விசாரணைக்கு என காலிக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் அங்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக காலி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சுந்தரம் சதீஷ்குமார் எனும் தமிழ் அரசியல் கைதி, வழக்கு முடிந்த நிலையில் காலி கராபிட்டிய மருத்துவமனையில் கோமா நிலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கையில்
கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நிமலரூபன், டில்ருக்சன் ஆகியாரை அடுத்து தற்போது சதீஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை, தமிழ் அரசியல் கைதிகளை பரிதாப நிலைமையினை படம்பிடித்து காட்டுகின்றது. கொழும்பிலிருந்து நல்ல நிலைமையில் வழக்கு விசாரணைக்காக காலிக்கு அழைத்து செல்லப்பட்ட இந்த கைதி, எவ்விதம் சுயநினைவற்ற நிலைமையில் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதுபற்றி குழப்ப நிலை நிலவுகின்றது.
அவரது வழக்கை முன்னெடுக்கும் சட்ட மற்றும் மனிதவுரிமை நிறுவனத்திற்கும் நான் இதுபற்றி அறிவித்துள்ளேன். கொடிகாமத்தை பிறப்பிடமாக கொண்ட சதீஷ்குமாரின் மனைவி வவுனியாவை சேந்தவர். மக்கள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினரும், எம்பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரனின் கவனத்திற்கு, கைதியின் மனைவி இது தொடர்பில் தகவல்களை அறிவித்த நிலையிலேயே, இந்த விடயம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக தகவல்களை நாம் எதிர்நோக்கி உள்ளோம்.
அவரது மனைவியுடன் எனக்கு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. சதீஷ்குமாருக்கு வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டு கட்டு போடப்பட்டுள்ளது. அவர் கீழே விழுந்ததால் இது ஏற்பட்டதாக அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக, கைதியின் மனைவி என்னிடம் தெரிவித்தார். சதீஷ்குமாருக்கு மூளையில் நரம்பு தொடர்பான பிரச்சினை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் கடந்த வாரம் அவர் நலமாக இருந்ததாகவும் அவரை தான் சென்று பார்த்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார் என மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதேவேளை சதீஷ்குமார் கடந்த இரு வருடங்களாக விளக்கமறியலில் இருந்தவர் எனவும் அவர் மீது நுவரெலியா, கொழும்பு, புத்தளம், காலி மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பல நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் உள்ளன எனவும் காலி சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
சதீஷ்குமாருக்கு 10 வயதில் ஒரு பிள்ளை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சதீஷ்குமார் கொடிகாமத்தில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் இதுவரை எந்தவொரு குற்ற அறிக்கையும் அவர் மீது பதியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. காலியில் தனது கணவனை கவிதா பார்க்க சென்ற போது சிங்கள மொழியில் எழுதப்பட்ட பத்திரங்க சிலவற்றை வழங்கி இவற்றில் கையெழுத்து போடுமாறு காவல்துறையினர் அவரை மிரட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment