியேகமான தோற்றம்தான். ஏற்கனவெ குறிப்பிட்டதுபோல சிறு பள்ளங்களும் திட்டிகளுமாக பூச்சி அரித்த தோல் போலக் காணப்படும்.
முக்கியமாக பாதங்களில் மட்டுமே இருக்கும். பாதம் தரையில் அழுத்தமாக அழுத்தப்படும் பகுதிகளான குதிக்கால், விரல்களுக்கு அண்மையான பகுதிகளில் பெரும்பாலும் காணப்படும். ஆனால் கால் விரல்கள் பொதுவாகப் பாதிக்கப்படுவதில்லை.
பாதம் ஈரலிப்பாக இருக்கும்போது இது தெளிவாகத் தெரியும். ஒரு வகை பக்றீரியா (Kytococcus sedentarius) கிருமித் தொற்றினால் இது ஏற்படுகிறது.
பக்றீரியாவால் சுரக்கும் ஒரு நொதியம் சருமத்தில் உள்ள புரதங்களை தாக்கும்போது தோல் கரைந்து சொரசொரப்பாவதுடன் கெட்ட மணமும் வெளியேறுகிறது.
கடுமையாக இருக்கும் துர்நாற்றம் நோயை நிர்ணயிப்பதில் மிகவும் உதவும்.
விரல் இடுக்ககளில் தோன்றும் சேற்றுப் புண் போன்ற பங்கஸ் தொற்று நோய்களில் அரிப்பு ஏற்படும். ஆனால் பிற்றட் கெரெட்டோலைசிஸ் என்ற இந்நோயில் அரிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் இலேசான வலி சிலவேளை ஏற்படலாம்.
யாரைப் பீடிக்கும்
ஆண் பெண் வேறுபாடின்றி எந்த வயதினரையும் இந்நோய் பீடிக்கக் கூடும்.
ஆயினும் அதீதமாக வியர்ப்பவர்களில் (Hyperhydrosis) தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.
சிலருக்கு உள்ளங்கைகளிலும் பாதங்களிலும் வியர்ப்பது அதிகம். இவர்கள் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிகிச்சை முறைகள்
சிகிச்சையின்றி இருந்தால் காலத்திற்கு காலம் குறைவும் கூடுதுமாகப் பல வருடங்களுக்கு நீடிக்கலாம். வியர்வை அதிகமாகும் கோடை காலங்களில் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்துவது அவசியம்
கதகதப்பும் ஈரலிப்பும் இணைந்த சூழல் இந்நோயைக் கொண்டுவரும் பக்றீரியாக் கிருமி பெருகுவதற்கு வாயப்பானது என்பதால் பாதங்களை ஈரலிப்பின்றியும் காற்றோட்டமாகவும் வைத்திருப்பது அவசியமாகும்.
குளிக்கும்போது பாதங்களை கிருமிஎதிர்ப்பு சோப் வகைகளை உபயோகித்து நன்கு உராஞ்சித் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
குளித்த பின்னரும் கால்களைக் கழுவிய பின்னரும் பாதங்களிலுள்ள ஈரலிப்பு மறையும் வண்ணம் சுத்தமான துணியினால் துடைக்க வேண்டும். அக்குள் வியர்வையை நீக்கும் ஸ்ப்ரேக்களை உபயோகிப்பதன் மூலம் (Antiperspirant spray) பாதங்களிலும் வியர்வையைக் குறைக்க முடியும்.
வியர்வையை உறிஞ்சக் கூடிய சப்பாத்துக்களை அணிவது நல்லது. தோலினால் செய்யப்பட்டவை அத்தகையவையாகும். ரப்பர், ரெக்சீன் ஆகியவற்றால் செய்யப்பட்வைகளைத் தவிர்ப்பது நல்லது.
இரண்டு சோடி சப்பாத்துக்களை உபயோகிப்பது நல்லது. இன்று உபயோகித்ததை மறுநாள் நன்கு உலர ஒதுக்கி வைத்துவிட்டு வேறொரு காலணியை அணிவது சாலச் சிறந்தது.
பாதங்களுக்கு காற்றறோட்டம் அளிக்கக் கூடிய செருப்புவகைகள் நல்லது. ஆனால் அவையும் தோலினால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.
சப்பாத்து அணியும் போது கட்டாயம் சொக்ஸ் அணிய வேண்டும். இவையும் வியர்வையை உறிஞ்சும் வண்ணம் பருத்தியிலானவையாக இருப்பது அவசியம்.
அடிக்கடி மாற்ற வேண்டும். பாடசாலை செல்லும்போது ஒரு மேலதிக சோடி சொக்ஸ் கொண்டு செல்வது உசிதமானது. கிருமியை அழிப்பதற்கு சொக்ஸ்சை சுடு நீரில் (60 C) துவைப்பது நல்லது.
மருந்துகள்
அன்ரிபயரிக் கிறீம் வகைகள் உதவும். ஏரித்திரோமைசின், கிளிட்டாமைசின் கிறீம் போன்றவை நல்ல பலன் கொடுக்கும்.
மாத்திரைகளாக உட்கொள்ளவும் கொடுப்பதுண்டு.
ஆயினும் நோயை மருத்துவர் சரியாக நிர்ணயித்த பின்னரே அவற்றை உபயோகிக்க வேண்டும்.
சருமநோய்கள் பற்றிய எனது சில பதிவுகள்
ஹாய் நலமா புளக்கில் சென்ற வருடம் வெளி வந்த கட்டுரை
டொக்டர்எம்.கே.முருகானந்தன்.

No comments:

Post a Comment