Translate

Thursday, 30 August 2012

தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் கிழக்கின் தேர்தல்!- வடுக்களும் வரலாறுகளும்


 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சமின்றி தேர்தல்களத்தில் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை  ஆதரித்து வாக்களித்து கிழக்கு மாகாணசபையை தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை முழங்கும் சபையாக மாற்றியமைப்போம். 
ஆங்கிலேயர் ஆட்சியில்1833 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் 1947 ம் ஆண்டு தேர்தலின் போது ஏழு தொகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வேழு தொகுதிகளும் தமிழ்ப்பேசும் இனங்களான தமிழர், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக ஏற்படுத்தப்பட்டிருந்தன.

மதங்களால் பிரித்துப் பார்க்கப்படுகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனமாக இருந்தபொழுதும் இலங்கைத் தீவில் அரசியல் வாதிகளின் பதவி மோகம் இவர்களை பிளவுபட்ட இனங்களாக மாற்றியமைத்திருந்தன. தாய் தமிழகத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழ்த் தேசிய இனத்துக்குள் வேறுபாடுகளின்றி வளர்ச்சிகண்டு வருகின்ற வேளையில் எமது தாய்மண்ணில் இந்த நிலை மாறியதற்கு சிங்களப் பேரினவாதமும் ஒரு காரணமாக இருந்து வந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக, தமிழரசுக்கட்சி , முஸ்லிம் காங்கிரஸ், சிங்கள தேசிய கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் என்பன களமிறங்கிய வேளையில் தமிழ்,முஸ்லிம் வேட்பாளர்கள் சிலர் சிங்கள தேசியக் கட்சிகளில் இணைந்து போட்டியிடுகின்றனர் . இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளப்போகின்ற அரசியல் கட்சிகளின் வரிசையில் இனங்களின் தனித்துவம் பேணப்படும் நிலையில் வாக்குகளின் தாக்கம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தப்போவது தவிர்க்கமுடியாத தொன்றாகும் .
கிழக்கு மாகாணம் தமிழ்ப் பேசும் மக்களாகிய தமிழர்,முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகமாகும் என்பது இன்று நேற்றல்ல இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதிலிருந்து சொல்லப்படுகின்ற அரசியல் கொள்கையாகும். இத்தாயகக் கோரிக்கை பிற் காலங்களில் பெரும் விடுதலைப் போராட்டமாக வெடித்து பல்லாயிரம் இளையோர்களின் தற்கொடையில் தேசிய எழுச்சியாக மாறி மீண்டும் தேர்தலாக வந்து. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நிற்கின்றது.
இத் தேர்தலில் நிற்கின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட்டாக பொது வேலைத்திட்டத்தில் இணைந்து செயல்பட முடியாமல் போனது இன்றைய நிலையில் ஆரோக்கியமானதாகயில்லை என்பது ஒருபக்கமிருக்க, தாம் சார்ந்த இனப்பிரிவுகளின் தனித்துவத்தை காப்பதற்கு தங்களை அர்ப்பணிப்பதற்கு தயாராக வேண்டும்.
பதவியை மட்டும் நோக்காகக் கொண்டு செயல்படுவதானது எதிர் விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டு தமிழ் தேசியத்தை நகைப்புக்குள்ளாக்கும் என்பதையும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். அச்சமின்றி அரசியலில் பயணித்து தங்களை இழந்தாவது தமிழ்த் தேசியம் காக்கப்பட வேண்டுமென்று உறுதி ஒவ்வொருவரிடமும் ஆணித்தரமாக பதிந்திருக்கவேண்டும்.
தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல்,விடுதலை என்ற அடிப்படையில் 1949 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் தோற்றத்திற்குப் பிறகு கிழக்கு மண்ணில் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழ்த் தேசிய இனமாக, தமிழர்களையும், முஸ்லிம்களையும் கூட்டாக அரசியல் களத்தில் பயணிக்க வைத்தது.
இதனடிப்படையில் 1952 ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் திருகோணமலையில் வெற்றியீட்டிய தமிழரசுக் கட்சி உறுப்பினர் திரு .N .R .இராசவரோதயம் அவர்களுடன் பிள்ளையார் சுழி போட்டு தமிழ்த் தேசிய எழுச்சியை ஆரம்பித்தது.
இதன் தொடர்ச்சியாக முஸ்லிம்மக்களையும் உள்வாங்கிய அமைப்பாக 1956 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொத்துவில் தொகுதியில் M . M .முஸ்தபா அவர்கள் தமிழரசுக்கட்சியில் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் திருகோணமலையில் மீண்டும் N . R .இராசவரோதயம் அவர்களும் மட்டக்களப்பில் S . இராஜதுரை அவர்களும் இணைந்ததாக மூன்று உறுப்பினர்களை கிழக்கு மண்ணில் தமிழரசுக் கட்சி பெற்றுக்கொண்டது.
கிழக்கு மாகாணம் ஆங்கிலேயரால் உருவாக்கப்படுகின்றபோது தமிழர், முஸ்லிம்கள் ஆகிய இரண்டு பிரிவுகளின் தாயகம் என்கின்ற நோக்கத்தோடு இவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த தொகுதிகள் பிரிக்கப்படிருந்தன.
1947 ம் ஆண்டு தொடங்கம் 1956 ம் ஆண்டு வரை கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மூதூர், கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு , கல்முனை, பொத்துவில் ஆகிய ஏழு தொகுதிகள் மாத்திரம் அமைந்திருந்தன. இத் தொகுதிகளிலிருந்து தமிழரும்,முஸ்லிம்களும் மாத்திரம்தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியிருந்தனர்.
இதன் மூலம் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம் என்பது வலியுறுத்தப்படுகின்றது. 1947 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொத்துவில் தொகுதியில் M . M . இப்ராகிம் ஹாஜியார் சுயேட்சையிலும், கல்முனைத்தொகுதியில் M S .காரியப்பர் ஐ . தே .கட்சியிலும் , பட்டிருப்புத் தொகுதியில் U S .எதிர்மனசிங்கம் சுயேட்சையிலும், மட்டக்களப்புத் தொகுதியில் A L .சின்ன லெவ்வை ஐ .தே. கட்சியிலும், கல்குடாத்தொகுதியில் V . நல்லையா சுயேட்சையிலும், மூதூர் தொகுதியில் A R A M .அபூவக்கர் ஐ.தே.கட்சியிலும், திருகோணமலைத் தொகுதியில் S . சிவபாலன் தமிழ் காங்கிரஸ் கட்சியிலும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இத் தேர்தலில் மூன்று தமிழர்களும்,நான்கு முஸ்லிம்களும் தெரிவுசெயயப்படபோதும் மூவர் சிங்கள தேசியகட்சியான ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில் இந் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.ஏனெனில் 1952 ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியின் பிரசின்னம் திருகோணமலையில் ஏற்படுத்திய மாற்றத்துடன் கல்குடாத் தொகுதியில் சுயேட்சை உறுப்பினரான V .நல்லையா ஐ.தே.கட்சிக்கு மாறியதன் மூலம் சிங்கள தேசியக் கட்சியான ஐ.தே.கட்சிக்கு ஒரேயொரு ஆசனத்தை மாத்திரம் பெறமுடிந்தது.
