Translate

Thursday 30 August 2012

பிரபாகரன் ஆயுத இரைச்சல்களும் மரணக் கூச்சல்களும் நிறைந்த போர்ச் சூழலில் பகையை எதிர்த்துப் படையை நடத்தும் ஒரு மாவீரன் - திருமாவளவன்


 
தமிழ்நாட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விகடன் மேடைக்காக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.
''நீங்கள் கற்பனை செய்துவைத்திருந்த தலைவர் பிரபாகரனை, நேரடிச் சந்திப்பின்போது உணர்ந்தீர்களா?''
''மேதகு பிரபாகரன் அவர்கள் ஒரு மாபெரும் மக்கள் தலைவர் என்றாலும், இன விடுதலைக்கான படைத் தலைவர் என்பதால் அவ்வளவு எளிதாகச் சந்திக்க இயலாது என்றுநினைத்திருந்தேன். ஆனால், கனவா நனவா என்று வியக்கும் வகையில், மிடுக்கான அந்த ராணுவ உடையோடு அவரே வாசலில் நின்று எங்களை வரவேற்றதைக் கண்டு அதிர்ந்தும் வியந்தும் போனேன்.

'ஆயுத இரைச்சல்களும் மரணக் கூச்சல்களும் நிறைந்த போர்ச் சூழலில் பகையை எதிர்த்துப் படையை நடத்தும் ஒரு மாவீரன், சில மணித் துளிகளைக்கூட நமக்காக எப்படி ஒதுக்க முடியும்’ என்று எண்ணியிருந்த நிலையில், சில மணி நேரம் எங்களோடு இருந்தார் என்பதே எங்களது வியப்பை மேலும் விரிவாக்கியது.
குடும்ப வாழ்க்கை, பொது வாழ்க்கை, தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக நடப்புகள் இப்படி ஏராளமான, இயல்பான உரையாடல்கள். ஒவ்வொரு நொடிப் பொழுதும் நெருப்பு ஆறுகளைக் கடக்கும் போராட்ட வாழ்க்கையிலும் நகைச்சுவை மிகுந்த ஒரு போராளியாக எப்படி இவரால் இருக்க முடிகிறது என்று வியக்கும் அளவுக்கு அவரது உரையாடலின் பெரும் பகுதி அமைந்திருந்ததைக் கண்டு சிலிர்த்தேன்.
நண்பகல் உணவின்போது, அவரது வலப் பக்கம் அமர்ந்திருந்த எனது இலையில், அவரது இலையில் இருந்து கோழிக் கறித் துண்டு ஒன்றை எனக்கு எடுத்துவைத்தார். 'நான் கறி சாப்பிடுவது இல்லை அண்ணா’ என்று சொன் னதும், அடுத்த நொடியே 'இது என்ன சைவ சிறுத்தையா?’ என்று சொல்லி அனைவரையும் சிரிக்கவைத்தார்.
அவர் ஒரு மாபெரும் படைத் தலைவராக இருந்தாலும், இயல்பான மக்கள் தலைவராகவும் இருந்ததை உணர்ந்தேன்!''
''டெசோ மாநாட்டில், கருணாநிதி கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்போலப் பேசி இருக்கிறீர்களே... வெளி உலகத்துக்கு எல்லாம் சரி, அன்றைய இரவு தூங்கப்போகும் முன் மனம் உறுத்தவில்லையா?''
''ஈழ விடுதலை ஆதரவு, விடுதலைப் புலிகள் ஆதரவு என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை. அதை நீங்கள் அறிந்துகொள்ளும் அளவுக்கு நாங்கள் செயல்படவில்லை என்பதை எண்ணி வருந்துகிறேன்.
அதேவேளையில், ஈழ விடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பது தி.மு.க-வின் கொள்கை என்பதையாவது அறிந்துவைத்திருக்கிறீர்களே... அதற்காகப் பாராட்டுகிறேன்.''

No comments:

Post a Comment