Translate

Saturday, 25 August 2012

நாடி சொல்லும் ஆவணி மாத நட்சத்திரப் பலன்கள்

      
ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். சூரியன் என்ற கோள் ஆட்சி புரியும் மாதம் இது. மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். ஸ்ரீஜெயந்தியும் இந்த ஆவணி மாதத்தில்தான். (ஆனால் இந்த வருடம் மட்டும் ஆடியிலேயே கிருஷ்ணன் ‘அவதரித்து விட்டான்!’) காஞ்சி காமாட்சி ஆவணி மூல தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் புனிதமானது; மோட்ச கதியை தரவல்லது. இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்கள் அவதரித்த மாதம் இந்த ஆவணி. இந்த மாதத்தின் பெருமையை அகத்தியர்-


‘‘சிங்கத்திற்கிணை
யொரு திங்களுமில்லை
சிவனினும் மேம்பட்ட
தொரு இறையுமில்லை’’


-என்கின்றார். இனி நட்சத்திர பலன்களை நாடி வாய்மொழியில் காண்போம்.

கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘அகத்தையடக்கி 
ஆளுமை கூட்டி
யிருக்கச் சுகமுண்டாம். 
நாவால்
நாமத்திற்குங் களங்கம் 
வர நித்திரைக் 
குங் கேடுண்டாம். 
முயன்று
கருமமது முடித்துக் 
காத்திருப்பீரே’’

மனம் போனபடி பேசக்கூடாது. அவசரப்பட்டு எதிலும் அடி எடுத்து வைக்க வேண்டாம். பேச்சைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். இல்லாவிடில் நிம்மதியாய் தூங்க முடியாது. சிறு காரியங்களைக்கூட பெரு முயற்சி செய்துதான் முடிக்க வேண்டியிருக்கும். பொறுமையை அதிகம் கைக்கொண்டு வாழ வேண்டிய மாதம் இது.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘இறை தந்துணையால் பையவே வோங்கு
வீர், பாதகமில்லையே - நீர்குமிழி
யொக்குந் தனமது தானே - உறவால் 
வருந்தொல்லை தொலைக்க அழைப்பீரே
பிணி பொருட்டும் பொருள் விரையங்காணுமே’’

கடவுளின் கிருபை மிகுந்து இருக்கும். அதனால் முன்னேற்றம் படிப்படியாக வரும். நீர்க்குமிழி போல் பணம் வந்து மறையும். நெருங்கிய உறவினர்களின் கஷ்டத்தை போக்க அலைவீர்கள். வைத்திய செலவுகள் ஏற்பட்டு விலகும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘எடுத்த கருமமது தாமதமிகவாகுமே 
அகச் சோர்வும் கூடுமே வீண்பழி வந்து 
விலகுந்தானாயினும் ஈசன் அருளால்
சுகம் காணலாமே. நூதனப் பணி 
சேர அச்சாணி வந்திடுங்கண்டீர்’’


சற்று காலதாமதம் ஏற்பட்ட போதிலும், காரியம் வெற்றி பெறும். சிலர் குறைகூறி மனதை சஞ்சலப்படுத்தினாலும் கடவுள் அருளால் பாதகம் ஏதும் இல்லை. எதிர்காலத்தில் நூதனமான பணி சேரும். அதற்கான அறிகுறிகள் தோன்றும், இந்த ஆவணி மாதத்திலேயே.

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

‘‘தொட்டது துலங்குங் காலமிது
சொன்னோம் - மகுடி முன்னரவமொப்ப
மொழி கேட்டு மயங்குவர் மாந்தரே
தாமதமான வழக்கும் வழி வகுக்குமே -
மேனிக்கு வூறு மெத்தவே யுண்டு’’

எடுத்த காரியத்தில் வெற்றி பெற ஏதுவாகும் தருணம் இது. மகுடி முன் நாகம் போன்று, உங்கள் வார்த்தைக்கு எல்லோரும் மயங்கி, கட்டுப்படுவர். இதுவரை தள்ளிப்போடப்பட்ட வழக்குகள் ஒரு நல்ல முடிவை எட்டி, முன்னேற்றம் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளல் வேண்டும்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

‘‘தனவிரயந் தன்னிலுமானந்தங்
கிட்டுமே - நல் ஆஸ்தி அமையுமே.
பட்டதுயர் பட்டுப் போமே
ஆதிசக்தி தன் அருளால் எதிலுஞ்
ஜெயமென பேசுவீரினியே’’

சுப விரயம் ஏற்படும். சொத்து வாங்குதல், திருமணச் சடங்குகள் போன்றவற்றால் பொருள் விரயம் ஏற்பட்டாலும், மனதிற்கு மகிழ்வு ஏற்படும். இதுவரை உழைத்த உழைப்பு பலன் தரும் காலம் இது. ஆதி பராசக்தி அருளால் இனி தோல்வி இல்லை என்பதாம்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

‘‘காட்டாற்று வெள்ளமொக்கும்
கைப்பொருளே. உறவால் வாட்டது
காணுமகமாயினுஞ் ஞானச் சேர வழி
யானதே. பிணக்கறுத்து போராட 
பின் மேன்மை யுண்டாம் மெய்யே’’

ஆற்றில் வரும் வெள்ளம் போல கைப்பொருள் நில்லாது ஓடும். உறவுக்காரர்களால் பற்பல தொல்லை வந்த போதும் வாழ்க்கை என்றால் என்ன என்ற ஞானம் கிடைக்கும். யாரோடும் கருத்து வேறுபாடு கொண்டு பிரியாது அமைதியோடு காத்திருந்தால் பெரிய வெற்றியை பின்னர் கண்டிப்பாய் பெறலாம்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

‘‘எண்ணியெண்ணித் துணிவீர்
எக்கருமமுமே சோரம் போவீர்
இவர் நம்மவரென்றே ஞானியர்
தம் சொல் பற்றி ஜெயம் பெறலாமே’’

எந்த காரியத்தில் இறங்கினாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது சிறப்புடையது ஆகும். இவர் நமக்கு வேண்டியவர் என்று யாரிடமும் பொறுப்பை முழுமையாய் விட்டுவிடக் கூடாது. பெரியோர்களிடம் யோசனை கேட்டு நடந்தால், வெற்றி நிச்சயம்.

அசுவனி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

‘‘கீர்த்தியுஞ் செல்வமுங் கூடுமத
னோடு ஆயுளும் விருத்தி 
காணுமே - வாட்டிய பீடை  விலகியே
யோடப் பாரீர் - வாட்டமிலா காரியானை 
கை தொழுது வாட்டங் கருக்குவீரே’’

செல்வம், செல்வாக்கு இரண்டும் சேரும் நேரம் இது. ஆயுள் விருத்தி ஏற்படும். இதுவரை வாட்டிய நோய்களின் வீரியம் குறைந்து ஆரோக்கியம் மேன்மை காணும். சனி பகவானை அனுதினமும் பூஜித்துவர எல்லா வெற்றியும் குவியும் என்பதில் ஐயமில்லை.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
‘‘தீர்த்த யாத்திரை புரிவீரே-
வம்பொடு வழக்கும் வந்து அண்டுமே
உறவில் ஒரு விரிசலும் வந்திடுமே
நள்வரொடு ராசாங்க பயமுங் கூடுமன்றோ
தள்ளாறுறை யீசனை யண்டி இன்பமெய்துவீரே’’

புதிய உறவுகள் வேண்டாம். பழைய உறவுகளுடன் சுமுகமாகப் பழகுவது நன்மை பயக்கும். அடிக்கடி கோயிலுக்கு சென்று வந்தால், திருடர் பயம் நீங்கும். திருநள்ளாறு சென்று சனி பகவானை தொழுது வருதல் நல்ல பலனைத் தரும் என்பதாம்.

‘‘வேங்கை ஓணத்து வியாழனால்
கொண்ட மாலை தொழுவினை
யறுபடுமே - அம்மி யூரன்னை
ஆக்கமொடு மேற்றமுந்தர 
பாரீர் வையத்தாரே’’


ஆவணி மாதத்து திருவோண நாள் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று தொழுவதும் மம்மியூர் பகவதியை தொழுவதும் சகலவித மேன்மைகளை சேர்க்கும் என்கிறார், அகஸ்தியர்.

http://astrology.dinakaran.com/specialrasidetails.aspx?id=17

No comments:

Post a Comment