நான்கு தமிழர்களும்,மூன்று முஸ்லிம்களும் தெரிவு செய்யப்பட்டதில் ஐந்து பேர் சுயேட்சையாக வெற்றியீட்டியிருந்தனர். முஸ்லிம்கள் எவரும் சிங்களக் கட்சியில் தெரிவுசெயயப்படாத முக்கியமான தேர்தலாக குறிப்பிடமுடியும். மூதூரில் M.E.H. முகமட் அலி, கல்முனையில் A . M .மேர்சா,பொத்துவிலில் M . M . இப்ராகிம் ஹாஜியார், பட்டிருப்பில் S.M. இராசமாணிக்கம்,மட்டக்களப்பில் R .B .கதிர்காமர் ஆகியோர் சுயேட் சையிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிருந்ததையிட்டு சிங்களக் கட்சிகளின் ஆதிக்கம் செல்வாக்கு பெறாத காலமாக இருந்ததையும் குறிப்பிடமுடியும்.
1956 ம் ஆண்டு நடந்த தேர்தலில்போது கிழக்கு மாகாணத்தில் ஏழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் தமிழரும்,நான்கு தொகுதிகளில் முஸ்லிம்களும் தெரிவாகியிருந்தபோதும் எவரும் சிங்கள தேசியக் கட்சிகளின்மூலம் உறுப்பினராகவில்லை.இதன் மூலம் சிங்கள ஆதிக்கத்தை விட தனிநபர்களின் செல்வாக்கும், இனங்களின் தனித்துவமும் பேணப்பட்டதான நிலையில் இத்தேர்தல் அமைந்திருந்தது.
1960 ம் ஆண்டுத் தேர்தலின்போது, கிழக்கு மாகாணத்தில் ஒன்பது தொகுதிகள் சிங்கள அரசினால் உருவாக்கப்பட்டிருந்தன. இதில் மிகப்பெரியதாக தமிழ்த் தேசிய இனத்தினால் பார்க்கப்பட்டவிடயம் அம்பாறை என்ற சிங்களத் தொகுதியின் ஆக்கிரமிப்பு எமது தாய் மண்ணில் இனப்பரம்பல் மாற்றத்திற்கு அத்திவாரமாக அமைந்திருந்தன.
1948 ம் ஆண்டு சிங்களப் பேரினவாதத்தின் பிடிக்குள் தமிழர் தாயகம் கொண்டுவரப்பட்டதிலிருந்து கிழக்கு மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக அம்பாறைத் தொகுதி தமிழ்த்தேசிய தாயகத்தின் ஆக்கிரமிப்புக்கு அத்திவாரமாக அமைந்தது.
பாரிய இன விகிதாசார மாற்றத்தை கிழக்கு மண்ணில் உருவாக்கியதையும் காணமுடிந்தது. திட்டமிட்ட குடியேற்றமும், அருகிலிருந்த சிங்கள மாவட்டங்களிருந்து பிரிக்கப்பட்ட சிங்கள உதவி அரச அதிபர் பிரிவுகளும் இணைக்கப்பட்டதாக அம்பாறை சிங்களத் தொகுதி இருந்து வருகின்றது.
இந்த ஆரம்பம் எமது தாயக பூமியில் இன வன்முறை உருவாவதற்கு காரணமாக அமைந்ததை 1958 ம் ஆண்டு இன அழிப்பு கோடிட்டுக்காட்டுகின்றது. இவ்வாறு பலகோணத்திலும் ஆரம்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கையில் போராட்டங்களும், துரோகங்களும், தேர்தல்களும் வந்து கொண்டேயிருக்கின்றன.
விடியலை நோக்கிய சாவுகளும், இழப்புக்களும் இரண்டு இனப்பிரிவுகளின் இருப்புக்கு ஆபத்தை கிழக்கில் உண்டு பண்ணிக்கொண்டேயிருக்கின்றன. இதற்கு காட்டிக்கொடுப்புக்களும், துரோகங்களும் அரசியலில் விலைபோய் ஆபத்தை தமிழ்த் தேசியத்திற்கு ஏற்படுத்துகின்றன.
1960 ம் ஆண்டு மார்ச் மாதத்திலும், யூலை மாதத்திலும் நடந்த தேர்தல்களிலும் தமிழ்த் தேசியத்தின் பலம் சிங்களக்கட்சிகளிடம் சோரம் போகாமல் பாதுகாக்கப்பட்டன. இத் தேர்தல்களில் ஒன்பது தொகுதிகள் கிழக்கில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதில் அம்பாறை தவிர்ந்த ஏனைய தொகுதிகளில் தமிழ்த் தேசியத்தின் பலம் வெளிப்படுத்தப்பட்டு, தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும், தேசியப்பற்றும் உணர்த்தப்பட்டிருந்தன.
திருகோணமலையில் N .R . இராசவரோதயம், மூதூரில் ரி. ஏகாம்பரம் , கல்குடாவில் R .மாணிக்கவாசகர், மடடக்களப்பில் S . இராசதுரை , பட்டிருப்பில் S . M .இராசமாணிக்கம் , கல்முனையில் 1960 ஜூலையில் M . C .அகமட் ஆகியோர் தமிழரசுக்கட்சி சார்பிலும், பொத்துவிலில் M . A .அப்துல் மஜீத் , நிந்தவூரில் M .I .M .மஜீத் ஆகியோர் சுயேட்சையிலும் தெரிவாகியிருந்தனர்.
இத் தேர்தலில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டதனால் A .H .மாக்கான் மரைக்கார் மாத்திரம் ஐ .தே .கட்சியில் தெரிவானார் .ஆறு தொகுதிகளில் ஐந்து தமிழர்களும் முஸ்லிம் ஒருவரும் தமிழரசுக் கட்சியில் வெற்றியீட்டி கிழக்கின் பெரும்பான்மையை உறுதிப்படுத்தினர்.
இக்காலங்களில் ஏற்பட்டிருந்த தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் , ஒற்றுமையும் நீடித்திருந்திருந்தால் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்ட இழப்புக்களும் துன்பங்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். அது மட்டுமல்லாமல் தனித்துவம் பாதுகாக்கப்பட்டு, மத சுதந்திரமும் பேணப்பட்டிருக்கும்.
சிங்களப் பேரினவாதத்தின் திட்டங்களும் செயல்படுத்த முடியாதவாறு தமிழ்த் தேசிய அரசியல் தடுத்து நிறுத்தியிருக்கும். இக்காலங்களில் மடடக்களப்பில் A .L .சின்ன லெவ்வை, கல்முனையில் S .Z .M மசூர் மௌலான போன்றவர்களும் தமிழரசுக்கட்சியில் இணைந்து போட்டியிட்டிருந்தனர்.
தந்தை .செல்வா அவர்களினால் மிகவும் விரும்பப்பட்ட சிறந்த மேடைப் பேச்சாளரான மசூர் மௌலான கிழக்கு தமிழ் மக்களால் மிகவும் அறியப்பட்டவராகவிருந்தார். அன்றிருந்த அந்த ஒற்றுமை, பின்பு இல்லாமல் போனதற்கு அரசியல் வாதிகளின் பதவிச் சுயநலமும், சிங்களப் பேரினவாதமும் காரணமாக இருந்ததைக் குறிப்பிடமுடியும்.
ஏனெனில் தாங்கள் சார்ந்த இனங்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வதற்கு மாறாக தங்கள் நலனுக்காக தமிழ்த் தேசியத்தை சிதைத்து விட்டிருந்தனர்.இனமோதல்களையும் சாதகமாக்கிக்கொண்டனர்.
1963 ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1965 ம் ஆண்டு நடந்த தேர்தலில் திருகோணமலையில் S.M.மாணிக்கராஜா, மூதூரில் M .E .H .முகமட் அலி, மட்டக்களப்பில் S .இராசதுரை,பட்டிருப்பில் S .M .இராசமாணிக்கம் ஆகியோர் தமிழரசுக் கட்சியிலும், கல்குடாவில் K .தேவநாயகம், நிந்தவூரில் M . M .முஸ்தபா.ஆகியோர் ஐ .தே.கட்சியிலும்,கல்முனையில் M .S .காரியப்பர்,பொத்துவில்லில் M .A .அப்துல் மஜீத் ஆகியோர் சுயேட்சையிலும் தெரிவாகினர்.
இத் தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு நான்கு உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றன. ஆனால் 1970 ம் ஆண்டுத் தேர்தலில் திருகோணமலையில் B .நேமிநாதன், இரட்டை அங்கத்தவராக மாற்றப்பட்ட மூதூரில் A .தங்கத்துரை, மட்டக்களப்பில் S . இராசதுரை ஆகிய மூவரும் தமிழரசுக்கட்சியிலும் ,சிங்கள தேசியக்கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிழக்குப் பிரசன்னத்தின் மூலம் மூதூரில் A . L .அப்துல் மஜீத், கல்முனையில் M . C .அகமட் ஆகியோர் அக்கட்சியில் தெரிவாகினர்.
அத்தோடு மட்டக்களப்பில் சுயேட்சையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ராஜன் செல்வநாயகம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து அவ்வரசாங்கத்தினால் மட்டக்களப்பு அரசாங்க அதிகாரி என்ற பதவியைப்பெற்றுக்கொண்டார். கல்குடாவில் K..தேவநாயகம் ,பட்டிருப்பில் தம்பிராசா ,நிந்தவூரில் M . M .முஸ்தபா ,பொத்துவிலில் M .A .அப்துல் மஜிட் ஆகிய நால்வரும் ஐ .தே. கட்சியில் தெரிவானார்கள்.
இத்தேர்தலில் கவனிக்கப்படவேண்டியது என்ன வென்றால் சிங்கள தேசியக்கட்சிகள் கிழக்கினுள் புகுந்து தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கு ஆப்பு வைத்து, சுயேட்சையில் தம்மக்களின் பலத்துடன் தலைநிமிர்ந்து நின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளையும், தமிழரசுக்கட்சிசார்பில் வெற்றியீட்டி தமிழ் தேசிய ஒற்றுமையுடன் செயல்பட்டவர்களையும் தம்பக்கம் இழுத்து தமிழ்த் தேசிய இனங்களுக்கிடையில் மாபெரும் பிளவை உருவாக்குவதன்மூலம்,உரிமைக்காக ஒற்றுமையுடன் செயல்பட்ட மக்களை பிரித்து வெற்றியும் கண்டது.
K.தேவநாயகம் ,தம்பிராசா ,ராஜன் செல்வநாயகம் போன்ற தமிழ்த் தேசிய விரோதிகளையும் உருவாக்கி தமிழ் மக்களின் உரிமைப்போரை நாசப்படுத்தியது. தம்பிராசா ஐ .தே .கட்சியிலிருந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குத் தாவி, தனித்தமிழ்த் தொகுதியான பட்டிருப்பு மக்களின் தன் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டிருந்தார்.
வரலாற்றில் மன்னிக்க முடியாத தமிழ்த் தேசவிரோதிகளாக தங்கள் சுயருபத்தைக் காட்டி எழுச்சியுற்ற இளைஞர்களை அடக்குவதில் சிங்களத்திற்கு துணைபோயினர். நம்பிய முஸ்லிம் மக்களுக்கு சரியான அரசியல் வழியை கிழக்கில் உள்ள முஸ்லிம் அரசியல் வாதிகள் காட்டத்தவறியதால் கல்முனையில் M.H.M.அஷ்ரப் அவர்களின் எழுச்சி அரசியல் முஸ்லிம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிய நிலையில் 1977 ம் ஆண்டுத் தேர்தலை தமிழ்த் தேசிய இனமான தமிழ் ,முஸ்லிம் மக்கள் சந்தித்தனர்.
சிங்கள ஆக்கிரமிப்பினால் அல்லை கந்தளாய், மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றம் சேருவில என்ற சிங்களத் தொகுதியை திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கக் காரணமாகவிருந்தன.
சிங்கள அரசுகள் மாறியபோதும் தமிழ்ப் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்ட குடியேற்றம் என்பதில் ஒன்றுபட்ட அடிப்படையில் செயல்பட்டதனால் ஐ .தே கட்சியால் அம்பாறைத் தொகுதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் சேருவிலத் தொகுதியும் கிழக்கு மண்ணில் ஏற்படுத்தப்பட்டு சிங்கள இனப்பரம்பலை விரிவுபடுத்தியது.
இதன்மூலம் சிங்களப் பேரினவாதம் தனது உண்மையான நிலையை வெளிப்படுத்திய போதும் தமிழ் முஸ்லிம் மக்களில் கணிசமானோர் இதை உணர்ந்து கொள்ளாதது, தங்கள் பதவி மோகத்தினால் என்பதை உணரக்கூடிதாகவுள்ளது. இதற்கு கணிசமான தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகள் அடிமையானர்கள். ஆனால் இக்காலத்தில்தான் தமிழ்ப்பேசும் மக்களின் அடிமை விலங்கை உடைப்பதற்கு இளைஞர்களும் ஆயத்தமானார்கள்.
1972 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு, குடியரசு ஆட்சிமுறையும் இலங்கைத் தீவு மூன்று இனமக்களின் வாழ்விடம் என்பதற்கு மாறாக பௌத்த மேலாதிக்கத்தில் மற்றைய மதங்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், சிங்கள பேரினவாதத்தின் வெளிப்பாடாக சிறுபான்மை இனங்களில் அனைத்து உரிமைகளும் நசுக்கப்பட்ட நிலையும், தமிழ் இளைஞர்களை உரிமைபோரை தீவிரப்படுத்தத் தூண்டியது.
இக்காலத்தில் மட்டக்களப்பில் கவிஞர் காசி ஆனந்தன் போன்ற உணர்வாளர்கள் அடக்கு முறையை எதிர்த்துக் குரல் எழுப்பியதால் சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டனர். கிழக்கு மண்ணில் எல்லா இடங்களிலும் தமிழ் இளைஞர்கள் உணர்ந்தெழுந்தனர், சிங்களக் கொடியை ஏற்றுக்கொள்ள மறுத்து எரித்துச் சாம்பலாக்கினார் .சுதந்திர கொண்டாட்டங்களை புறக்கணித்தனர்.
இப்புறக்கணிப்பு பள்ளிக்கூடங்கள் தொடங்கி பல்கலைக்கழகம்,அரச அலுவலகங்கள் வரை தமிழ் இளைஞர்களால் எதிர்ப்புப் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை "தனித் தமிழீழம் "தீர்மானமும், அதனைத் தொடர்ந்த 1977 ம் ஆண்டுத் தேர்தலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தன.
தமிழ் இளைஞர் பேரவை இத்தேர்தலில் பெரும்பங்களிப்புடன் செயல்பட்டதனால் தமிழின எழுச்சியின் உச்சகட்டனிலையில் இத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் இரட்டை அங்கத்தவராக இருந்த மூதூர் தொகுதி ஒரு அங்கத்தவர் தொகுதியாகவும், பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாகவும் மாற்றப்பட்டிருந்தன.
கல்முனை M . H .M .அஸ்ரப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் அரசியல் அறிவாளர்கள் பலர் இணைந்து முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கட்சியைத் தோற்றுவித்து தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி அரசியலில் கூட்டாக தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.
M.H.M.அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த தொகுதிகளின் மேடைகளில் தமிழ்த்தேசிய ஒற்றுமையை குறித்துப் பேசியது அரசியல் விடுதலை முழக்கமாக இருந்தது. இதனால் தமிழ்,முஸ்லிம் இளைஞர்களின் தேசிய உணர்வுகள் தட்டியெழுப்பபட்டிருந்தன. இந்நிலை தொடராதது வேதனைக்குரியதாகும்.
1956 ம் ஆண்டு தொடக்கம் 1965 ம் ஆண்டு வரை கிழக்கு மண்ணில் முளைத்திருந்த தமிழ்த் தேசியம் ஒற்றுமை அழிக்கப்பட்ட நிலையில் தமிழ்த்தேசிய ஒற்றுமை தளிர்விட்டதாக 1977 ம் ஆண்டு அமைந்திருந்தது. இந்த எழுச்சிப்பயணத்தில் M .H .M .அஸ்ரப் அவர்களுடன் கல்முனை டாக்டர் உதுமாலெவ்வை போன்றவர்களும் இணைந்திருந்தனர்.
சிங்கள தேசியக்கட்சியான ஐ .தே, கட்சியின் அன்றைய தலைவர் J .R .ஜெயவர்த்தன கிழக்கில் ஏற்பட்ட தமிழ்த்தேசிய எழுச்சியைக்கண்டு அஞ்சியவராக,வாக்குறுதிகளையும், பதவிகளையும் தேர்தல் மேடைகளில் அள்ளி வழங்கினார். தேர்தல் முடிவதற்கு முன்னரே மந்திரி பதவிகள் பற்றிய செய்தியை மக்கள் மத்தியில் பரப்பிவிட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் நடந்த தேர்தலில் திருகோணமலையில் R . சம்பந்தன், மட்டக்களப்பில் S . இராசதுரை .பட்டிருப்பில் P .கணேசலிங்கம் பொத்துவிலில் M .கனகரெட்ணம் ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் ,மூதூரில் S .M .மக்கின் , கல்முனையில் A . M .S .சம்சுதீன் சம்மாந்துறையில் H . L .M .காசிம் ஆகியோர் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான முஸ்லிம் மக்களின் வாக்குகளுடன் தமிழ் மக்களின் வாக்குகளை பெரும்பான்மையாகப்பெற்று தமிழ்த் தேசிய ஒற்றுமையை சிங்கள அரசுக்கு உணர்த்தியிருந்தனர்.
கல்குடா தொகுதியில் K.W.தேவநாயகம் சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிருந்தார். மூதூரில் மகறுப், மட்டக்களப்பில் பரித் மீராலெவ்வை, கல்முனையில் மன்சூர், சம்மாந்துறையில் அப்துல் .மஜீத், பொத்துவிலில் ஜாலாடின் ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவாகினர். மட்டக்களப்புத் தொகுதியில் காசி ஆனந்தன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 23 000 வாக்குகள் பெற்றபோதிலும் தெரிவுசெய்யப் படவில்லை.
இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையின் தவறானமுடிவு காரணமாக தமிழ்த் தேசிய எழுச்சியின் ஒற்றுமைக்கு சிறு அசைவைக் கொடுக்கக்கூடிய நிகழ்வாக அமைந்துவிட்டன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையைப் பொறுத்தமட்டில் மட்டக்களப்புத் தொகுதியில் இரண்டு ஆசனங்களைப்பெறும் நோக்கோடு வேட்பாளர் தெரிவு மேற்கொள்ளும் போது ஒரு வேட்பாளர் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஒருவராக இருக்கவேண்டியது கட்டாயமாகும் என்பதை உணரத்தவறியது அரசியலில் அவர்கள் விட்டபெருந்தவறாகவே குறிப்பிடவேண்டியுள்ளது.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தால் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையின் பலம் மேலும் அதிகமாக்கப்பட்டிருக்கும். இவ்வாறான தவறுகள் பிற்காலத்தில் முஸ்லிம் ஐக்கிய முன்னனி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக மாறுவதற்கு வாய்ப்பாக அமைந்தன.இத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை பெரும்பான்மையாக அளித்திருந்தனர்.
தமிழ்மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப் பட்டதேர்தலாக இது அமைந்திருந்தன. இத் தேர்தலில் தமிழ் இளைஞர்களின் பங்கு அதிகமாகவே காணப்பட்டது. தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான குரல் தாயகம்மெங்கும் ஓங்கி ஒலிக்கக் தொடங்கியது. தங்கள்வாழ்வைவிட தமிழ் மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்காக தங்களை அர்பணிப்பதற்கு தமிழ் இளைஞர்கள் தயாராகிக் கொண்டிருந்தவேளையில் 1982 ம் ஆண்டு மாவட்டசபைத்தேர்தலை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இத் தேர்தலில் திருகோணமலை,மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் வெற்றியீட்டியது. திருகோணமலையில் A .தங்கத்துரை , மடடக்களப்பில் S ,சம்பந்தமூர்த்தி, அம்பாறையில் முஸ்லிம் ஒருவரும் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேல்முருகு அவர்கள் அம்பாறை மாவட்டசபை உறுப்பினர் ஆனார். இத்தேர்தலில் பங்கெடுத்ததன்மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி மாபெரும் வரலாற்றுத் தவறை விட்டதனால் இளைஞர்கள் தங்கள் கைகளில் போராட்டத்தை எடுத்து விடுதலை நோக்கிய பயணத்தில் இலக்குத் தவறாது கால்பதித்தனர்.
மாவட்ட சபைத்தேர்தலில் தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்த போதும் தமிழர் விடுதலைக் கூட்டணி மாவட்டசபைத் தீர்வை ஏற்றுக்கொள்ள எடுத்ததீர்மானம் இளைஞர்கள் ஏமாற்றமடைவதற்கும், ஆயுதத்தை ஏந்துவதற்கும், அதில் உறுதியுடன் பயணிப்பதற்கும் காரணமாக அமைந்தன.
யாழ்ப்பாணத்தில் ஆவரங்கால் என்ற ஊரில் நடந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டாவது தேசிய மகாநாட்டில் தமிழ் இளைஞர்கள் வெளிக்காட்டிய அதிருப்தி இதற்கு சான்றாக அமைந்திருந்தன.ஆணை பெற்றுச்சென்றவர்கள் ஆசனங்களை அலங்கரிப்பதை விடுத்து அறப்போரில் தீவிரமாக செயல்பட்டு உரிமைப் போரை முன்னெடுத்திருந்தால் நிலைமை வேறாக அமைத்திருக்கும்.
இந்தப்பிழை தொடர்ந்து இடம் பெறக்கூடாது என்பதற்காகத்தான் அர்ப்பணிப்போடு, அச்சமின்றி அறவழியில் உறுதியோடு பயணிப்பவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இடம்பெற வேண்டும் என்பதை எமது மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தங்களை மேம்படுத்தி, தங்கள் குடும்பங்களை வெளிநாட்டில் வாழவைக்க விரும்புபவர்கள்,தமிழர் அரசியலிருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.
இப்படிச் செயல்பட்டதனால்தான் பல கசப்பான சம்பவங்களை தமிழ் அரசியல் வாதிகள் சந்திக்க வேண்டியிருந்தது. முஸ்லிம் அரசியல் வாதிகளான M . M .முஸ்தபா, M .S .காரியப்பர், M .E .H . முகமட் அலி, M .C .அகமட் ஆகியோர் சிங்களக் கட்சிகளுக்கு மாறாமல் ,தமிழரசுக் கட்சியில் தொடர்ந்திருந்தால் கிழக்கு மாகாணத்தில் அரசியல் நிலைமை ஆரோக்கியமானதாக அமைந்து தமிழ்த்தேசியத்தின் உரிமையும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்,அவ்வாறு நடக்காதது மிகவும் வருத்தத்துக்குரியதாக அமைந்து விட்டன.
ஆனால் 1977 ம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தோற்றமும், M .H .M .அஸ்ரப் அவர்களின் அரசியல் பிரவேசமும், அவருடைய மேடைப்பேச்சுகளும் முஸ்லிம் மக்கள் மத்தியில் சிங்கள கட்சிகளின் ஆதிக்கம் அகற்றப்படுவதற்கு வழிகோலியது என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால் குறுகிய காலத்தில் நிலைமை மாறியதனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றம், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ்த் தலைமைகள் விட்ட தவறும் ஒரு காரணமாக இருக்கலாம் A .அமிர்தலிங்கம் அவர்களின் தன்னிலை மேம்பாட்டுக்குகொள்கை காரணமாக தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்த தலைமையாக தமிழர் விடுதலை கூட்டணி மாறிவந்ததை அவதானிக்க முடிந்தது.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு கொடுக்கக்கூடிய கௌரவத்தையும் தவிர்த்து, தமிழ் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறியதும், தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து வந்த தேர்தல்களில் செல்வாக்கிழந்து போனதை 1989 ம் ஆண்டுத் தேர்தலில் அவதானிக்க முடிந்தது.
1987 ம் ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தமும்,இதன் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை ஆட்சி முறையும், 1988 ம் ஆண்டு ஒரு தேர்தலுக்கு வழிவகுத்தது. இத்தேர்தலில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய இடத்திலிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் பங்கெடுக்கவில்லை. 1977 ம் ஆண்டுத் தேர்தலின் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையை நம்பமுடியாத தமிழ் இளைஞர்கள் தங்கள் பாதையை தீர்மானிக்கத் தொடங்கினர்.
தமிழ் இளைஞர் பேரவையில் செயலாற்றிய பலர் விடுதலை அமைப்புக்குள் இணைந்து கொண்டு விடுதலைப் போராட்டத்தின் பாதையை ஆயுதப் போராட்டமாக மாற்றியிருந்தனர். இந்நிலையில் இந்தியாவின் பிரித்தாளும் தந்திரமும் தமிழ் மக்கள் மத்தியில் பலமான ஒரு அமைப்பை இயங்கவிடுவதை தடுக்கும் நோக்குடன் நான்கு இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்ததும், இயக்கங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கியதையும் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர்.
இந்தநிலையில்தான் திணிக்கப்பட்ட தீர்வாக மாகாணசபை உருவாக்கப்பட்டதும் 1988 ம் ஆண்டுத் நடந்த தேர்தலில் E .P .R .L .F .கட்சி போட்டியிட்டு மாகாணசபை ஆட்சியைச் செய்ததையும் குறிப்பிட முடியும். இந்தத் தேர்தலில் தமிழர் அரசியலில் பெரும்பங்கை வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஒதுங்க வேண்டிய நிலையிலிருந்தது.
இதனால்தான் எந்த அரசியல் அமைப்பும், எந்த விடுதலை இயக்கங்களும் பங்குபற்றாத நிலையில் மாகாணசபைத் தேர்தலில் E .P .R .L .F போட்டியிட்டு தெரிவானது.ஆனால் 1989 ம் ஆண்டு நடந்த சிங்களப் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் நிலைமை மாறியிருந்ததை காணமுடிந்தது .
கிழக்கு மாகாணத்தில் 1988 ம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் E . P .R .L .F .கட்சிக்கு கிடைத்த வேளையில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததனால் மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர்ந்திருந்தது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், முஸ்லிம் மக்களின் மனநிலையையும் கருத்தில் எடுத்து செயல்பட்டிருந்தால் மாகாணசபை ஆட்சியில் அவர்களையும் பங்காளர்களாக மாற்றியமைத்திருக்க வேண்டும் .இது அன்று நடைபெறவில்லை என்பதனால் இடைவெளியும் அதிகமாகியது என்பதை மறுப்பதற்கில்லை .
1989 ம் ஆண்டுத் தேர்தலில் நிலைமை மாற்றமடைந்து ஒதுங்கியிருந்த தமிழ்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து போட்டியிட முன்வந்ததற்கு இந்திய அரசின் ஆலோசனை, அனுசரணையும் காரணமாக அமைந்திருந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய நான்கு அமைப்புக்களும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.
தமிழ்த் தேசியத்தின் பாதுகாப்புக்காக, தமிழீழ விடுதலையை நோக்கி தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் போராடிக்கொண்டு இருக்கின்ற வேளையில் இத் தேர்தலில், இந்திய அரசின் சூழ்ச்சிக்குள் விழுந்து அடுத்த வரலாற்றுத் தவறை தமிழர் விடுதலைக் கூட்டணி செய்திருந்தது. தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்பதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அரணாக இருப்பதை விடுத்து வஞ்சகத்துக்குள் வீழ்ந்து தமிழ்த் தேசியத்தின் பலத்தை சிதைத்திருந்தனர்.
இதனால் தமிழ்த் தேசியத் பற்றாளர்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் EROS இயக்கத்தை தேர்தல் களத்தில் இறக்கியது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் E . R O .S அமைப்பு தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் பலரை இத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியது. அம்பாறை மாவட்டத்தில் E . R O .S அமைப்பு போட்டியிடவில்லை.
விகிதாசார அடிப்படையில் முதல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் A .அமிர்தலிங்கம் , யோசெப் .பரராசசிங்கம்,தமிழர் விடுதலைக் கூட்டணியிலும், கோ .கருணாகரம் தமிழீழ விடுதலைக் இயக்கத்திலும் , பிரின்ஸ் காசிநாதர் , சாம் தம்பிமுத்து ஆகியோர் E .P R L .F கட்சியிலும் , அல்பட் ஜீவரத்தினம், E .N .D .L F கட்சியிலும் வேட்பாளராக போட்டியிட்டனர்.
இந்நிலையில் தமிழ்த்தேசியத்தின் தன்மானம் காக்கப்பட்டு, இந்திய அரசுக்கு தமிழ்மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப் படவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் முன் வைக்கப்பட்ட தான நிலையில் E .R .O .S இயக்கத்தின் தேர்தல் வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர்.
இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சௌந்தரராஜன், குணசீலன், தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி அமைச்சர் பசிர் சேகு தாவுத் ஆகியோர் உட்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். இதே போல் திருகோணமலையில் R .சம்பந்தன் உட்பட வேட்பாளர்கள் நான்கு கட்சியிலும் தேர்தலில் போட்டியிட்டபோதும் E R O S இயக்கம் தமிழ்த் தேசியப் பற்றளார்களை களமிறக்கியத்தை குறிப்பிட முடியும்.
இத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகளை T E L O வும் E .P .R L .F தாராளமாகச் செய்திருந்தனர். வாக்காளர்களின் அட்டைகள் பறிக்கப்பட்டு, வாக்குகள் கொள்ளையிடப்பட்டு அளிக்கப்பட்டதானால் K .கருணாகரனம்,பிரின்ஸ்,காசிநாதர்,சாம்.தம்பிமுத்து .ஆகியோர் செய்யப்பட்டனர். A .அமிர்தலிங்கம்.ஜோசெப்.பரராசசிங்கம் உட்பட்ட ஏனையோர் குறைந்தளவு விருப்பு வாக்குகள் பெற்றிருந்தனர்.
E .R .O .S இயக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் இதன் மூலம் A . குணசீலன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். மொத்தமாக இத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களை தமிழர் தரப்பு பெற்றிருந்தபோதும் ஐந்தாவது உறுப்பினரை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது.குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் E .R .O .S உறுப்பினர்கள் தொகையை இழந்திருந்தது.
திருகோணமலை மாவட்டத்தில் உதய சூரியன் கூட்டைவிட தமிழ்த் தேசியத் காப்பாளர்க ளான E .R .O .S அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றிருந்தன. இதில் R .சம்பந்தன் ஐயா உட்பட்ட எவரும் வெற்றியடையவில்லை. E .R O .S இயக்கத்தில் தெரிவு செய்யப்பட்ட S .இரட்னராசா , k .மாதவராசா ,ஆகிய இருவரும் பிரபல்யம் பெற்ற அரசியல் வாதிகளாக இல்லாதபோதும் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் வாக்களித்ததைக் காணமுடிந்தது.இத் தேர்தல்மூலம் தந்தை செல்வாவின் தலைமைக்கு கொடுத்திருந்த ஆணையை மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வழங்கியிருந்தனர்.
விகிதாசார பிரதிநித்துவம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய இனங்களின் பிரதிநித்துவதிற்கு ஆபத்தை உண்டு பண்ணுவதாகவும் அமைந்திருந்தன. இதனை 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அவதானிக்க முடிந்தது.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறையில் நாலு தொகுதிகளில் மூன்று தொகுதிகள் தொகுதிகள் முஸ்லிம் மக்களுக்கு கூறியதாக இருந்த போதும் தமிழ் மக்கள் தொகைக்கு ஓர் பிரதிநித்துவம் பெறக்கூடிய வகையிலும் விகிதாசார பிரதிநித்துவ தேர்தல் முறை இருந்தது. மூன்று விருப்பு வாக்குகள் என்ற நிலையில் வாக்குகள் அழிக்கப்படும் பொழுது இனங்களின் வாக்குகள் கூட்டணி கட்சிகளுக்கு பிரிக்கப்பட்டு எதிர் பார்ப்புக்கு மாறாக முடிவுகளும் அமைந்து விடுகின்றன.
இதனை 1989 ம் ஆண்டு அம்பாறை மாவட்ட தேர்தலில் பெரும்பான்மையை 1675 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மூன்று சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.கவனத்தில் கொள்ளவேண்டும்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம் மக்களது பெரும்பான்மை கிடைத்த போதும் ஒரு உறுப்பினரை மாத்திரம் பெறமுடிந்தது. எனவே ஆறு உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிலையிலும் அம்பாறை மாவட்டத்தில் நாலு சிங்கள உறுப்பினரும் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் ஒரு தமிழ் உறுப்பினரும் தெரிவாகி இருந்தனர்.
எனவே தனித்து ,ஒருமித்து பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் முஸ்லிம் மக்கள் இருந்தால்தான் எதிர்பார்க்கின்ற உறுப்பினர்களை அடையமுடியும். அவதானத்தை இழந்தால் அங்கத்தவர் தொகையையும் இழக்க நேரிடும்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை ,திருகோணமலை மாவட்டங்களில் சிங்களக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதில் ஏற்படபோகும் ஆபத்தை முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களும் புரிந்து கொள்ளவேண்டும். இந்த ஆண்டுத் தேர்தலில் M.H.M.அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்குககளில் தெரிவாகினார்.
திவ்வியநாதன் தமிழர் விடுதலைக் கூட்டணியில் டெலோ இயக்கம் சார்ந்ததாக இருந்தபோதும் தமிழ் தேசிய உணர்வின் தாக்கமே தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தன .
இவ்வாறு தேர்தல்களின் நிலவரம் கிழக்கில் இருக்கின்றவேளையில் 1956 ம் ஆண்டு இலங்கைத்தீவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
சிங்களத் தேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கைச்சரித்து சிங்களத் தேசியத்தின் இனவாதத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய வேளையில் தமிழர் தாயகத்தில் தமிழரசுக்கட்சி பெரும்பான்மையைப் பெற்று தமிழ்மக்களின் மத்தியில் விடுதலைப் புரட்சியொன்றை ஏற்படுத்தியிருந்தது.
ஆட்சிமாற்றமொன்றுக்காக இனவாதத்தை முன்னிறுத்திய S .W .R .D .பண்டாரநாயக்க ஆட்சியை பெற்றகையோடு தமிழ்த் தேசியப்பிரச்சனைக்கு தீர்வுகாண முற்பட்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
இவ்வொப்பந்தம் சிங்களப் பேரினவாதத்தினால் கிழித்தெறியப்பட்டு தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்ததாக சிங்களக் கட்சிகள் மாறியிருந்தன.தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு சமஷ்டிதீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறிய S .W .R .D .பண்டாரநாயக்க செல்வா அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
1989 ம் ஆண்டுத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்த்தேசியத்தின் எழுச்சியை இந்திய அரசு மதிக்கக் தவறியதனால் தமிழ்த் தேசியப் பாதுகாப்புக்கான போராட்டம் தமிழீழ தாய்மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
1994 ம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தலில் அக்கறை கொண்டவர்களாகவும் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கவில்லை. இதை உணர்ந்து மக்களும் வாக்களிப்புக்களில் உற்சாகத்தை வெளிப்படுத்தவில்லை.
இத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் அ .தங்கத்துரை, அவர்களும் மட்டக்களப்பில் ஜோசெப் பரராசசிங்கம் , கி .துரைராசசிங்கம் , பொன் .செல்வராசா ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து M.H.M அஸ்ரப், ULM. முகைதீன் ஆகியோரும், ஐ .தே .கட்சியில் மூன்று சிங்கள உறுப்பினர்களும்.பொதுசன முன்னணியில் ஒரு சிங்கள உறுப்பினரும் தெரிவாகியிருந்தனர்.
ஆறு உறப்பினர்கள் தெரிவு செய்யும் வகையில் நாலு சிங்களவரும் , இரண்டு முஸ்லிங்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகினர். யாழ்ப்பாணம் ,வன்னி மாவட்டங்களில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்திருந்தனர் .இதனால் குறைந்தளவு வாக்குகள் பெற்று தமிழ்தேசிய விரோதிகளான E .P .D P .யாழ்ப்பாணத்தில் ஒன்பது உறுப்பினர்களையும், P . L .O .T வன்னியில் மூன்று உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டனர்.
விடுதலை இயக்கங்கள் என்று வெளிப்பட்டவர்கள் எல்லாம் பதவியை நோக்காகக் கொண்டு தேர்தல் அரசியலுக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள். விடுதலைப்புலிகள் இயக்கமும், E .R .O .S . இயக்கமும் தமிழ் மக்களின் உண்மை நிலையை இந்திய அரசுக்கு உணர்த்தி விடுதலைப் போராட்ட பாதையில் தொடர்ந்துசென்றனர்.
அடுத்து வந்த 2000 ம் ஆண்டுத் தேர்தலை நோக்குகின்றபோது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைப்போட்டி அக்கட்சியைப் பலவீனப் படுத்தியிருந்தது.இதனால் பல முஸ்லிம் கட்சிகள் தோற்றம் பெற்றிருந்தன. மூன்று கட்சிகளாக பிரிந்து நிற்கின்ற முஸ்லிம் மக்கள் தன்னிலை இழந்து சிங்களக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தங்கள் பதவிகளுக்காக முஸ்லிம் மக்களை அடகு வைத்துள்ளதை அவதானிக்க முடிந்தது.
ஜனப் .M .H .M .அஸ்ரப் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட உணர்வு கிழக்கில் சிங்களக்கட்சிகளை வலுவிழந்த நிலையில் மாற்றியிருந்தன. ஆனால் இத் தேர்தலில் எல்லாம் தலை கீழாக மாறியிருந்தன, அதுமட்டுமல்லாமல் தனித்துவத்தை இழந்து சிங்களக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு மரச்சின்னம் பற்றியிருந்த வேர்கள் பிடுங்கப்படுவதற்கு காரணமாகவிருந்தனர்.
முஸ்லிம் தலைமைகள் வரலாற்றில் விட்டுவந்த தவறை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்திருந்தது .2000 ம் ஆண்டு தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் முதன் முதலாக தமிழர் ஆசனம் இழக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் நிமலன் சௌந்தரநாயகம், ஜோசெப் .பரராசசிங்கம் ஆகியோரும்,அம்பாறை மாவட்டத்தில் பேரியல் .அஸ்ரப் , A .L .M .அதவுல்லா ,ULM முகைதீன் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாககவும், ஐ . தே கட்சியில் இரண்டு சிங்களவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு சிங்கள உறுப்பினரும்,E P D P கட்சியில் M குணசேகரம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார் . 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிலையில் அம்பாறையில் மூன்று சிங்கள உறப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
இத் தேர்தலில், தேர்தலை நோக்கமாகக் கொண்ட தமிழ்க் குழுக்கள் எல்லாம் தமிழ்க்கட்சிகள் என்றடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்மக்களின் வாக்குகளை பிரித்து இருந்தன.இதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது .இத் தேர்தலின் முடிவுகளைத் கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் மீண்டும் நடந்த 2001 ம் ஆண்டுத் தேர்தலுக்கு தமிழ்க்கட்சிகளும், தமிழ் மக்களும் தயாராகியிருந்தனர்.
2001 ம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், தமிழ் காங்கிரஸ் , தமிழீழ விடுதலை இயக்கம் ,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பிரேமச்சந்திரன் அணி ) ஆகியவை உதய சூரியன் சின்னத்தில் ஒன்று சேர்ந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் இழக்கப்பட்ட ஆசனம் மீட்கப்பட்டநிலையில் R .சம்பந்தன் ஐயா அவர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கவடிவேல், ஜோசெப் .பரராசசிங்கம், கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை )ஆகியோரும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டது.
பொ .ச .ஐ .மு கூட்டணியில் தே .ஐ .முன்னணித் தலைவி பேரியல் அஸ்ரப் தெரிவாகி இருந்ததால் நாலு முஸ்லிம் உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள முடிந்தது . ஐ .தே கட்சியிலும் , பொ .ச .ஐ .மு யிலும் இருந்து இரண்டு சிங்கள உறுப்பினர்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்புபில் சந்திரநேரு அவர்கள் தெரிவாகியிருந்தார்.
காலமாற்றத்தில், உலக ஓட்டத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலையை உத்தியோக பூர்வமான தேர்தல் விருப்புக்களின் மூலம் தமிழ் மக்களின் ஆணையுடன் உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய தேவையில் தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்ததனால் உண்மையாக விடுதலையை நேசிக்கும் அனைவரையும் அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு பதவியை எதிர்பார்த்தவர்களையெல்லாம். கடமையை உணர்த்தி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதற்கு உதய சூரியனில் ஏற்பட்டிருந்த கூட்டை அங்கீகரித்த வேளையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி கூட்டை உடைத்துச் சென்று விட்டார்.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் சின்னமான வீட்டை வைத்து எல்லோரையும் ஒரே வீட்டுக்குள் ஒன்று சேர்த்து புதிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக 2004 ம் ஆண்டுத் தேர்தலைத் தமிழ் மக்கள் பொது ஆணை அடிப்படையில் அணுகுவதற்கு தேசிய விடுதலை இயக்கமும், தமிழ் மக்களும் முகம் கொடுத்திருந்தனர்.
2004 ம் ஆண்டுத் தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தன.ஏனெனில் அனைத்துலகத்தரப்பின் அனுசரணையுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த வேளையில் இத் தேர்தல் நடந்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தளபதி கருணா அவர்களின் துரோகத்தனத்தால் தனித்தியங்கும் நிலையில் எடுத்த தீர்மானத்திற்குமிடையில் இத்தேர்தல் நடக்கின்ற பொழுது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் கருணா அவர்களின் விருப்புக்குட்பட்ட வகையில் வேட்பாளர் தெரிவும் இடம்பெற்றிருந்தது.
எப்படியிருந்தும் தமிழ் மக்கள் தேசிய விடுதலை இயக்கத்தின் மக்கள் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக இத் தேர்தலைப் பயன்படுத்த எண்ணிச்செயல்பட்டிருந்தனர். வேட்பாளர் தெரிவில் கட்சி வேறுபாடுகள், இயக்க வேறுபாடுகள் மற்றும் மக்கள் செல்வாக்கு என்பன போன்றவைகள் முன்னிறுத்தப்படாமல் ஒன்று பட்ட தமிழ் மக்களின் பலம் என்றவகையிலும் வேட்பாளர்கள் இணைக்கப்பட்டிருந்தனர்.
இதில் ஜோசெப் .பரராசசிங்கம் தமிழரசுக் கட்சியினூடாக அரசியலில் நுழைந்தவர்.தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற வகையில் மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினராக பலமுறை தெரிவாகியிருந்தவர். கிங்ஸ்லி. இராசநாயகம் அவர்கள் தமிழ்த் தேசியப் பற்றோடு,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இணைந்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுசேர்த்து, வட தமிழீழத்தில் பல ஆண்டுகள் மறைந்து வாழ்ந்து திரும்பியவர்.
அது மட்டுமல்லாமல் இந்தியப்படை எம்மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் வெளிப்பாடான அன்னையர் முன்னணியின் ஆலோசகராக செயல்பட்டு இந்தியப் படையினரால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏனைய வேட்பாளர்களான கனகசபை . அரியநேந்திரன்,ஜெயானந்த மூர்த்தி,தங்கேஸ்வரி, அரசரெத்தினம் போன்றவர்கள் எந்தவிதத்திலும் கடந்த கால செயல்பாட்டில் தமிழ்த் தேசியப் பற்றுப் பின்னணியற்றவர்களாகவே இருந்தனர்.
இவர்களில் சிலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளர்களின் செல்வாக்குடன் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். என்றாலும் மக்கள் தேசிய விடுதலை இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்தும் விதமாக பெரும்பான்மையான வாக்குகள் அளித்து நான்கு உறுப்பினர்களை தெரிவு செய்திருந்தனர்.
