Translate

Monday 20 August 2012

தாக்குதல் நடத்தப்படமாட்டா! உறுதி மொழி காகிதத்தில் மட்டுமே உள்ளது! பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்


தமிழகத்தில் வேதாரண்யத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் '18ம் தேதியன்று வேதாரண்யத்தில் இருந்து கடலில் 5 பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 18 தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் குப்புசாமி என்ற மீனவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற மீனவர்கள் மீது பைப்புகளைக் கொண்டு தாக்கியதில் அவர்களும் காயமடைந்துள்ளனர்.
மீனவர்கள் கொண்டு சென்ற உணவு மற்றும் மீன்பிடிக்கத் தேவையான உபகரணங்களை பறித்துக் கொண்டு, படகுகளை கடலில் மூழ்கடித்துள்ளனர்.
எப்படியோ தப்பித்து மீனவர்கள் கரையேறியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக ஏழை, அப்பாவி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தியுள்ள மற்றொரு மோசமான தாக்குதல் இதுவாகும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், தொடர்ந்து எந்த தடையும் இல்லாமல் தாக்குதல் நடந்து கொண்டுதான் உள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினரிடம் மிக மென்மையானப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்ற இலங்கையின் உறுதி மொழி காகிதத்தில் மட்டுமே உள்ளது.
எனவே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்தும் வகையில் பிரதமர் இந்த பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய எல்லைப் பகுதிக்குள் பாதுகாப்பாக மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment