Translate

Saturday, 8 September 2012

ஈழத்தமிழர்களின் தாயகத்தை கூறுபோடும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியான வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை திட்டமிட்டு கூறுபோடுவதற்காக நடைபெறும் கிழக்குமாகாணத் தேர்தல் இன்று  சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இக்காலகட்டத்தில் தாயக விடுதலைக் கொள்கையில் அதீத உறுதியுடன் செயற்பட்டு வரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் இத் தேர்தலின் முடிவு எப்படி அமைந்தாலும்   எமது நிலைப்பாட்டை தாயக மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.


60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது இனவழிப்பு நடாத்திக் கொண்டுவரும் சிங்கள அரசினதும் சதி நடவடிக்கைதான் இந்த கிழக்குமாகாண சபைத் தேர்தலாகும்.

தமிழீழம் என்னும் கோட்பாட்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்று 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலை புறக்கணித்து தமிழீழ கொள்கையில் உறுதியோடு தனது நிலையை காண்பித்தது. ஆனால், இன்று நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயனற்ற கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டியிட்டு இத் தேர்தலை அங்கீகரிப்பதன் ஊடாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனும் தாயகக் கோட்பாட்டில் இருந்து நழுவும் போக்கையே சுட்டிக்காட்டுகின்றது. அத்தோடு, நடைபெறும் கிழக்கு மாகாணத் தேர்தல் தமிழீழத்திற்கான பாரிய காய்நகர்த்தலென்றும் இத் தேர்தல் தமிழீழத்திற்கான கருத்துக்கணிப்பு என அமையலாம் என்றும்  திரிபுபடுத்தி, மேலும் சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகள் இன்று அமைச்சர்களாக இருக்கும் வேளையில் கூட சர்வதேச சமூகத்தால் அவர்கள் என்றுமே தமிழர்களின் பிரதிநிதிகள் என்று  ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அவர்களை அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளாக வருவதற்கு  வாய்ப்பு வழங்கக்கூடாது எனவும் முரண்பட்ட கருத்துகளோடு ஒரு மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி, அதன் உண்மை நிலவரத்தை மக்களுக்கு எடுத்துக்கூறத் தவறியுள்ளது.

தாயகத்தில் மிகுந்த ஆபத்தான சூழ்நிலைக்குள் இருந்துகொண்டும் தேசியக் கொள்கையில் அசைக்கமுடியாத நம்பிக்கையோடு தமது நிலைப்பாட்டை சில அமைப்புக்கள் வெளிப்படுத்தி இருந்தனர். அவர்களின் துணிவான இச் செயற்பாட்டுக்கு நாம் தலைவணங்கும் நேரத்தில், புலம்பெயர்ந்து எவ்வித அழுத்தங்களும் அற்ற நிலையில் ஒரு சில தமிழ் அமைப்புகள் கிழக்கு மாகாணத் தேர்தல் விடையமாக வெளியிட்டிருக்கும் அறிக்கைகள் எமக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றன. தமிழீழம் என்பதன் கொள்கையில் அவர்கள் எடுத்திருக்கும் மென்போக்கை கோடிட்டு காட்டுகின்றது. 

ஈழத்தமிழரின் தாயக நிலப்பரப்பு சிறிலங்கா அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுவருவது, தொடர்ந்து நடைபெற்றுவரும் முறைகேடாகும். அத்துடன், தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்பு சக்தியின் நிர்வாக அலகுகள் ஈழத்தமிழர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது கிடையாது. 

சிறிலங்கா அரசாலோ, அதன் ஆக்கிரமிப்பு சக்திகளாலோ வன்கவரப்பட்ட நிலப்பரப்புகளுக்குள் அதன் சுய இலாபங்களுக்காக நடத்தப்படும் எந்தவிதமான தேர்தல்களும் அதிகாரவர்க்கத்துக்கு சேவைசெய்வதற்கு மட்டுமே தவிர வேறெந்த நன்மையும் கிடையாது.

இவை, தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிட்ட இனப்படுகொலைக்கான நீதியை கேட்பதைக் கைவிடும் வகையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதாற்காக வடிவமைக்கப்பட்ட வித்தையாகும். எனவேதான், இவ்வாறான தேர்தல்கள் ஈழத்தமிழ்த் தேசியத்தால் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன.

முள்ளிவாய்க்கால் பேரவலம் கடந்து 3 ஆண்டுகள் ஆகியும்; ஈழத்தமிழர்கள் ஆகிய எமக்கு சர்வதேச சமூகம் எவ்விதமான ஆதரவையும் வழங்கவில்லை. மாறாக என்றும் இல்லாதவாறு சிங்கள பௌத்த இனவெறி அரசு தமிழர்கள் மீதான தனது அடக்குமுறையைத் தீவிரமாக முன்னெடுத்துவருகிறது.

தனித்தமிழீழம் எனும் உறுதிப்பாட்டுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது உருவாக்கத்துக்கான நோக்கத்தை மீள் நினைவுபடுத்தி உலகத் தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை அடைய தனது இராஜதந்திர நகர்வுகள் எனும் போர்வையைக் கலைத்து, தமிழீழப் பாதையை நோக்கி பயணிக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம். 


தலைவரின் சிந்தனையிலிருந்து : 

'கொண்ட கொள்கையில் நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின் நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடமுள்ளவரை, எமது இலட்சியப் பயணம் வெற்றியில் முடியுமென்பது நிச்சயம்,' 

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன்.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.'

No comments:

Post a Comment