தேர்தல் வரலாற்றில் மட்டக்களப்பில் தமிழ்மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கிய தேர்தலாக அமைந்திருந்தது. கனகசபை, தங்கேஸ்வரி,ஜெயானந்த மூர்த்தி , கிங்ஸ்லி இராசநாயகம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் நிறைவான வாக்குகளுடன் சம்பந்தன் ஐயா அவர்களும், துரைரட்ணசிங்கம் அவர்களும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர் ரவுப் ஹக்கீம்,காசிம் பாயிஸ் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலும்,பேரியல் அஸ்ரப் பொ . ச . ஐ . முன்னணியில் இணைத்து போட்டியிட்டதில் தே .ஐ .முன்னணி சார்பாக ALM .அதவுல்லா தெரிவாகினர். நாலு முஸ்லிம்கள் உட்பட பொ . ச . ஐ . முன்னணியில் ஒரு சிங்களவரும் ஐ .தே .கட்சியில் ஒரு சிங்களவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் க .பத்மநாதன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இத்தேர்தலில் கிழக்கு மக்கள் தமிழ்த் தேசிய உணர்வை ஆணித்தரமாக வெளிப்படுத்தியிருந்தனர். கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றத் தாக்கம் சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தவிர்த்துப் பார்க்கவேண்டிய கணக்கெடுப்பில் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மையை உறுதிப்படுத்தியிருந்தது .எமது தேசிய விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுத்த நிலையில் சோர்வடைந்து முடங்கிப்போயிருந்தனர்.
தமிழின அழிப்பின் உச்சக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் உலக மக்களின் மனிதபிமானத்தை தட்டியெழுப்பிக் கொண்டிருந்த நிலையில் 2010 ம் ஆண்டு தேர்தல் நடந்த போது நடைப்பிணமாக சொந்த மண்ணில் நிமிர்ந்து நிற்பதற்கு முடியாத எமது மக்கள் வாக்களிப்பில் அக்கறை கொண்டவர்களாக காணப்படவில்லை. இதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னடைவும் முக்கிய காரணமாகவிருந்தன.
இத் தேர்தலில் திருகோணமலையில் R .சம்பந்தன் ஐயா அவர்களும் ,மட்டக்களப்பில் சீ .லோகேஸ்வரன் ,பொன் .செல்வராசா ,அரியநேந்திரன் ,ஆகியோரும் அம்பாறை மாவட்டத்தில் ஐ .தே .கட்சி கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. H.M.M. ஹரிஸ்,காசிம் பாயிஸ் ஆகியோரும், பொ .ச .ஐ.முன்னணியின் கூட்டணியில் தேசிய காங்கிரஸ் சார்பில் A.L.M.அதவுல்லா தெரிவாகி மூன்று உறுப்பினர்கள் முஸ்லிங்கள் சார்பிலும் பொ .ச .ஐ.முன்னணியில் மூன்று சிங்கள உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் P.பியசேன தெரிவாகினர். மொத்தமாக இந்த ஆண்டுத் தேர்தலில் மூன்று முஸ்லிம்களும் ,நான்கு சிங்களவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்
2004 ம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மையானதாகும். கிழக்கு மண்ணில் தமிழ் ,முஸ்லிம் மக்களின் இருப்புக்கும், அவர்களின் கௌரவமான வாழ்வுக்கும், ஆபத்தை உண்டு பண்ணும் திட்டங்களுடன் சிங்களப் பேரினவாதம் தமிழ்த் தேசிய விரோதிகளை அணைத்துக்கொண்டு செல்கின்ற இன்றைய நிலையில் தாயகத்தைக் கூறுபோட்டு ,பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைக்கு நடக்கப்போகின்ற தேர்தல் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான பொதுவாக்கெடுப்பாக அமையவிருப்பதால் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உலகமய மாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனையில் உலகம் எதிர்காலத்தில் எடுக்கப் போகின்ற முடிவுக்கு இத் தேர்தலும் முக்கியமாக அமையப்போகின்றது. இத்தேர்தலில் கிழக்கின் பங்காளர்களாக இருக்கின்ற முஸ்லிம் மக்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து அவர்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய தேர்தலாகவும் அமைந்திருக்கின்றது.
எனவே தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக அளிக்கின்ற வாக்குகள் , தங்கள் உரிமைக்காக கொடுக்கின்ற ஆணையாக உலகம் எடுத்துக்கொள்ளும் என்பதை தமிழ் மக்கள் மறந்து விடலாகாது. சிங்களக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள முன்னாள் தமிழ்த் தேசியவாதிகளும், இந்நாள் தமிழ்த்தேசிய விரோதிகளுமான தமிழர்கள் பெற்றுக்கொள்கின்ற வாக்குகள் சிங்களக் கட்சிகளில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு வாய்ப்பாக அமையும் என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும். அபிவிருத்தி என்பது எமது இனத்தின் உரிமை, இதனை அண்டிப் பிழைத்துத்தான் பெறவேண்டியதில்லை.
எமது மக்கள் விடுதலைக்காக விலை மதிக்கமுடியாத உயிர்களைக் கொடுத்திருக்கின்றார்கள். இந்த உணர்வுகளும்,இழப்புகளும் எமது தன்மான உணர்வில் தங்கியுள்ளது. எனவே, பசப்பு வார்த்தைகளுக்கும், புரிந்து கொள்ளாத பதவி மோகத்திற்கும், அபிவிருத்தி என்ற அலங்கார வார்த்தைக்கும் சோரம்போகாமல், கிழக்கு எமது சொந்தமண், இந்த மண்ணை எந்தக் சிங்களக் கட்சிகளும் ஆளுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்ற உறுதியுடன் எமது மக்களின் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் அடங்கிப் போயிருக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலை ஆன்மாவை தட்டியெழுப்பும் போர்ப்பறையாக தமிழ்மக்களின் வாக்குகள் இருக்க வேண்டுமென்பது தாய் மண்ணில் விதைக்கப்பட்ட விடுதலை வீரர்களின் உயிரோடு ஒன்றித்து உணர்வுகளின் வெளிப்பாடாகும்.
கிழக்கில் முஸ்லிம்களின் தனித்துவம் பேணப்படவேண்டும். தமிழ், முஸ்லிம்கள் இணைந்து ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது உணர்வாளர்களின் கருத்தாகும். இதற்கமைய முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து முஸ்லிம்களிற்கு ஏற்பட்டுள்ள தனித்துவ ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
சிங்களப்பேரினவாதம் கிழக்கில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு தமிழ்த் தேசிய விரோதிகளுடனும் பதவி ஆசை பிடித்த முஸ்லிம்களுடனும் கூட்டுச் சேர்ந்துள்ளதை அவதானிக்கமுடிகின்றது. இந்த ஆபத்தை உணர்ந்து செயல்படவேண்டிய காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மூன்று மாவட்டங்களிலும் முழுமையாக வாக்களிப்பதன்மூலம் சுமார் 16 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.இதே போல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தமிழ்த் தேசியத்தின் எழுச்சியில் எடுக்கின்ற தேர்தல் முடிவாக அமையும்.
மட்டக்களப்பில் கி .துரைராசசிங்கம் தலைமையிலான வேட்பாளர்களையும், திருகோணமலையில் அறிவாளர் தண்டாயுதபாணி தலைமையிலான வேட்பாளர்களையும் அம்பாறையில் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சமின்றி தேர்தல்களத்தில் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த் தேசிய பற்றாளர்களையும் ஆதரித்து வாக்களித்து கிழக்கு மாகாணசபையை தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை முழங்கும் சபையாக மாற்றியமைப்போம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி ,
தமிழ் மக்களின் விடுதலையின் வெற்றி ,
தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட அரசியலின் வெற்றி.
தேனாடான்
spstrajah@yahoo.com

No comments:

Post a Comment