Translate

Saturday, 8 September 2012

வாழைச்சேனையில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிள்ளையானின் அடியாட்கள் தாக்குதல்

வாழைச்சேனையில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிள்ளையானின் அடியாட்கள் தாக்குதல்
 
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாசிவந்தீவு கிராமத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் பரசுராமன் சிவநேசனின் ஆதரவாளர் இருவர் நாசிந்தீவு கிராமத்திற்கான வாக்கெடுப்பு நிலையத்திற்கு முகவராக சென்றுள்ளனர்.

இவர்கள் மோட்டார் சைக்கிள் மூலம் சென்றபோது அவ்விடத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் இணைப்புச் செயலாளராக கடமை புரியும் பேத்தாழையைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தவேந்திரராஜ் (ரமேஷ்) மற்றும் அவரது சக உறுப்பினர்கள் சகிதம் வருகை தந்து மோட்டார் வாகனத்தில் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர் இருவரையும் தாக்கி, அவர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து முற்றாக எரித்துள்ளனர்.

இதை கேள்வியுற்ற மக்கள் அவ்விடத்திற்கு சென்று அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் இவர்கள் வெளியேறியுள்ளனர். தாக்கப்பட்டவர்கள் பயத்தின் நிமிர்த்தம் காட்டுக்குள் ஓடி ஒழிந்திருந்தனர்.

அதன் பிற்பாடு நாசீவந்தீவு கிராமத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அடியாட்கள் வருகை தந்து நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க செல்ல கூடாது சென்று கூறி அச்சுறுத்தியதுடன், கிராம மக்கள் பலரை பொல்லுகளாலும், கல்லுகளாலும் தாக்கியுள்ளனர். பயமடைந்த கிராம மக்கள் அருகில் உள்ள காடுகளில் ஓடி ஒழித்துக் கொண்டனர். அவ்விடத்திற்கு விரைந்து சென்று ஏரிவுற்ற மோட்டார் சைக்கிளை பார்வையிட்டதுடன், தாக்கப்பட்ட மக்களிடம் சென்று சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டேன்.

அத்துடன் நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற வழிவகைகளை மேற்கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஊடாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு இவ்விடயமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுதல் விடுத்தேன்.

அதன் பின்னர் காட்டுக்குள் ஒழிந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர் மற்றும் வாக்கெடுப்பு நிலைய முகவர் ஆகியோரை அங்கு வருகை தந்த கபே அமைப்பினர் உதவியுடன் அழைத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய சென்றோம்.

அங்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பஞ்சலிங்கம் தவேந்திரராஜ் (ரமேஷ்) பொலிஸ் ஐபியுடன் உரையாடிக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அங்கு இல்லை. இவரது முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரிய போது, பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு பின் இருவரையும் சிறையில் இட்டு திங்கட்கிழமை நீதிமன்றில் நிறுத்துவதாக கூறினார்.

ஆனால் நான் பொலிஸ் பகுதியில் இருந்து வெயியேறி பின்னர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது அரசியல் பலத்தை தமது இணைப்புச் செயலாளர் பஞ்சலிங்கம் தவேந்திரராஜை அழைத்து சென்றதாக அறிகின்றேன்.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உடன் தொடர்பு கொண்டு கிராம மக்கள் தாக்கப்பட்டதற்கு கட்டாயம் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். குற்றத்தை மறைக்க யார் நடவடிக்கை மேற்கொண்டாலும் இம்மக்களுக்கு ஏற்பட்ட துன்பநிலைக்கு முடிவுகளை நீதிமன்றம் வரை செல்வேன்.

அத்தோடு கல்குடா தொகுதியில் பல இடங்களில் இன்று கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினதும் அவரது அடியாட்களினதும் அச்சுறுத்தல் செயற்பாடு இடம்பெற்றுள்ளது. அநேகமான வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னாள் இவர்களது அடியாட்கள் குழுவாக நின்றதை அவதானிக்க முடிந்தது. சில இடங்களில் பணம்,பொருட்கள்,மதுபானங்கள் பரிமாற்றப்பட்டுள்ளனர்.

மக்கள் சில இடங்களில் அச்சத்துடன் வாக்களித்ததை அவதானித்தோம். முடிவை வைத்தே தேர்தலில் எந்தளவுக்கு ஜனநாயகத் தன்மை பேணப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இதேவேளை, கல்குடா நாமகள் வித்தியாலயத்திற்கு வாக்களிப்பு நிலைய முகவராக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக சென்ற இருவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடியாட்களால் தாக்கப்பட்டதுடன் அவர்கள் கொண்டு சென்ற ஆவணங்கள் பறித்துச் செல்லப்பட்டது.

இவ்விடயமாக உரிய இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டதுடன் கல்குடா பொலிஸ் நிலையத்தில் தாக்கப்பட்ட பெண் பிள்ளை சார்பாக முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு மீண்டும் இரு வாக்களிப்பு முகவர்களுக்கும் தேவையான ஆவணங்களை வழங்கி வாக்களிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைத்தேன்.

பல இடங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களை உடனுக்குடன் உரிய இடங்களுக்கு சென்று தடுத்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment